TNPSC Thervupettagam

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குறைபோக்க கட்சி வேறுபாட்டைக் கடந்து ஒன்றுபடுவோம்

August 28 , 2019 1914 days 914 0
  • சி.என்.அண்ணாதுரை: சட்டசபைத் தலைவர் அவர்களே… ஒரு கருத்தை இந்த மாமன்றத்தில் நான் எடுத்துச்சொல்வேன்; தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணித்துவிட்டு, எந்தக் கட்சியும் நிலை நிற்க முடியாது. ஆகையால்தான் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாங்கள்தான் நன்மை செய்தோம் என்று சொல்லிப் பெருமைப்படுகிறது. அந்த அளவுக்கு எல்லாக் கட்சிகளும் கூர்ந்து கவனிக்கத்தக்க வகையில் வளர்ந்திருக்கின்ற தாழ்த்தப்பட்டவர்கள் மீதான நல்லெண்ணம் மேலும் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
  • இந்த மாமன்றத்தில் இதைப் பற்றிப் பேசிய நேரத்தில், கனம் அங்கத்தினர் ஒருவர் கூறியதிலுள்ள ஆழ்ந்த பொருளை நாங்கள் எல்லோரும் கவனிக்க மாட்டோம் என்ற எண்ணத்தில் – நான் அவ்விதம் சமாதானம் தேடிக்கொள்கிறேன் – “சர்க்கார் செய்த நன்மைகளுக்காக அரிஜன மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி காட்ட வேண்டும்” என்று எடுத்துச்சொன்னார்கள். நீண்ட நாட்களாக ஒரு சமுதாயத்தை, பழங்குடி மக்கள் என்று கருதப்படும் ஒரு சமுதாயத்தை, நாட்டின் உடைமைக்கும் உழைப்புக்கும் உயிரின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு சமுதாயத்தை, இன்ன கட்சி என்று அல்ல, எந்தக் கட்சியிலும் உள்ள உயர்ந்த சாதி மனப்பான்மை பெற்றவர்கள், இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாகக் கொடுமைப்படுத்திவந்திருக்கிறார்கள். அந்தக் கொடுமைகளைக் களைந்து எறிவதற்கு நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நாம் முன்னால் செய்த கேடுகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் என்கிற முறையில் செய்யப்படுகிறதே தவிர, நன்றி பெறுவதற்காகச் செய்யப்படும் காரியம் என்று யாரும் கருதுவதற்கில்லை.
ஆதிதிராவிடர்கள்
  • இதுவரையில் ஆதிதிராவிடர்கள் சாதியில் பிற்படுத்தப் பட்டவர்கள் என்று எடுத்துச் சொல்லப்பட்டாலும், மார்க்கத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்து மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது; இந்து மார்க்கத்தில் ஒரு பகுதியினர் என்று கருதப்பட்டாலும், அந்த இந்து மதத்தில் இருக்கின்ற மற்ற பகுதியினர் அவர்களை நீண்ட நாட்களாகத் தாழ்குல மக்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே, இந்த அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முன்னால் இருந்த நீதிக் கட்சி அரசாங்கமும் அதற்கு முன்னால் இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கமும் ஆதிதிராவிட மக்களுக்கு ஏதாவது சிலபல நன்மைகள் செய்தார்கள் என்றால், அவர்களிடத்திலிருந்து நன்றி பெறுவதற்காக மட்டுமல்ல, அவர்கள் கழுவாய் தேடிக்கொள்ள, செய்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்கு எடுத்துக்கொண்ட பெருமுயற்சி என்று கருதி, இதை ஒரு திருத்தொண்டு என்ற முறையில்தான் பார்க்க வேண்டும்!
  • இந்தப் பிரச்சினை எல்லாக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு தேசியப் பிரச்சினையாகும். இதில் கட்சி மாச்சரியங்கள் குறுக்கிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி
  • எங்கள் கட்சியின் பூர்வோத்திரத்தைப் பற்றி நிதி அமைச்சர் சுப்பிரமணியம், அன்றொரு நாள் பேசினார்; காங்கிரஸ் கட்சி பூர்வோத்திரத்தின் சாதி முறையை ஒழிக்க வேண்டும் என்று பேசக் கூடாது என்று சனாதன காங்கிரஸ்காரர்கள் தடுத்திருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் “இது ஒரு அரசியல் கட்சி ஸ்தாபனம், சமுதாயத்தைத் திருத்தத் தேவையில்லை” என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அதன் பூர்வோத்திரம் - படிப்படியாக வளர்ந்து, அதற்குப் பிறகு அரிஜனங்களுக்கு உரிமை ஒதுக்கும் பெருந்தன்மை காங்கிரஸ் கட்சிக்குப் பிறந்தது!
  • காங்கிரஸ் கட்சி காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, நீங்கள் கனம் கக்கன் அவர்களை இங்கு அமைச்சராக அமர வைத்து, அழகு பார்த்து, ஆனந்தப்பட்டு, பெருமைப்பட்டு, வாழ்த்தி, வழிபடுவதற்கு முன்பே, இதே துறையில் எம்.சி.ராஜா அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பழங்குடி பெரு மக்கள் பெருமைப்படத்தக்க வேலைகளில் அமர்ந்து வேலை பார்த்திருக்கிறார்கள். ஆதிதிராவிட மக்களுக்கு வந்துள்ள குறைபாடுகளை நான் சார்ந்திருக்கிற கட்சியும் பூர்வோத்திரமாகக் கூறப்பட்ட சுயமரியாதைக் கட்சி, நீதிக் கட்சி அரியணைகளும் நீண்ட காலத்துக்கு முன்பே கவனித்துவந்திருக்கின்றன. கனம் அங்கத்தினர் ஒருவர், “ஏதோ ஒரு மகாநாட்டில், ஆதி திராவிட மக்களைச் சமமாக நடத்தவில்லை” என்று குறிப்பிட்டார்கள். உண்மையிலேயே விளக்கம் சொல்வார்களேயானால், அதற்குப் பொறுப்பாக இருக்கக்கூடியவர் யாராக இருந்தாலும், அவரைக் கட்சியிலிருந்து விலக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், அப்படிப்பட்ட காரியங்களை – சாதி முறையை ஒழிப்பதற்கு - சாதி முறைகளை ஒழிப்பதன் மூலம் பழங்குடி மக்கள் நீண்ட காலக் குறைபாடுகளை நீக்குவதற்கு எல்லாக் கட்சியிலும் தீவிரவாதிகள் ஒன்றுபட வேண்டும்.
  • ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்குப் போவது சகஜம், லாபமானதும்கூட! அதை இங்கேயேகூட நான் காட்சிகளாகக் காண்கிறேன். ஆனால், கட்சி விட்டுக் கட்சி மாற வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அழைக்கவில்லை, கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே, குறிப்பிட்ட நல்ல காரியத்தில் நாம் ஈடுபடலாம். அப்படிப்பட்ட ஒரு நல்ல திருத்தொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவது, அந்தப் பழங்குடி மக்களை விடுவிப்பது. இதில் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை(28-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories