TNPSC Thervupettagam

தாய்ப்பால்: நோய்த் தடுப்பு அருமருந்து

August 3 , 2024 161 days 135 0
  • குழந்தைக்குப் பாதுகாப்பை வழங்குவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளைத் தாய்ப்பால் அளிக்கிறது. ஈடு இணையற்ற மகத்துவம் கொண்ட தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் (ஆகஸ்ட் 1 - 7) ‘உலகத் தாய்ப்பால் வார’மாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் உணவு:

  • குழந்தைக்கான முதல் உணவு தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும் அறுவைசிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
  • குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நலக் கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி தாயின் பால்சுரப்பைப் பொறுத்துக் குழந்தைக்கு மூன்று வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். சீம்பால் தொடங்கி மூன்று வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை நோய்க்கிருமிகள் எளிதில் தாக்காது.

நோய்களில் இருந்து பாதுகாப்பு:

  • கிருமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, நெஞ்சுச் சளி, காது வலி/சீழ் பிடித்தல், மூளைக் காய்ச்சல் போன்றவை வராமல் தாய்ப்பால் தடுக்கிறது. குழந்தை பிறந்து 28 நாள் முதல் ஒரு வயது வரை ஏற்படும் குழந்தைப் பருவ உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.
  • தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், குழந்தையின் உணவுக்குழாயில் பாதுகாப்புக் கவசமாகப் படிந்துவிடுகின்றன. இதனால், உணவு சார்ந்த ஒவ்வாமை ஏற்படுவது குறைகிறது.
  • ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரமாகத் தாய்ப்பால் செயல்படுகிறது. இது குழந்தைக்குத் தேவையான விட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள் போன்ற அனைத்து ஊட்டச் சத்துகளையும் வழங்குகிறது. குழந்தைகளால் இவற்றை எளிதில் ஜீரணிக்க முடியும். பிறந்த முதல் சில நாள்களில் சுரக்கும் மஞ்சள் நிறப் பாலில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளதால் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைக்குப் பலன் கிடைக்கும்.
  • தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் உள்ளன. இது வைரஸ், பாக்டீரியத் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. மேலும், தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் தாய் – சேய் இடையேயான கண் தொடர்பு குழந்தை பாதுகாப்பாக உணர உதவுகிறது.

தாய்மார்களுக்கு...

  • தாய்ப்பால் கொடுப்பதால் கருப்பை சுருங்கி இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பும். இது பிரசவத்திற்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதைக் குறைக்கிறது. தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கிறது.
  • தாய்ப்பால் கொடுப்பது, ஆற்றல் மிகுந்த செயல்முறை. ஏனெனில், பால் உற்பத்திக்கும் சுரப்புக்கும் கூடுதல் கலோரிகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாக, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் எடை அதிகரிப்பு எளிதில் குறைய வாய்ப்புள்ளது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு, ஆஸ்டியோ போரோசிஸ், இடுப்பு எலும்பு முறிவுகள் ஆகியவை பிற்காலத்தில் ஏற்படும் அபாயம் குறைவு.

தாய்ப்பால் சுரக்க...

  • பிறந்த குழந்தை மார்புக் காம்பை நன்றாக உறிஞ்சத் தொடங்கினாலே பால் சுரப்பு அதிகமாக இருக்கும். கேழ்வரகு: கேழ்வரகில் கால்சியம், வைட்டமின் டி நிறைந்துள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, தாய்மார்களின் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.
  • இதில் உள்ள அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். கேழ்வரகில் அதிக அளவு உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள டிரிப்டோபன் எனும் அமினோ அமிலம் பசி உணர்வைக் குறைக்க உதவுகிறது.

எள்:

  • எள்ளுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கும் தன்மை உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும். அதனால், எள் சட்னி, எள் துவையல், எள்ளுருண்டை என ஏதாவது ஒரு வகையில் எள் சேர்த்த உணவைச் சாப்பிட்டுவருவது நல்லது; எள் அதிக உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் அளவாக எடுக்க வேண்டும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு (அஸ்பராகஸ்):

  • தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் ஹார் மோனைச் சமநிலைப்படுத்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது புரோலாக்டின் அளவுகளை அதிகரித்துத் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்துகிறது.

சோம்பு:

  • சோம்பில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வெந்தயம்:

  • வெந்தயத்தில் உள்ள பண்புகள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவுகின்றன.வெந்தய விதைகள் உடலில் இன்சுலின் மற்றும் ஆக்ஸிடாஸின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதால் பால் உற்பத்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகின்றன.

கீரை:

  • தினசரி மதிய உணவில் கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், விட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ள பச்சைக் கீரைகளை உட்கொள்ள வேண்டும். இது பிரசவிக்கும் தாய்மார்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும். பப்பாளிக் காயை வேகவைத்துச் சாப்பிட்டுவர பால் சுரப்பு அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம்:

  • பேரீச்சையில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 0.90 மி.கி. இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இது ரத்தம் அதிகரிக்க உதவுகிறது. பேரீச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்..

பூண்டு:

  • பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டுப் பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாகக் குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Paediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

உணவில் கவனம்:

  • குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
  • சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆகவே, உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் இணையற்ற உணவான தாய்ப் பாலைக் கொடுக்கத் தவறாதீர்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories