TNPSC Thervupettagam

தாவரங்களும் வேட்டையாடுமா

September 27 , 2023 472 days 455 0
  • இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் தாய் என்றால் அது தாவரங்கள்தாம். தாவரங்கள் இல்லை என்றால் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. சூரியனிடமிருந்தும் சுற்றுப்புறத்திலிருந்தும் ஆற்றலைப் பெற்று அவற்றை மற்ற உயிரினங்குகளுக்குக் கடத்துபவை தாவரங்கள்தாம்.
  • தாவரம் என்பது மிகவும் சாதுவான, யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது. தாவரங்களில் உள்ள முள்கள் போன்ற அமைப்புகளும் விஷத்தன்மையும்கூடப் பாதுகாப்புக்காகத்தானே தவிர, மற்ற உயிரினங்களை வேட்டையாடுவதற்காக அல்ல என்றுதான் நாம் கருதுகிறோம். ஆனால், வேட்டையாடும் சில தாவரங்களும் இருக்கின்றன. அவற்றை நாம் ஊன் உண்ணித் தாவரங்கள் (Carnivores Plants) என்று அழைக்கிறோம்.
  • இந்தத் தாவரங்கள் பல லட்சம் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்துவருகின்றன. இன்று அண்டார்க்டிகாவைத் தவிர, உலகம் முழுவதும் இந்தத் தாவரங்கள் காணப்படுகின்றன.
  • முதலில் மற்ற தாவரங்களைப் போலச் சாதுவாக இருந்தவை, காலப்போக்கில் பூச்சிகளை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டன. அதாவது வேட்டையைத் தொடங்கி இருக்கின்றன. ஏன் இவை பூச்சிகளை உண்ண வேண்டும்?
  • ஊன் உண்ணித் தாவரங்கள் பற்றிய தகவல்களை ஒரு புத்தகமாக எழுதி 1875ஆம் ஆண்டே சார்லஸ் டார்வின் வெளியிட்டுள்ளார். ஊன் உண்ணித் தாவரங்கள் பெரிய உயிரினங்களை எல்லாம் வேட்டையாடுவது இல்லை. பூச்சி, தவளை, பல்லி போன்ற சிறிய உயிரினங்களையே அவை கொல்கின்றன.
  • பூச்சிகளைக் கொன்று தமக்கு வேண்டிய ஊட்டச்சத்துகளை அவற்றில் இருந்து கிரகித்துக்கொள்கின்றன. இந்தத் தாவரங்கள் இரைகளைக் கவர்வதற்கும், அவற்றைச் சிறைபிடித்துக் கொல்வதற்கும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. அது மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட இரையை ஜீரணிப்பதற்கு வேண்டிய தகவமைப்பையும் அவை பெற்றுள்ளன.
  • சில ஊன் உண்ணித் தாவரங்களின் இலைகள் வாய் போல இருக்கும். அவற்றில் பூச்சிகள் அமர்ந்தவுடன் சட்டென்று வாய் மூடிக்கொள்ளும். இதனால், அதில் பூச்சி மாட்டிக்கொண்டு உயிரிழக்கும். சில தாவரங்கள் பூச்சிகளைப் பிடிப்பதற்குப் பிசுபிசுப்பான திரவங்களைச் சுரக்கும். சில தாவரங்கள் அவற்றைக் கவர்ந்திழுக்கும் வகையில் வாசனையை வெளியிட்டுப் பின் அவற்றை வேட்டையாடும்.
  • பூமியில் சுமார் 800 வகையான ஊன் உண்ணித் தாவரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தத் தாவரங்கள் சுற்றுச்சூழலில் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஏன் இந்தத் தாவரங்கள் வேட்டையாட வேண்டும்?

  • ஊன் உண்ணித் தாவரங்கள் ஆரம்பத்தில் மற்ற தாவரங்களைப் போல்தான் உணவைப் பெற்று வந்திருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு நிலத்தில் இருந்து வேண்டிய ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோது உயிரினங்களை வேட்டையாடத் தொடங்கி இருக்கின்றன.
  • இந்தத் தாவரங்கள் குறைந்த ஊட்டச்சத்துகளும், அதிக அமிலத் தன்மையும் உள்ள சதுப்பு நிலங்கள், சேறுகளில்தாம் வளர்கின்றன. இந்த நிலங்களில் நைட்ரஜனும் பாஸ்பரஸ் சத்துகளும் குறைவாகவே கிடைக்கும். ஆனால், தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு அவை இரண்டும்தாம் அவசியம். அவை கிடைக்காதபோது பூச்சிகளில் இருந்து அந்தச் சத்துகளைத் தாவரங்கள் பெற்றுக்கொள்கின்றன.
  • முதன்முதலில் பூஞ்சைகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட சில தாவரங்கள் புரதங்களைச் சுரந்துள்ளன. ஆனால், காலப்போக்கில் அந்தப் புரதங்கள் பாதுகாப்புக்காக அல்லாமல் செரிமான நொதிகளாக மாறிவிட்டன.
  • பூஞ்சைகளின் செல்சுவர்கள் கைட்டின் (chitin) எனும் பொருளால் ஆனவை. இதே கைட்டின்தான் பூச்சிகளின் மேலோடுகள் உருவாக்கத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. இதனால் பூஞ்சைகளுக்கு எதிராகச் சண்டையிடுவதற்காகப் பயன்பட்ட புரதங்கள், காலப்போக்கில் கைட்டினிஸ் எனப்படும் நொதிகளாகிவிட்டன. ஊன் உண்ணிகளின் ஜீரணச் சாற்றில் இருக்கும் இந்த நொதிகள்தாம் பூச்சிகளின் மேலோடுகளை உடைக்க உதவுகின்றன.
  • அதேபோல இந்தத் தாவரங்கள் பர்ப்பிள் ஆசிட் பாஸ்படேஸ் எனப்படும் நொதிகளையும் கொண்டிருக்கின்றன. இந்த நொதிகள் இரைகளின் உடலில் இருந்து பாஸ்பேட்டைப் பெற உதவுகின்றன. தாவரங்களின் செல் வளர்ச்சியில் பாஸ்பரஸ்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த ஊட்டச்சத்து பொதுவாக நிலத்தில்தான் அதிகம் கிடைக்கிறது. அது கிடைக்காதபட்சத்தில் பூச்சிகளில் இருந்து தாவரங்கள், அவற்றைப் பெறத் தொடங்கி இருக்கின்றன.
  • இப்படித்தான் ஊன் உண்ணித் தாவரங்கள் பூமியில் தோன்றியுள்ளன. ஒருவேளை ஊன் உண்ணித் தாவரங்கள் வாழும் நிலத்தில் போதுமான சத்துகள் கிடைத்தால் என்ன ஆகும்? அவை தற்காலிகமாக வேட்டையாடுவதையே நிறுத்திவிடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • இந்தத் தாவரங்கள் அனைத்தும் ஒரே மூதாதையரைக் கொண்டிருக்கவில்லை. வெவ்வேறு இடங்களில் இருந்த வெவ்வேறு தாவரங்கள் தனித்தனியாக ஊன் உண்ணித் தாவரங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. புறச்சூழலுக்கு ஏற்ப மரபணு மாற்றம் ஏற்பட்டு ஒன்றுக்கு இன்னொன்று தொடர்பில்லாத இனங்கள் ஒரே வகைப் பண்பைப் பெறுவதைக் ‘குவி பரிணாமம்’ என்கிறோம். இந்த வகையில்தான் இன்றைய ஊன் உண்ணித் தாவரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன.
  • இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது, பிழைக்க வேண்டிய தேவை வந்தால் வெவ்வேறு வகை உயிரினங்கள்கூட ஒரே வகைத் தீர்வைக் கண்டடைகின்றன என்பதுதான்.
  • மனிதர்கள் ஊன் உண்ணித் தாவரங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். அவற்றுக்குச் சிறு பூச்சிகளை உண்ணும் ஜீரண அமைப்பு மட்டுமே இருப்பதால் மனிதர்களைச் சாப்பிட இயலாது.
  • நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories