TNPSC Thervupettagam

தாய்மொழியை நேசித்த திரை மேதை

February 21 , 2024 187 days 193 0
  • அண்மைக் கால வரலாற்றில் தாய் மொழியைக் காக்கப் போராடி, பின்னர் தனக்கென தனியொரு நாட்டையே உருவாக்கிய பெருமைமிக்க வங்கதேசத்தின் மொழிப் போர் தியாகிகள் உயிர் ஈந்த நாள் இது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தத்தம் தாய்மொழியைப் பெருமையோடு போற்றிக் கொண்டாடும் நாளும் இதுவே.
  • உலகின் பல பகுதிகளிலும் பேசப்பட்டுவரும்தாய்மொழிகள் ஒவ்வொன்றாக மறைந்துகொண்டுஇருக்கும் இத்தருணத்தில், தாய்மொழியைக் காப்பதற்கான உறுதியை நம்முள்ளே விதைக்கும் நாளாகவும்இது அமைகிறது. இவ்வாறு நாம் இன்று கொண்டாடுவதற்குக் காரணமாக அமைந்தது, அன்றைய கிழக்கு வங்காளத்தின் தாய்மொழிக்கான போராட்டமே.
  • 1952 பிப்ரவரி 21அன்று பாகிஸ்தான் முழுமைக்கும் உருது மொழியே தேசிய மொழியாக இருக்கும் என்கிற அரசின் முடிவை எதிர்த்த டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் நசுக்கி, பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர், ஒன்பது வயதுச் சிறுவன் உள்ளிட்ட 29 பேரின் உயிர்களைப் பறித்தது. அன்று தொடங்கிய விடுதலை வேட்கையே பின்னாளில் வங்கதேசம் தனியொரு நாடாக உருவாக வழிவகுத்தது.

பூர்விக மண்ணில்

  • கணிசமான உயிர்த் தியாகத்துக்குப் பிறகு, 1971இல் வங்கதேசம் உருவான பிறகு வந்த முதல் ‘தியாகிகள் நாள’ன்று, அதாவது 1972 பிப்ரவரி 21 அன்று, டாக்கா மாணவர் கழகத்தின் அழைப்புக்கிணங்க வங்க தேசத்துக்குச் சென்றார், வங்காளத்தின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே. தன் முன்னோர்களின் பூர்விக மண்ணில் கால்பதித்த பெருமையோடு அவர் ஆற்றிய உரையை இத்தருணத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.
  • கிழக்கு வங்காளத்தில் பிப்ரவரி 21 அன்று ‘தியாகிகள் நாள்’ அனுசரிக்கப்படுவது குறித்து நீண்ட நாள்களாகவே நான் கேள்விப்பட்டு வருகிறேன். எனினும், இன்று நான் நேரடியாக வந்து பார்க்காமல் இருந்திருந்தால், நீங்கள் வங்காள மொழியை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை என்னால் உணர்ந்திருக்க முடியாது.
  • இந்த மண்ணில் இருந்தே அழிக்கப்பட்டுவிடும் அபாயத்தில் இருந்த வங்காள மொழியைக் காப்பதற்காகப் போராடி உயிர் நீத்தவர்களை எந்த அளவுக்கு நீங்கள் மதித்துப் போற்றுகிறீர்கள் என்பதை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது.
  • மேற்கு வங்காளத்தில் வாழும் நாங்களும்கூட வங்காள மொழியை நேசிக்கிறோம். இதர பல பண்பாடுகளின் செல்வாக்கினால் மேற்கு வங்காளத்தின் கலாச்சாரம் சற்றே கலவையான ஒன்று என்பதும்கூட உண்மையே. ஆங்கிலேயர்களின் செல்வாக்கிலிருந்து இன்னும்கூட எங்களால் விடுபட இயலவில்லை.
  • இந்தியாவின் ஒரு பகுதியாக மேற்கு வங்காளம் இருப்பதும்கூட அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். என்றாலும்கூட நாங்கள் வங்காள மொழியை நேசிக்கவில்லை என்று அதற்குப் பொருளல்ல. வங்காள இலக்கியம், பாடல்கள், வங்காளத் திரைப்படங்கள், நாடகங்கள் என இவை அனைத்துமே இன்னமும் அங்கு உயிரோட்டத்தோடுதான் இருந்துவருகின்றன. ரவீந்திரநாத், நஜ்ருல், பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரை இன்னமும் நாங்கள் நேசித்துவருகிறோம்.
  • தனிப்பட்ட முறையில் கடந்த 20 ஆண்டுகளாக நான் வங்காள மொழியில் திரைப்படங்களை உருவாக்கிவருகிறேன். இந்தக் காலத்தில் வங்காளத்தை விட்டு வெளியே வந்து திரைப்படங்களை உருவாக்குமாறு மற்ற நாடுகளிலிருந்தும் நகரங்களிலிருந்தும் எனக்குக் கோரிக்கைகள் வந்துகொண்டுதான் இருந்தன.
  • எனினும் அவற்றை நான் தொடர்ந்து மறுதலித்து வந்துள்ளேன். என்னுள் கலந்து நிற்பது வங்காள மொழி என்று எனக்கு நன்றாகவே தெரியும். இதை விட்டுவிட்டு வேறு ஏதாவதொரு மொழியில், எதையாவது செய்வதற்கு நான் முயற்சி செய்தால், ஒரு கலைஞன் என்ற வகையில் என் காலுக்குக் கீழே அடித்தளம் ஏதுமிருக்காது; எனது உயிரோட்டத்தையும் ஊக்கத்தையும் நான் இழந்துவிடுவேன் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
  • எங்களின் பூர்விகம் கிழக்கு வங்காளப் பகுதி என்று சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். எனது தாத்தா உபேந்திர கிஷோர் ராய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. என்றாலும் குழந்தைகளுக்காக அவர் எழுதிய ‘டுன் டுனி’ போன்ற கதைப் புத்தகங்களைப் படித்து, அவற்றைப் பெரிதும் விரும்பியிருக்கிறேன்.
  • அவர் எழுதிய பாடல்களும்கூட கிழக்கு வங்காளத்தின் நாட்டுப்புறப் பாடல்கள் எப்படியிருக்கும் என்பதை எனக்கு அறிமுகப்படுத்தின. இந்தப் பாடல்களையும், கதைகளையும் கேட்கும்போதெல்லாம் இந்த மண்ணோடு நெருக்கமானதொரு தொடர்பு எனக்கு இருப்பதாகவே கருதி வந்திருக்கிறேன்.
  • எனக்கு ஐந்து-ஆறு வயது இருக்கும்போது ஒரே ஒரு முறை நான் டாக்கா நகருக்கு வந்திருக்கிறேன். அப்போது இரண்டு – மூன்று நாள்கள்தான் தங்கியிருந்தேன். இங்குள்ள வாரி பகுதியில் ரங்கின் தெருவில்தான் என் மாமா வசித்துவந்தார். அந்த வீடும், அந்தத் தெருவும் இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வீட்டைப் பொறுத்தவரை ஒரே ஒரு விஷயம்தான் என் நினைவில் இருக்கிறது. அந்தப் பகுதியில் ஏராளமான குரங்குகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
  • ஒரு மோட்டார் படகில் பத்மா நதியின் வழியாக இங்கு வந்துசேர்ந்ததும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. படகுப் பயணத்தின்போது காலையில் நான் கண்விழித்ததும், என் அம்மா அப்போதுதான் பத்மா நதிக்கு மேலே உதித்தெழுந்துகொண்டிருந்த சூரியனை எனக்குக் காண்பித்தார்.
  • அதைப் போலவே, பத்மா, யமுனா நதிகளின் நீர் எவ்வாறு வேறு வேறு நிறங்களில் எளிதில் அடையாளம் காணும்படி இருந்தன என்பதையும் எனக்குச் சுட்டிக்காண்பித்தார். அப்போதிலிருந்தே கிழக்கு வங்காளத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் பல முறை எழுந்ததுண்டு. எனினும், நாடு இரண்டாகப் பிளவுபட்டு, கிழக்கு வங்காளப் பகுதி கிழக்கு பாகிஸ்தானாக மாறிய பிறகு, அந்த நம்பிக்கையும் படிப்படியாக மறைந்துபோனது.
  • திடீரென்று வரலாறு திரும்பி வந்ததைப் போலத் தோன்றுகிறது. என் வீட்டுக் கதவு திறக்கப்பட்டு, ‘தியாகிகள் நாள்’ ஆன இன்று உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். என் கனவு ஓரளவுக்கு நனவாகியிருக்கிறது. பல முக்கிய வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
  • எனவே, நிறைய நேரம் என்னால் இங்கே செலவிட முடியாது. என்றாலும் எதிர்காலத்தில் மீண்டும் இங்கு வருவேன் என்று நம்புகிறேன். அப்போது இந்த நாட்டை மேலும் நெருக்கமாகத் தரிசிக்க முயல்வேன். இதுபோன்ற ஒரு பொது இடத்தில் அல்லாமல், நேருக்கு நேராக மக்களைச் சந்திக்கவே விரும்புகிறேன். அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.
  • என் படைப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்பதையும் நான் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் எனது ‘மகாநகர்’ திரைப்படம் இங்கே திரையிடப்பட்டது. மக்கள் அதை விரும்பிய விதம், அவர்களின் ஆர்வம் ஆகியவை பற்றிக் கேள்விப்பட்டபோது முதலில் நான் நம்பவில்லை.
  • எனக்குத் தெரிந்த, தெரியாத பலரும் எனக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து, பத்திரிகைச் செய்திகளை இணைத்து, நடந்த சம்பவங்களை விவரித்தபோதுதான் என்னால் அதை நம்ப முடிந்தது. இவ்வாறு நடக்கும் என்று நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. ஒரு கலைஞனுக்கு இதைவிடப் பெரிய விருதோ, பாராட்டோ இருந்துவிட முடியாது.
  • கடந்த 20 ஆண்டுகளில் பல நாடுகளில் நான் பாராட்டுகளைப் பெற்றதுண்டு. எனினும் ‘தியாகிகள் நாள்’ அன்று, உங்களிடையே நான் பெற்ற மரியாதையும் பாராட்டுதல்களும் கடந்த காலத்து நிகழ்வுகள் அனைத்தையும் மீறிய ஒன்றாக மாறிவிட்டது. இதைவிட மகத்தான வாழ்த்துகளை நான் எப்போதுமே பெற்றதில்லை. வாழ்க வங்காள மொழி!”
  • பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் நாள்

நன்றி: தி இந்து (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories