தாராவி உப்பளங்களில் வீடுகள் ஏன்?
- தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் வீடுகளைக் கட்டித்தருவதற்காக மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 255.9 ஏக்கர் பரப்பளவுள்ள மூன்று வெவ்வேறு பகுதி நிலங்களை ஒதுக்கி மஹாராஷ்டிர மாநில அரசு, அரசுத் தீர்மானம் (ஜிஆர்) வெளியிட்டுள்ளது. இந்த வீடுகள் குத்தகை அடிப்படையில் கட்டப்படும்.
உப்பளங்களின் முக்கியத்துவம்
- கடலோரங்களில் உப்பு எடுக்க பயன்படுத்தப்படும் சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழல் நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை தாழ்ந்த நிலப்பகுதியாக இருப்பதால், கடல்நீர் அதில் பாயவிடப்பட்டு பிறகு நீரை வடித்து உப்பு எடுக்கிறார்கள்.
- கனமழை பெய்யும்போது உபரி நீரை உறிஞ்சி வெள்ளச் சேதத்தைக் குறைக்கின்றன உப்பளங்கள். இதனால் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையான தோழன் உப்பளங்கள். உயரம் குறைவான அலைகளுக்கு சற்றே உயரத்திலும், உயரமான அலைகளுக்கு சற்றே தாழ்ந்தும் இருப்பதால் இங்கே பல்வேறுபட்ட கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் வளர்கின்றன.
அரசின் முடிவால் என்ன ஆகும்?
- மஹாராஷ்டிர அரசு மொத்தமாக 255.9 ஏக்கர் நிலங்களை ஒதுக்கியிருந்தாலும் அவை மூன்று வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. காஞ்சூர் என்ற இடத்தில் ஆர்தர் சால்ட் ஒர்க்ஸ் நிலத்தில் 120.5 ஏக்கர், அதே காஞ்சூரிலும் பாண்டூப் என்ற இடத்திலும் ஜென்கின்ஸ் சால்ட் ஒர்க்ஸ் நிலத்தில் 76.9 ஏக்கர், முலுந்த் என்ற பகுதியில் ஜமாஸ்ப் சால்ட் ஒர்க்ஸ் நிலத்தில் 58.5 ஏக்கரும், தாராவியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு மாற்று வசிப்பிடம் கட்டித்தருவதற்காக இந்த நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன.
- மஹாராஷ்டிரத்தில் மொத்தம் 13,000 ஏக்கர் உப்பளங்களாக உள்ளன. அவற்றில் 5,000 ஏக்கர் நிலங்கள் மும்பை மாநகரிலேயே உள்ளன. இதில் 1,781 ஏக்கர் நிலங்களை மேம்படுத்த முடியும் என்று டிசிபிஆர்-2034 ஆவணம் கூறுகிறது. இந்த நிலங்களுக்கு ஒன்றிய அரசுதான் உரிமையாளர். ஒன்றிய அரசு இதைத் தங்களுக்கு தர வேண்டும் என்று மாநில அரசு கோரியதை ஏற்று, ஒன்றிய அமைச்சரவை 2024 செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.
நிலத்தை ஒதுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன?
- இந்த நிலங்களை ஒதுக்க நான்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்துக்கான வருவாயை மாநில அரசு வசூலித்து ஒன்றிய அரசுக்குத் தர வேண்டும்; தாராவி மறுவளர்ச்சி திட்ட தனியார் நிறுவனம் (டிஆர்பிபிஎல்), இந்த நிலத்தில் பணிபுரியவுள்ள தொழிலாளர்களின் மறுகுடியேற்றச் செலவுகளை ஏற்க வேண்டும் - நிலம் கையெடுப்பு தொடர்பாக ஏற்படும் இதர செலவுகளையும் அது ஏற்க வேண்டும்; இந்தத் திட்டம் தொடர்பாக வரும் நீதிமன்ற வழக்குகளையும் சட்ட சிக்கல்களையும் தாராவி மறுவளர்ச்சி திட்டம் (டிஆர்பி) என்ற அரசு முகமை ஏற்க வேண்டும்; வாடகைக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், குடிசைப் பகுதிகளை அடுக்கக வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கும், ஏழைகள் தங்களுடைய குறைந்த ஊதியத்திலேயே கட்டுப்படியாகக்கூடிய மாதாந்திர வாடகை தரும் திட்டத்துக்கும் இந்த நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பவையே நான்கு நிபந்தனைகளாகும். டிஆர்பிஎல் என்பது இந்தத் திட்டத்தை அமல்செய்வதற்கான தனியமைப்பு.
- இதில் அதானி தொழில் குழுமத்துக்கு 80% மஹாராஷ்டிர அரசுக்கு 20% பங்குகள் உள்ளன. இந்த நிலம் மஹாராஷ்டிர அரசுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகையாக தரப்படுகிறது. குடியிருப்பைத் தவிர வேறு வணிக நோக்கங்களுக்கு இந்த நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை.
இந்தத் திட்டம் தொடர்பாக கவலைகள் ஏன்?
- மும்பை போன்ற பெருநகரத்தில் கடலோரப் பகுதியில் இந்த அளவுக்கு நிலங்களில் வீடுகளைக் கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள், மாற்றங்களை முதலில் விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும் என்று நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்களும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடாமல் உப்பள நிலங்கள் இதுவரை காத்துவருகின்றன, இவற்றில் கட்டிடங்களைக் கட்டிவிட்டால் மழைக்காலத்தில் கடல் பொங்கி, பேரலைகளும் வெள்ளமும் நகருக்குள் பாய்வது அதிகரித்துவிடும்.
- எனவே, தாராவியில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டுவதை - அதே இடத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். நகரின் வெவ்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வீடுகளைக் கட்டுவதால் ஆங்காங்கே ‘சேரிகள்’ போன்ற வசிப்பிடங்கள் உருவாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். கடலோரம் உள்ள உப்பளங்களில் அடுக்ககங்களைக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் துரப்பண பணிகள், ஆழமான அஸ்திவாரத் தோண்டல்கள் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் ஆராய்வது அவசியம் என்கின்றனர்.
இனி அடுத்து என்ன?
- நிலத்தை ஒன்றிய அரசு, மாநில அரசிடம் ஒப்படைத்துவிடும். திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்ததும் வேலையைத் தொடங்குமாறு டிஆர்பிஎல் அமைப்புக்கு மாநில அரசு அனுமதி வழங்கும். அதன் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத் துறை, பருவநிலை மாறுதல் துறை ஆகியவற்றிடம் டிஆர்பிஎல் ஒப்புதல் பெற வேண்டும். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் வழக்குகளைச் சந்திக்க நேரும். ஆனால், இந்த வழக்குகளையெல்லாம் டிஆர்பி எதிர்கொள்ளும்.
நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)