TNPSC Thervupettagam

தாய்ப்பால் எனும் அருமருந்து!

August 1 , 2019 1983 days 1307 0
  • பெற்றோருக்கு ஆற்றல் சேர்த்து தாய்ப்பால் ஊட்ட உதவவேண்டும்; இன்றும் எதிர்காலத்துக்கும்... என்பது இந்த ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக் கருத்தாகும்.

முதல் உணவு

  • பிறந்த குழந்தையின் முதல் உணவும் முதல் உணர்வும் தாய்ப்பால்தான். சமூக, பொருளாதார மாற்றங்களால் உலகளவில் தாய்ப்பால் தரும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது என்பது உண்மை. பெண் கல்வி, பெண்களின் பணி வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் போன்றவை காரணமாக, தாய்ப்பாலூட்டி, குழந்தையின் எதிர்கால நல்வாழ்வுக்கு வலுவான அடித்தளம் அமைப்பது என்பது குறைந்து விட்டது. இதை ஏற்க முடியாது.
  • ஏனெனில், எதிர்கால சமுதாயத்தின் தூண்கள் குழந்தைகள். குழந்தையையும், பணியையும் ஈடு கொடுக்க தாய்க்கும், பெற்றோருக்கும் உதவுவது மருத்துவப் பணியாளர்கள், சமுதாயத்தினரின் தலையாய கடமை.
    தாயை மட்டுமல்ல, தந்தையையும் தாய்ப்பால் கொள்கையில் ஈடுபடுத்த வேண்டும். ஏனெனில் கணவனின் முழு ஆதரவு இருந்தால் மனதளவில் ஊக்கத்துடன் தாய் பாலூட்டுவாள். பாலூட்டும் தாய்க்கு அனைவரும் உதவுவது அவசியம். வீட்டில் உள்ளோர் குழந்தை தொடர்பான வேலைகளைப் பகிர்ந்து செய்து குழந்தையுடன் தாய் அதிக நேரம் இருக்கும்படி உதவ வேண்டும்; இது தாய்க்கும் குழந்தைக்கும் பாசப் பிணைப்பை அதிகரிக்கும்.

பிரச்சினைகள்

  • பணிக்குச் செல்லும் தாய்க்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரவேண்டும். பணி செய்யும் இடத்தில் தாயின் வேலையை மற்ற பணியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். காப்பகத்தில் இருக்கும் குழந்தைக்குத் தாய் அடிக்கடி சென்று பாலூட்ட மற்றவர்கள் உதவியும் ஊக்கமும் அளிக்க வேண்டும். தாய்க்கு பதற்றம் குறையும்; பால் கட்டுதல், மார்பகங்கள் கனத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
  • மையக் கருத்தின் அடுத்த வரியான இன்றும் எதிர்காலத்துக்கும்... என்பது முக்கியமானதாகும். பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால் இப்போதும் வருங்காலத்திலும் பல நன்மைகள் கிடைக்கும்; குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கு, சமுதாயத்துக்கு என நல்லவை பட்டியல் நீளும்.
    தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடலில் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. குழந்தையின் உடல், மன வளர்ச்சி சீராகிறது.

ஊட்டச்சத்து

  • குழந்தைக்குத் தேவையான நீர்ச் சத்து உள்பட அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பால் மூலம் கிடைக்கிறது. பாலூட்டுவதால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் சளி சம்பந்தமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு; மேலும், செயற்கை பால் வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள், அதனால் உருவாகும் காற்று மாசு, தண்ணீரின் தேவை, பால் பாட்டில்களின் ரப்பர் நிப்பிள்களின் தூய்மையைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை தடுக்கப்படுகின்றன.
  • குழந்தைக்கு எதிர்காலத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்புச் சத்து அளவு பிரச்னை உள்ளிட்டவை வரும் வாய்ப்புகள் குறையும். தாய்ப்பாலில் உள்ள உயிரி வேதியியல் பொருள்கள் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • பாலூட்டுவதால் தாயின் எடை சீராகிறது. தாய்க்கு கர்ப்பப் பை, மார்பக புற்றுநோய் உள்ளிட்டவை வரும் வாய்ப்புகள் குறையும். தாய்ப் பாலூட்டும் முதல் 6 மாதங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
    குறிப்பாக, பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவதால் 10 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம். தாயாகும் அனைவரும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினால் சுமார் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதையும், மார்பகப் புற்று நோயால் ஆண்டுக்கு சுமார் 20,000 பெண்கள் இறப்பதையும் தவிர்க்கலாம்.
    தாய்ப்பால் ஊட்டுவதால் செலவு மீதமாகி, சேமிப்பாக மாறும். அறிவான, நல்ல உடல் நலத்துடன் வளரும் குழந்தைகள் வீட்டுக்கு, சமுதாயத்துக்கு, நாட்டுக்கு சொத்து.
  • குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் அளிக்க வேண்டியதற்கான முயற்சியை வளர் இளம் பருவத்திலேயே தொடங்க வேண்டும். தாய்ப்பாலின் முக்கியத்துவம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டு இரு பாலருக்கும் கற்றுத் தரவேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவியர், வளர் இளம் பருவத்தினர் என அனைத்து வயதினைரையும் ஈடுபடுத்தவேண்டும்.

நன்மைகள்

  • குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது பற்றிய சரியான விளக்கங்களையும், தாய்ப்பாலின் பலவித நன்மைகளை தாய்-தந்தை இருவரும் அறிந்து கொள்வது அவசியம்.
  • குழந்தை பிறந்து உரிய கால விடுப்புக்குப் பிறகு, மனைவி வேலைக்குத் திரும்பும்போது அவளது பணியிடத்தில் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகம், தாய்ப்பாலைச் சேமிக்கும் வசதிகள் பற்றிய விவரங்களை நிர்வாகத்தினரிடம் கேட்டு தெரிந்து கொண்டு மனைவிக்கு கணவன் உதவ வேண்டும்.
  • தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பவுடர் பால் உள்ளிட்ட வகைகளுக்கு எதிராக நடைப் பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தன்னார்வ அமைப்பினர் இந்தத் தாய்ப்பால் வாரத்தில் ஏற்பாடு செய்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

நன்றி: தினமணி (01-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories