- பயிரோடு பயிராக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்கலைகழக மொட்டைமாடியில் பரிசோதனைக்காக வளர்த்த மாடி தோட்டத்தில் இந்த ஆராய்ச்சியை ஆய்வாளர் பெர்ட் ஹேமலர்ஸ் தலைமையிலான குழு செய்து பார்த்தது.
- பயிரிடப்பட்ட தோட்டத்தில் 1 சதுர மீட்டர் பரப்பளவுக்கு சுமார் 44 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. சூற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இயற்கை வழியே மின்சாரம் உற்பத்தி செய்ய இவர்களது ஆய்வு உதவும்.
இது எப்படி சாத்தியம்
- இதற்கு முதலில் மின்கலம் வேண்டும். மின்கலத்தை தயாரிக்க ஓர் எளிய எடுத்துக்காட்டை பார்ப்போம். பள்ளியில் விளையாட்டாக நாம் உருவாக்கும் எலுமிச்சை மின்கலத்தை எடுத்துக்கொள்வோம். துத்தநாக உலோக துண்டு மற்றும் செம்பு கம்பியை எலுமிச்சை பழத்தின் உள்ளே செருகினால் இரண்டுக்கும் இடையே மின்னழுத்தம் உருவாகும். இரண்டையும் இணைத்தால் மின்சுற்று உருவாகும்.
- எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் துத்தநாகத்துடன் ஆக்சிஜனேற்ற வினை புரியும். துத்தநாக அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை விடுவிக்கும். எலக்ட்ரான் இழந்த துத்தநாகம் நேர் மின்னேற்றம் கொண்ட ஆனோட் நேர்மின்முனையாக செயல்படும்.
- மின் சுற்று வழியே செல்லும் எலக்ட்ரான் மறு முனையில் உள்ள செம்பு கம்பியை அடையும். செம்பு கம்பி எதிர் மின்னேற்றம் கொண்ட கத்தோட் எதிர்மின்முனையாக மாறும். இப்போது இரண்டு புள்ளிகளுக்கும் இடையே மின் சுற்று உருவாகி மின்னாற்றல் உருவாகும்.
- இயல்பாகவே தாவரங்கள் தங்களின் வேர்கள் வழியே குளுக்கோஸ், அசிடேட், ப்யூட்ரேட் புரோபியோனேட் போன்ற மக்கும் கரிம கழிவுப்பொருள்களை மண்ணில் வெளியேற்றுகின்றன. தாவரத்தின் வேர்சூழ் மண்டலத்தின் அருகே வாழும் பல்வேறு நுண்ணுயிரிகள் இந்த கரிம கழிவை உட்கொள்ளும். தாவரத்தின் கரிம கழிவுகளை மண்ணில் வாழும் பாக்டீரியா உட்கொள்ளும்போது கழிவாக கார்பன் டை ஆக்சைடு, எலக்ட்ரானை இழந்த ஹைட்ரஜன் அயனி, எலெக்ட்ரான் ஆகிய மூன்றும் வெளியேறும்.
- எனவே இயல்பாகவே தாவரங்களின் வேர்சூழ் மண்டலத்தின் அருகே மின்னழுத்த நிலை உருவாகும். ஹைட்ரஜன் அயனியை மட்டும் கடத்தும்படியான அயனி ஊடுறுவு சவ்வு ஒன்றை இடையில் வைத்து இருபுறமும் நேரமின்முனைவாய் மற்றும் எதிர்மின்முனைவாய் பொருத்தினால் மின்சுற்றை உருவாக்கி மின்னாற்றல் பெறலாம்.
- ஷாக் கொடுத்தால் அதிகரிக்கும் தாவர வளர்ச்சி: இதன் வழியாக பெறக்கூடிய மின்சாரம் சொற்ப அளவே என்றாலும் தாவரங்களை எரித்து அதிலிருந்து பெறப்படும் ஆற்றலைவிட கூடுதல் என்கிறார் ஹேமலர்ஸ். இதற்கிடையில் ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தின் இந்திய வேதியியல் ஆய்வுக்கூட விஞ்ஞானி வேங்கட மோகன் தலைமையில் ஒரு குழு இதே தாவர மின்சாரத்தை வைத்துத் தாவரத்தின் வளர்ச்சியைத் தூண்டி விடலாமென நிறுவியுள்ளார்.
- வேர்சூழ் மண்டலத்தில் இயல்பில் ஏற்படும் மின்னழுத்தத்தை நேர் மற்றும்எதிர் மின்முனைவாய்களை பொருத்தி மின்சுற்றாக மாற்ற முடியும். மின்முனைவாய் அற்ற தொட்டி, திறந்த மின் சுற்று உள்ள தொட்டி, மின்கசிவு குறுக்குச் சுற்று உள்ள தொட்டி மூடிய சுற்று உள்ள தொட்டி என நான்கு வகைகளில் மின்சுற்றை ஏற்படுத்தி ஆய்வு செய்தார்,
- மின்சுற்று அற்ற தொட்டியைவிட திறந்த மின்சுற்று கொண்ட தொட்டியில் கூடுதல் வளர்ச்சி தென்பட்டது. அதே போல திறந்த மின்சுற்றைவிட மின்கசிவு உள்ள நிலையில் வளர்ச்சி கூடுதலாக இருந்தது. மின் கசிவை விட மூடிய சுற்று உள்ள தொட்டியில் அதிகளவு வளர்ச்சி காணப்பட்டது. அதாவது மின் தூண்டலால் விளைச்சலை அதிகரிக்கலாம் என்று இவரது ஆய்வு நிறுவியுள்ளது. உரங்களை குறைத்து நிலைத்த விவசாயத்தை மேற்கொள்ள இந்த ஆய்வு வழி செய்யக்கூடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2024)