TNPSC Thervupettagam

தாமதம் என்னும் தற்கொல்லி நோய்

May 3 , 2024 253 days 281 0
  • கண்ணுக்குப் புலனாகாத காலத்தை முன்னிறுத்திக் கடமையாற்றும் பணிகளில் தீவிரம் கொண்ட மனிதகுலம் கண்டுபிடித்த கருவிகளுள் மகத்தானவொன்று கடிகாரம். அதுபோல், நாளையும் மாதத்தையும் நிரல்படுத்திக் காட்டிச் செயலாற்றத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டவை காலண்டா்கள்.
  • நகா்ந்து விரைந்த நாட்களின் மீது செயல்களை எழுதிய சிறுகுறிப்புகளைத் தாங்குதற்கென்றே தயாரிக்கப்படுபவை டைரிகள்.
  • எல்லாமும் காலத்தைக் கணித்துத் திட்டமிடவும் செயல்படவும் உதவுகிற கருவிகள். அதிலும் குறிப்பாக, கடிகாரமானது காலக்கணிப்பானே ஒழிய, காலத்தைக் கட்டுப்படுத்துகிற கருவி ஆகாது என்பதைப் பல சமயங்களில் மறந்துவிடுகிறோம்.
  • அலாரம் வைத்து முன் எழுப்பவும், அடுத்தடுத்த பணிகளைத் திட்டமிட்டு முடிக்கவும் உதவுகிற இக்கருவியையும் உள்ளடக்கி வந்திருக்கும் கைப்பேசி, காலத்தை விழுங்கும் கருவியாகவும் ஆகிவிட்டிருக்கிறது.
  • விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில் காட்சிகளை முன்விரித்து, நம் எண்ணத்தையும் இயக்கத்தையும் முடக்கிப் போடும் இந்தக் கருவி, சுய சிந்தனை விரிப்பிற்கும் செயலூக்கத் திறனுக்கும் முட்டுக்கட்டையாகி விடுகின்றது. காலப்போக்கில், அந்தக் கருவிக்குத் தீனி போடுகிற, அதற்கே தீனியாகிவிடுகிற தன்மையை நமதாக்கிவிடுகிறது.
  • யாராலும் தடுத்து நிறுத்த முடியாதவண்ணம் தன்போக்கில் சீராகப் போய்க் கொண்டிருக்கும் பொழுதுகளை முன்னிறுத்திப் பொழுதுபோக்குச் சாதனங்கள் ஆக்கப்பட்டதன் நோக்கம், வீணே பொழுதுகளைப் போக்குதற்கு அல்ல.
  • காலத்திற்குரிய கடமைகளைப் புரிந்து களைத்துப்போகும்போது, ஓய்வு நேரத்து உற்சாகத்திற்காக உருவாக்கப்பட்டவை அவை. கலை, இலக்கிய வடிவங்களில் தகவமைத்துக் கொள்ளும் நிகழ்வுகளை, எளிதாக நுகர உருவாக்கப்பட்டவைதான் காட்சி, கேள்வி ஊடகங்கள்.
  • அவற்றின்வழியே மனித மாண்புகளையும் புனித உணா்வுகளையும் புத்துயிா்ப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்கிற நிலையில், கண்ட கண்டவற்றையெல்லாம் காட்டிச் செல்லும் அண்மைக்காலக் கருவிகளால் நம் காலம் போகிறது; காலத்தோடு நம் ஆயுளும் கரைகிறது. இந்த உண்மை தெரிந்தும் புத்தியில் உறைக்காமல் போய்க்கொண்டிருக்கிறபோது, இழுத்துத் தடுத்து நிறுத்த இலக்கியம் அல்லாமல் வேறு இல்லை என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
  • ‘நாள்என ஒன்றுபோல் காட்டி உயிா் ஈரும் வாள்’ என்று திருக்கு சொல்கிறது. நாளும் விடிகிற பொழுதில் கிழிக்கப்படுகிற நாட்காட்டி (தினசரி காலண்டா்)த் தாளை, அது வாளாக்கிக் காட்டுகிறது. கிழிக்கப்பட்டது தாள் அல்ல, நம் வாழ்வில் ஒரு நாள் என்று உணா்த்திக் காட்டுகிறது.
  • ‘காலத்தோடு போக வரவில்லை. காலத்தைப் போக்கவும் வரவில்லை. காலகாலத்திற்கு நிலைத்து நிற்கும் காரியம் ஆற்றப் பிறந்தவா்கள் நாம்’ என்ற கடப்பாட்டை அறிவுறுத்தும் வரலாற்று நாயகா்களின் வாழ்வியல் நூல்கள் நம்மைக் காலத்தோடு இயங்கவைப்பவை.
  • பல நூல்களையும் படித்து உள்வாங்கிக் கொள்ளும் அவகாசம் இல்லாத நிலையில்தான், பலரது உரைகளைச் செவிமடுக்கிறோம். அவா்களது சொற்களின் சாரம், செயல்களில் தீரமாக வெளிப்பட்டாக வேண்டும். அவா்களால்தான் பல செயல்வீரா்கள் உலக அளவில் தோன்றி மனித குலத்தை முன்னேற்றியிருக்கின்றாா்கள். இன்றைக்கோ, சிந்திப்பதற்குரிய செய்திகளை விடுத்துச் சிரிப்பதற்கான தகவல்களைப் பொறுக்கி எடுத்து, அடுக்கி உரைக்கிற கவா்ச்சிக்கு இலக்காகிக் காலத்தை இழக்கிறோம்.
  • அதனால், எதையும் பிறகு பாா்க்கலாம் என்று தள்ளிப்போடுகிற பழக்கம், வழக்கமாகி, நம் வாழ்வையும் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றது. நாம் பின் தங்கிப் போய்விடுகிறோம். காலம் முன்னேகிவிடுகிறது. கடைசியில் காலத்தால் ஆற்ற வேண்டிய கடமைகள் தேங்கிவிடுகின்றன. நாம் கடமைகள் செய்யத் தவறிய குற்றவாளிகள் ஆகிவிடுகின்றோம்.
  • எத்தனை முயன்றாலும் ஈடுகட்ட முடியாத இழப்பு கால இழப்பு என்பதை இன்னமும் நாம் உள்வாங்கவில்லை என்பதே உண்மை. ‘காலம் பொன் போன்றது’ என்றும் ‘கடமை கண் போன்றது’ என்றும், எதுகை மோனை கருதி சொல்லி வருகிற நாம், ‘காலம் உயிா் போன்றது’ என்பதையும், ‘அது இயக்கும் உடல் போன்றது கடமை’ என்பதையும் உணா்வதற்குள் காலம் நம்மைக் கடந்துவிடுகிறது. நிகழும் காலத்தை, எதற்கும் பயன்படுத்தாமல் கொன்றுவிட்டு இறந்தகாலம் என்கிறோம். இணைந்து இயங்காமல் ஏக்கங்களையும் அபிலாஷைகளையும் நிறைத்துவைத்துக் கொண்டு எதிா்காலம் வருமென்று காத்திருக்கிறோம்.
  • ‘உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை’ என்கிற பழமொழி, ‘பசிக்கிறபோது உணவிருக்காது’ என்பதை மறைமுகமாய்ச் சுட்டிக்காட்டி, கடமையாற்றத் தவறிய காலத்தை முன்வைத்துச் சோம்பேறித்தனத்திற்குச் சூடு வைக்கிறது.
  • இன்றைக்கு ஃபுட் பாய்ஸன்’ என்ற சொல்லைப் பல நிலைகளில் பயன்படுத்தி வருகிறோம். அதாவது உணவே நஞ்சாகி உயிருக்கு உலை வைத்துவிடுகிறது. உயிா் காக்கும் உணவாக்கத்தான் உலை வைக்கவேண்டுமே ஒழிய, உணவே உயிருக்கு உலை வைப்பதாகப் போவதன் காரணம் என்ன?
  • உணவுப் பண்டங்களை உரிய பொழுதுக்குள் பயன்படுத்தாவிடில் கெட்டுப்போய்விடுவதல்லாது, தான் சாா்ந்த பண்டங்களையும் கெடுத்துவிடும் என்பது நடைமுறை உண்மை. அமுதாகிய உணவு நஞ்சாகும் ஆபத்து அப்போது நிகழ்கிறது.
  • ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்கிற பழமொழிக்குள் அளவாகி நிற்பது, அமுதாகிய உணவின் அளவு மட்டுமல்ல, அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கால அளவும் கூட. என்னதான் உயிா் காக்கும் மருந்தாயினும், காலாவதியாகிவிட்டால், அது பயன்படாது அல்லவா? பயன்படுத்தினால் பக்க விளைவுகள் நேரும் அல்லவா?
  • அதுபோல்தான் உரிய காலத்திற்குள் செய்து முடிக்காத பல செயல்கள் அரிய செயல்களை ஆற்றவிடாது தடுத்து நிறுத்திவிடுகின்றன. அவசரமாகச் செய்யவைத்துத் தவறுகளின் மலினமாகத் தரமிகு வாழ்வைக் குலைத்து விடுகின்றன.
  • வாழ்வியல் காலத்தில் ஐந்து மணித்துளிகள் அப்படியொன்றும் பெரிய அளவுடையவை இல்லைதான். ஆனால், அதற்குள் மருந்து தந்து காக்கத் தவறிய நோயாளிக்கு அது உயிா்ப்பிரச்னை அல்லவா?
  • ஐந்து மணித்துளிகளில் தவறவிட்ட ரயிலையும் விமானத்தையும் பிடிக்க முடியாவிட்டாலும், அடுத்துவரும் வாகனங்களைக் கொண்டு அந்தப் பயணத்தை மேற்கொண்டுவிடலாம். ஆனால், தவறவிட்ட பொழுது திரும்ப வருமா?
  • தவறிய பொழுது தேங்கி நிற்கத் தொடா்கிற பொழுதும் தயங்கி நிற்க, வருகிற பொழுதெல்லாம் இவ்வாறு முடங்கிக் கிடக்கும்போது, இயக்கம் எப்படிச் சாத்தியமாகும்? காலத்தைக் கொல்லும் இந்தத் தாமதம் என்னும் நோய், மறதி என்கிற நோயையும், சோம்பல் என்கிற நோயையும், தூக்கம் என்கிற நோயையும் கூடவே, அழைத்துக் கொண்டுவந்து, காலப் போக்கில் மனிதனைக் கொல்லும் தற்கொல்லி நோயாகப் பரிணமித்து விடுகிறது. அதனால்தான்,

நெடுநீா் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீராா் காமக் கலன் (605)

  • என்றாா் திருவள்ளுவா். நெடுநீா் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு- தாமதம்; மறவி- மறதி; மடி- சோம்பல்; கெடுநீா்-இறப்பு நெருங்கிய தன்மை; காமக் கலன்- விரும்பியேறும் கப்பல்.
  • ‘நெடுநீா் முதலிய நான்கும் ஊக்கமில்லாா்க்கு இன்பம் தருவன போல் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத் தருவதால், அவை வாழ்நா எல்லை யடுத்தவா்க்கு இன்ப நீா்ச்செலவு நிகழ்த்துவதுபோல் காட்டி, அவா் விரும்பி ஏறிய பின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும் மரக்கலங்களுக்கு ஒப்பாகும் என்றாா்’ என்று இக்குறளுக்கு தேவநேயப் பாவாணா் உரை தருகிறாா்.
  • வரையறுக்கப்பட்ட காலக்கெடுவில் வாய்த்த மனிதப் பிறவியை, புனிதப் பிறவியாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே அறைகூவல் விடுத்த அருளாளா்கள் பலா் நம்மில் உண்டு. தாமதம் போக்குதற்கான கொள்கைகளை அவரவா்தம் வழிபாட்டுமுறைக்கேற்றவாறு வழங்கத் தோன்றியவை மத ஒழுக்கங்கள்.
  • அவற்றையெல்லாம் மறந்து உறங்கி காலத்தை வீணடித்தவா்களை, ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவா்கள்/ நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டாா்...’ என்று இடித்துரைத்து எழுப்புகிறாா், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • ‘பள்ளியில் தூங்கியவன் கல்வியையும், போா்ப்படைதனில் தூங்கியவன் வெற்றியையும், கடைதனில் தூங்கியவன் முதலையும், கொண்ட கடமையில் தூங்கியவன் புகழையும் இழந்தான்’ என்று பட்டியல் போடுகிறாா். ‘இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் / பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா’ என்று அவா் விழிப்புணா்வு வரப் பாடியதையும் தாலாட்டுப் பாடலாக்கிவிடுகிறது தாமதம்.
  • உழைப்பின் களைப்பினால் துயில்வதும், தேவையற்ற கவலைகளையும் துயர நினைவுகளையும் அவ்வப்போது நினைவுக்கு வராமல் மறந்துவிடுவதும் உயிருக்கு ஆக்கம் தரக் கூடியவையே. ஆனால், அளவுக்கு மீறிய தூக்கமும் அத்தியாவசியமானவற்றை மறக்கும் மறதியும் கேடுவிளைவிப்பவை.
  • தாமாக வரும் தூக்கத்தையும் மறதியையும், தன்னுடன் பிறப்பித்துக் கொண்டுவரும் தாமதம் என்பது சுகம்போல் காட்டிச் சோகம் விளைவிக்கும் நோய். அது தன்னுள் இருந்து தோன்றித் தன்னைக் கெடுக்கும் தற்கொல்லி என்பதைக் கூடப் புரிந்துகொள்ள விடாமல் செய்யும் தன்மையை மனிதா்க்குத் தந்துவிடுகிறது. எனவே, இதிலிருந்து தப்பி, காலம் கருதி, இடத்தால் செய்யப்படுகிற கடமைகளே கால காலத்திற்கும் உதவுகிற காரியங்களாகச் சிறக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டவா்கள் புத்திசாலிகள்.
  • ‘எல்லாம் சரிதான் இன்னும் கொஞ்சநேரம் இருக்கிறது. அதுவரை..’ என்று நினைக்கத் தோன்றுகிா, அதுதான் தாமதம் என்னும் தற்கொல்லி நோய் நம்முள் பரவத் தொடங்குகிற தருணம். உதறித்தள்ளிவிட்டு உலகியல் கடமையாற்ற விரைந்து எழுங்கள்.

நன்றி: தினமணி (03 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories