TNPSC Thervupettagam

திடீர் மரணம் தவிர்க்க...

September 28 , 2019 1931 days 1618 0
  • உலக இதய நோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாரடைப்பு வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான் இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கமாகும். 
  • உலகில் முதலிடம் வகிக்கும் உயிர்க்கொல்லியாக மாரடைப்பு உள்ளது. இதயம் தொடர்புடைய இந்தக் கொடிய பாதிப்பு காரணமாக ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் உயிரிழக்கின்றனர்.  
  • அதாவது, உலகின் மொத்த இறப்புகளில் 29 சதவீதம் பேர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பு காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை, 2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாரடைப்பால் உயிரிழப்பவர்களில் 82 சதவீதம் பேர் வளரும் நாடுகள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
  • 2020-ஆம் ஆண்டு உலகளவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.
பெண்களும் குழந்தைகளும்
  • ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும், குழந்தைகளும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் உலகளவில் பிறக்கும் குழந்தைகளில், 10 லட்சம் குழந்தைகளுக்கு பிறவி இதயக் கோளாறு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • அதே போன்று, உலக அளவில் 10:1 என்ற கணக்கில் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளதும், அதிக எடை காரணமாக இதய நோய், வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கே இதய நோய் இருந்து வந்த நிலையில், தற்போது இளம் வயதினருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
  • இரு தலைமுறைகளுக்கு முந்தைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதய நோய் குறித்த அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால், தற்போது இளம் வயதினரும் இதய நோய் குறித்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 
  • தமிழகத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், 20 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், 30 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும், 10 சதவீதம் பேர் இதய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
நோய்கள்
  • மனித இதயமானது சராசரியாக ஒருவரின் கைப்பிடி அளவே இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை இதயம் துடிக்கிறது. ரத்தக் குழாய்கள் மூலம் ரத்தத்தை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டுசென்று, உடலைச் சீராக இயக்க வைக்கும் மகத்தான பணியை இதயம் செய்து வருகிறது.
  • ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்தும் செல்லும் பணியைச் செய்யும் இதயம், மூளையைவிட முக்கியமான உறுப்பு எனலாம். மூளை செயலிழந்தாலும் உயிர் இருக்கும். ஆனால், இதயம் நின்று விட்டால் உயிர் பிரியும். 
  • ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இதய நோய்க்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. பணிச் சூழல், பணிச் சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம், போதிய தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் வயதினர் அதிக அளவில் இதய நோய்க்கு உள்ளாகின்றனர். பணிச் சூழல் மட்டுமல்லாமல், முறையற்ற உணவு முறைகளாலும் இதய நோய் ஏற்படுகிறது.
  • ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த சர்க்கரை அளவு, உப்பு நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது ஆகியவை இதய நலனுக்கு எதிரானவை. அதிக எண்ணெய், மைதாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளாலும் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
  • மேலும், மது அருந்துதல், புகை பிடித்தல், உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையும் இதய நோய் ஏற்பட முக்கியக் காரணிகளாகும்.
காரணங்கள்
  • மார்பின் நடுவில் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி, இடது தோள்பட்டையில் தொடங்கி கை வரை வலி பரவுவது, மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், தலைசுற்றல், குளிர் வியர்வை போன்றவை மாரடைப்பின் அறிகுறிகள் எனவும், நெஞ்சு வலி ஏற்படும்போது உடனே பதற்றம் அடைவதும் இதய நோய்க்குக் காரணம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், எண்ணெய் உணவுப் பண்டங்களைத் தவிர்த்து ஆவியில் வேக வைக்கப்படும் உணவுப் பண்டங்களான இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி நிறைந்த பழங்கள், கீரை, காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடுவது ஆகியவை இதய நோய் ஏற்படாமல் தவிர்க்கவும், ஏற்கெனவே நோய் பாதிப்புள்ளோருக்கு அதைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
  • போதிய அளவு உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, மாடிப் படிகளில் ஏறி-இறங்குவது, மிதிவண்டிப் பயணம், நாள்தோறும் யோகா, தியானம், சுவாசப் பயிற்சியை மேற்கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து விடுபட வழிவகுக்கும். 
  • "நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'
  • நோய் என்னவென்று ஆராய்ந்து அதன் காரணம் குறித்தும், அதைத் தணிக்கும் முறை குறித்தும் ஆராய்ந்து உடலுக்கு ஏற்ற வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் இதயம் சார்ந்த பரிசோதனைகளையும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் குறித்த பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி, முறையான உணவு முறை, நல்ல எண்ணங்கள், மகிழ்ச்சியான சூழல் போன்றவை ஆரோக்கியமான இதயத் துடிப்பின் உயிர் நாடிகளாகும்.
  • ஒவ்வொரு தனி மனிதனும் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகில் மாரடைப்பு இல்லாத சமுதாயத்தை உருவாக்கலாம்.

நன்றி: தினமணி (28-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories