TNPSC Thervupettagam

தாராவிக்குள் கரோனாவின் தாண்டவம்

May 11 , 2020 1714 days 1375 0
  • கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் காலியாகவே காணப்படுகின்றன. ஆனால், மும்பையின் தாராவியிலோ நிலைமை முற்றிலும் தலைகீழ்.
  • ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியும், உலகிலேயே மக்கள் அடர்த்தி மிக அதிக அளவில் உள்ள இடமுமான தாராவி, இப்போது கட்டுப்பாட்டு மண்டலமாக விளங்குகிறது.
  • ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3.6 லட்சம் மக்கள் வசிக்கும் இடம் இது. ஒடுங்கலான சந்துகள், தீப்பெட்டி போல ஒட்டி அடுக்கிய அறைகளில் வாழும் மக்கள் இருக்கும் இந்தப் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நெருக்கடி சூழ்ந்த இடமாக மாறியுள்ளது.
  • கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அத்தியாவசியத் தேவையான சமூக இடைவெளி என்பது இங்கே சாத்தியமேயில்லாத நிலை.
  • ஏப்ரல் 1-ம் தேதி, கோவிட் -10 வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்ட முதல் நபர் 56 வயதான ஆடைத் தொழிலக உரிமையாளர்.
  • அவருக்கு லேசான இருமலும் காய்ச்சலும் இருந்தது. உள்ளூர் மருத்துவர் ஒருவரைப் பார்த்து மருந்தெடுத்துக் கொண்டபின்னரும் அறிகுறிகள் தீவிரமானதால், சியான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு கோவிட்- 19 நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதையடுத்து குடிமைப் பணி அதிகாரிகள் அவர் தொடர்பு கொண்ட நபர்களை ஆராயத் தொடங்கும் வேலைகளை ஆரம்பித்தபோதே கரோனா அவரைப் பலிகொண்டது. இதைத் தொடர்ந்து அவர் இருந்த தொகுப்பு வீட்டுக் குடியிருப்பு மொத்தமும் சீல் வைக்கப்பட்டது.
  • தாராவியின் வைபவ் அடுக்ககத்தில் குடியிருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்தான் கரோனா பாதித்த அடுத்த நபர்.
  • கரோனா தொற்றுக்குள்ளான சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர், தன்னிடம் கரோனா அறிகுறிகள் தென்படுவதை உணர்ந்ததும் அவரே தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.
  • அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது தொடர்புகள் அனைவரும் அறியப்பட்டு சோதனைகளும் செய்யப்பட்டனர். மருத்துவரின் மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியானது.
  • அதேவேளையில், டாக்டர் பலிகா நகர் வீட்டு சொசைட்டியில் உள்ள 30 வயதுப் பெண்ணுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • தாராவியில் முதன்முதலாக கரோனா தொற்றிய ஆடைத் தொழிலக உரிமையாளர் வீட்டுப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இவர். இவையெல்லாம் உதிரியான தொற்றுகள்.
  • ஏப்ரல் 4-ம் தேதி, தாராவின் குடிசைப் பகுதிக்குள் இருக்கும் முகுந்த் நகருக்குள் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு அறைகளே கொண்ட வீட்டில் 11 குடும்ப உறுப்பினர்களுடன் இருநூறு சதுர அடி கொண்ட பரப்பளவில் வாழ்ந்து வந்த 48 வயது நபர் அவர்.
  • நெஞ்சு வலியும், மூச்சுத் திணறலும் இருந்து சியான் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டு கஸ்தூரி பாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் முழுவதும் தாராவியிலேயே ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 13-ம் தேதி தந்தை இறந்துபோனது அவரது மகனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
  • குடும்ப நண்பர் ஒருவர் உடன் இருக்க குடும்பத்தினர் யாருமே இல்லாமல் அரசு சுகாதாரத் துறையே அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்றியது. 14 நாட்கள் தனிமை வாசத்துக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இடைவெளி விட்டு வீட்டில் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
  • இந்தச் சின்ன இடத்தில் எப்படி இடைவெளியைப் பராமரிக்க வேண்டுமென்று கேட்கிறார் இறந்தவரின் மகன். சின்னச் சின்ன சந்துகள் கொண்ட இடம் அது. கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒருவர் தோளில் ஒருவர் உரசாமல் செல்லவே முடியாத இடம் இது.

பொதுக் கழிப்பறைகள்தான் பிரச்சினை

  • மும்பையின் புகழ்பெற்ற குடிசைப் பகுதியான தாராவி, மீனவர்கள் பூர்விகமாக இருந்த சதுப்புநிலப் பகுதியாகும். சின்னச் சின்ன தொழிற்சாலைகள், தொழிலகங்கள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அடர்த்தியான குடிசைப் பகுதியாக மாறி லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் இடமாக இப்போது உள்ளது.
  • 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் 6. 53 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஜி- நார்த் வார்டின் துணை ஆணையரான கிரண் திகாவ்கர், கணக்கில் வராமல் மேலும் இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கே இருக்கலாம் என்கிறார்.
  • “இங்கேயிருக்கும் பெரிய பிரச்சினை பொதுக் கழிப்பறைகள்தான். பெரும்பாலான வீடுகள் பத்துக்கு பத்து அடியில் உள்ளவை. எட்டு முதல் பத்து பேர் அத்தனை சிறிய அறைகளில் வாழ்வதை சகஜமாகப் பார்க்க முடியும்.
  • இத்தனை நெருக்கமாக மக்கள் வாழும் பகுதியில் வைரஸை எப்படிக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் இவ்வளவு நெருக்கடி உள்ள இடத்தில் மக்களைத் தடுத்து வைப்பதும் சவாலானது. நாங்கள் தினசரி 19 ஆயிரம் மதிய உணவு பார்சல்களையும் 19 ஆயிரம் இரவு உணவு பார்சல்களையும் விநியோகிக்கிறோம். ஆனால், உணவு விநியோகிக்கும்போது கூட்டம் கூடிவிடுகிறது” என்று வருத்தத்துடன் பேசுகிறார்.
  • தாராவி குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவரது நெருக்கமான தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதாக திகாவ்கர் சொல்கிறார்.
  • தாராவியில் மட்டும் 3 ஆயிரம் தனிமைப் படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர், அவற்றை பள்ளி, திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், பூங்கா, விருந்தினர் இல்லங்களில் உருவாக்கியிருக்கிறார்.
  • தாராவியில் 275 நகராட்சி கழிப்பறைக் கட்டிடங்கள், 125 மாநில வீட்டுவசதி மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துறைக் கழிப்பறைக் கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் 10 கழிப்பறைகள் உள்ளன.
  • தாராவியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளே அன்றாடக் கடன்களைக் கழிக்க உதவியாக உள்ளன. ஒவ்வொரு கழிப்பறையிலும் சானிடைசர் திரவங்கள் கிடைக்கும் வசதியைச் செய்து, ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கழிப்பறைகளைக் கழுவும் நடவடிக்கைகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.

துண்டிக்கப்பட்ட தாராவி

  • சியான் புறநகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளலிருந்து தாராவி குடிசைய்ப பகுதியை அதன் கிழக்கு முனையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பிரிக்கிறது.
  • புறநகர் பகுதியையும் குடிசைப் பகுதியையும் இணைப்பது ஒரு பாலம்தான். அந்தப் பாலம் கரோனா தொற்றையொட்டி இப்போது மூடப்பட்டுள்ளது. டோபி காட் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் தான் தாராவி மக்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவ வசதிகளைப் பெறுவற்கான ஒரே இணைப்பு.
  • வெறுமே ஐந்து நிமிட நடையில் பாலத்தைக் கடந்தால் சென்றுவிடக் கூடிய பகுதி, பாலம் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஒரு ஆம்புலன்ஸ் அல்லது வாகனம் வருவதற்காக மக்கள் காத்திருக்கு வேண்டிய நிலையில் உள்ளது.
  • தாராவி குடிசைப் பகுதியில் கரோனா தொற்றுகள் மேலதிகமாக ஏற்பட்ட நிலையில், பாலத்துக்கு அருகில் இருந்த மருத்துவர்களும் தங்கள் கிளினிக்குகளை அச்சத்தால் மூடிவிட்டனர்.
  • “தாராவியிலிருந்து வரும் நோயாளிகளை மருத்துவமனைகள் திரும்ப அனுப்புகின்றன. சியான் புறநகர் பகுதி வீடுகளில் வேலைக்குச் செல்லும் தாராவியைச் சேர்ந்த பணிப்பெண்களை வரவேண்டாம் என்று வீட்டுக்காரர்கள் சொல்லிவிட்டனர்” என்கிறார் தாராவியில் வசிக்கும் குடியிருப்பு வாசி.
  • சென்ற வெள்ளிக்கிழமை வரை தாராவி பகுதியில் மட்டும் வீடுவீடாக நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இதுவரை 90 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
  • முதியவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்படுகிறது. ஏழாயிரம் முதியவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
  • சென்ற வெள்ளிக்கிழமை வரை மும்பையில் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட 12 ஆயிரத்து 142 பேரில் 808 பேர் தாராவியைச் சேர்ந்தவர்கள். மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன 462 பேரில் தாராவியைச் சேர்ந்தவர்கள் 26 பேர்.

நன்றி: தி இந்து (11-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories