TNPSC Thervupettagam

திடீர் நகரும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும்

April 14 , 2023 645 days 405 0
  • தலைநகர் சென்னையில் பூர்வகுடிகள்மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களைப் பற்றிய விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. அந்த வகையில், திடீர் நகரில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரிய அளவிலான கவனம் கோருகின்றன. கூடவே, பட்டியல் சாதியினருக்கான நிதி ஒதுக்கீட்டின் போதாமையும் கவனத்துக்குரியது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி இவற்றைப் பேச வேண்டியது அவசியமாகிறது.

தீராத் துயரம்:

  • சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது எழும்பூர் சட்டமன்றத் தொகுதி; இதற்கு உள்பட்ட ஓட்டேரி சுடுகாட்டை ஒட்டி அமைந்துள்ள பகுதிதான் திடீர் நகர். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் இங்கு வசித்துவருகின்றனர்.
  • முழுக்க முழுக்க தலித் மக்கள் வசிக்கும் இடம். இட நெருக்கடியால் அதிகமாகத் தற்கொலைகள் நடக்கும் பகுதி இது. இவ்வளவு பேர் வசிக்கும் பகுதியில் போதுமான கழிப்பிடம்கூட இல்லை. ஊடகங்களிலும் அவ்வப்போது இதுகுறித்த செய்திகள் வெளியாகத்தான் செய்கின்றன. திடீர் நகர் மக்களின் வாழ்க்கை அவலம் குறித்து ‘சென்னையில் ஒரு தாராவி’ எனும் தலைப்பில் செய்தி ஆவணப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.
  • ஆனால், இதுவரை இங்குள்ள மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த இடம் சொந்தமில்லை; மாநகராட்சி தனக்குச் சொந்தம் என்கிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதை வகை மாற்றம் செய்வதும், ஒரு சில பகுதிகளில் கோயில் நிலங்கள் என்று சொல்லப்படுவதுமாகக் காலம் கழிகிறது.
  • ‘குடிசை இல்லாத இந்தியா’ என்ற பெயரில், மத்திய அரசு 2007இல் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தை உருவாக்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திடீர் நகரில் உள்ள மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை இதே இடத்தில் கட்டித்தர வேண்டிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
  • நிறைவேற்றித் தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் தீர்மானமும் போடப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் நடக்கவில்லை.

குறைவான நிதி:

  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஒரு கோடியே 44 லட்சம் பட்டியல் சாதி மக்கள்வசிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். இம்மக்கள் எதிர்கொள்ளும் சமூகக் கொடுமைகள் ஒருபுறம் என்றால், அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமைகள் விஷயத்தில் தொடரும் ஏமாற்றங்கள் மறுபுறம்.
  • தமிழ்நாடு அரசு ஆண்டு பட்ஜெட்டில், ஆதிதிராவிட நலத் துறைக்கு ஒதுக்கீடு செய்த நிதி 11.41%; அதாவது ரூ.3,513 கோடி. உண்மையில் பட்டியல் சாதி மக்களின் மக்கள்தொகையை ஒப்பிட இது குறைவான தொகை. இன்றைய தேதிக்கு, தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 23.7% ஆக உள்ள மக்களுக்கு, 1984 சட்டத்தின்படி ரூ.6,000 கோடியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், பாதித் தொகையை மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது, ஆதிதிராவிட நலத் துறையின் நோக்கத்தைச் சிதைப்பதாக இருக்கிறது.
  • தமிழ்நாடு பட்ஜெட்டில், ஆதிதிராவிட நலத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 83% பள்ளிக் கல்வி, உயர் கல்வி, மாணவர்களின் தங்கும் விடுதிகள், கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.528 கோடிதான் மற்ற அனைத்துக்கும் செலவு செய்யப்படுகிறது.
  • தாட்கோ மூலம் பட்டியல் சாதி மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த நிதி ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது பெயரை மாற்றி, அம்பேத்கர் தொழில்முனைவோர் எனும் திட்டத்துக்கு ரூ.100 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள்.
  • கணக்கு போட்டுப் பார்த்தால் ஒரு கோடியே 44 லட்சம் பட்டியல் சாதி மக்களுக்கு ரூ.100 கோடி என்பது ஒரு நபருக்கு ரூ.80 என்கிற விகிதத்தில்தான் இருக்கிறது. இந்தக் குறைந்த தொகையில்தான் சாதி வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் அலட்சியம்:

  • மத்திய அரசு ஒருபக்கம் பட்டியல் சாதி மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்துக்கொண்டு வருகிறது. மறுபக்கம் மாநில அரசும் அதையே பின்பற்றுகிறது. மத்திய அரசு கொடுக்கும் குறைந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கிறது. இது அரசு அதிகாரிகள் மத்தியில் சாதிய மனநிலை இருப்பதற்கான சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது. ஒதுக்கப்படும் நிதி எப்படிச் செலவழிக்கப்படுகிறது என்பதற்கான கண்காணிப்பும் இல்லை.
  • இவ்விஷயத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளும் திமுக அரசின் கூட்டணிக் கட்சிகளும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பது இன்னொரு துயரம். இந்தப் பிரச்சினைகள் போதாதென, ஆதிதிராவிட நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் திட்டம் பட்டியல் சாதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கென ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 83% நிதி இப்போது எந்த விதத்தில் செலவு செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
  • பட்ஜெட்டில் ரூ.3,000 கோடியைக் குறைத்ததை மறைத்து அம்பேத்கர் எழுதிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை முதன்மைப்படுத்தி, உணர்ச்சி மிகுதியால் பெருமைப்பட்டுக்கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அடையாள நிமித்தம் செய்யப்படும் பணிகளைவிடவும், உண்மையான அக்கறையுடன் செய்யப்படும் பணிகள்தான் அரசின் நோக்கத்தைப் புலப்படுத்தும்.
  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஒரு கோடியே 44 லட்சம் பட்டியல் சாதி மக்கள் வசிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.

நன்றி: தி இந்து (14 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories