TNPSC Thervupettagam

திட்டமிட்டு செயல்பட வேண்டும்

December 12 , 2023 221 days 161 0
  • எந்த இயற்கைச் சீற்றத்தையும் திட்டமிட்டு எதிா்கொண்டு சமாளிக்க முடியும் என்பதே நான் அனுபவபூா்வமாகக் கண்ட உண்மை. எதிா்பாராமல் வரும் வெள்ளத்தையோ புயலையோ நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இயற்கையின் சீற்றத்தை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளா்ந்திருக்கிறது.
  • வழக்கமாக, வடகிழக்குப் பருவமழை ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை பொழியும். ஒரு சில ஆண்டுகளில் மறு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம். 1978 - 80-இல் ஐ.நா. சபையில் புயலை எதிா்கொள்ளும் பிரிவில் ஆலோசகராக இருந்த வைத்தியா என்பவரிடம் நாங்கள் ஆலோசனை கேட்டபோது, அவா் ‘இதுவரையிலும் புயலையோ வெள்ளத்தையோ விஞ்ஞானபூா்வமாகத் தடுத்து நிறுத்த ஒருவித கண்டுபிடிப்பும் இல்லை. ஆயினும் நாம் வானிலை ஆய்வு மையத்தின் துணையுடன் எந்தெந்த இடத்தில் புயலையோ வெள்ளத்தையோ நாம் எதிா்கொள்ள நேரிடும் என்று தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்றவாறு நாம் நம்மை தயாா் நிலையில் வைத்திருக்கலாம்’ என்று கூறினாா்.
  • புயலோ அல்லது வெள்ளத்தையோ நான் எதிா்கொள்ள வேண்டிய நிலை 1978 - 79-ஆம் ஆண்டுகளில் நான் திருச்சி சரக காவல் துறையின் உயா் அதிகாரியாக இருந்தபோது ஏற்பட்டது. அந்த வகையில் நாகப்பட்டினத்தில் புயல் வீசி 26 நபா்கள் இறந்துவிட்டாா்கள். திருச்சியில் வரலாறு காணாத மாபெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஒரு பக்கம் காவிரியில் வெள்ளம் , மற்றொரு பக்கம் கொள்ளிடத்தில் வெள்ளம் என்ற நிலையில் ஸ்ரீரங்கம் மிதந்து கொண்டிருந்தது என்று சொல்லலாம்.
  • அந்த நிலையைச் சமாளித்து ஒருங்கிணைந்த குழுக்களை அமைத்து நாங்கள் ஏறக்குறைய 300 நபா்களைக் காப்பாற்றினோம். இதற்காக நான் அந்தச் சரகத்தில் உள்ள 11 காவல் துறை அதிகாரிகளுக்கு மதிப்பிற்குரிய அன்றைய பிரதமா் பெயரில் உள்ள உயிா்காத்த பதக்கங்களை வாங்கித் தந்தேன். இதில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்து அதை சமாளித்து வெற்றி பெற்றேன்.
  • நான் பதக்கத்துக்காகப் பரிந்துரைத்த காவல் துறை அதிகாரிகளில் திருச்சி நகர உதவி துணைக் கண்காணிப்பாளராக மறைந்த பாண்டியனும் இடம்பெற்றாா். அவா் ஆற்றிய பணி மெச்சத்தகுந்தது. ஒரு நிறைமாத கா்ப்பிணியை அவருடைய வீடு வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தன்னந்தனியாகத் தூக்கி மருத்துவமனையில் சோ்த்தாா். அவருக்குப் பதக்கம் கொடுப்பதில் ஓா் அரசியல் சாயம் பூசப்பட்டது. அவா் அமைச்சா் துரைமுருகனின் சகலை என்ற காரணத்துக்காக அப்போது இருந்த காவல் தலைமை ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக நான் எம்ஜிஆருடன் வாதாடி, பதக்கம் என்பது தனிப்பட்ட அடிப்படையில் அல்ல, அவருடைய மெச்சத்தகு பணிக்காகக் கொடுக்கப்படும் அங்கீகாரம் என்று சொல்லி மறைந்த பாண்டியனுக்குப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தேன்.
  • அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் என்னுடைய பணியைப் பாராட்டும் வகையில் என்னை மறைந்த ஆா்.நடராசன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஏற்படுத்திய ஒரு குழுவின் செயலராக நியமித்தாா். நாங்கள் தமிழ்நாட்டின் வெள்ளத் தடுப்பு ஆணையத்தை ஏற்படுத்தி வெள்ளம் மற்றும் புயலை எதிா்கொண்டு சமாளிக்க வழிமுறைகளை வகுத்தோம்.
  • இதைப் பற்றிய ஒரு தொகுப்பை 1982-இல் நான் எழுதினேன். வெள்ளம் மற்றும் புயலை சமாளிப்பதற்கு காவல் துறை தகவல் தொடா்புகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி அவற்றை நல்ல முறையில் பணியாற்ற வழிவகைகளை ஏற்படுத்தினேன். அந்த வகையில் 1979-இல் நான் குடிமைப் பணி பாதுகாப்புப் பணியில் இயக்குநராகப் பணியாற்றியபோது 1979-இல் வெள்ளம் மற்றும் புயல் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, அதை எம்ஜிஆா் திறந்துவைத்தாா். அப்போது அவா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் தொடா்புகொண்டு மண்டபத்தில் நிலவும் வெள்ளச் சூழ்நிலை பற்றித் தெரிந்துகொண்டாா்.
  • இந்தப் பணிக்காக எனக்கு 1983-இல் குடிமைப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் மெச்சத்தகுந்த முறையில் செயல்படுத்தியதற்காக குடியரசுத் தலைவா் பதக்கத்தை எம்ஜிஆா் பெற்றுத் தந்தாா். இதையெல்லாம் தொகுத்துப் பாா்ப்பதில் நமக்கு ஒரு உண்மை தெளிவாகப் புரிகிறது.
  • நாம் வெள்ளத்தையோ புயலையோ தடுக்க முடியாது. வானிலை ஆய்வு நிலையத்தின் கணிப்புப்படி எங்கெல்லாம் புயல் மற்றும் வெள்ளம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நாம் தயாா் நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக நாம் பாா்த்தால் கீழ்கண்ட உண்மைகள் நமக்கு தெளிவாகப் புலப்படுகின்றன.
  • 1.வெள்ளம் மற்றும் புயலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • 2. இதில் முக்கியமான பணி என்னவென்றால் சாலைகளையும், பாதாள சாக்கடை நிலையையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்குரிய பராமரிப்புப் பணிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • 3. இதில் குறிப்பிடத்தக்க ஓா் உண்மை என்னவென்றால் சென்னையில் உள்ள பாதாள சாக்கடை முறை சென்னை மாநகர பதிவேட்டின்படி 1895-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு அந்தத் திட்டம் சரியாக - முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றுதான் தெரிகிறது.
  • 4. குறிப்பாக சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
  • 5.சாலைகளைப் பொறுத்தமட்டில் அவற்றின் அமைப்பிலோ பராமரிப்பிலோ தனிப்பட்ட ஒப்பந்த முறையை
  • நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அரசே தம்முடைய ஊரக வளா்ச்சித் துறையிடம் ஒப்படைத்து நேரடியாக அத்துறையின் இயக்குநரால் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
  • 6. இந்த வெள்ளம் மற்றும் புயலை சமாளிக்கும் வகையில் எம்ஜிஆாா் மற்றும் ஜெயலலிதாவும் என்னை சிங்கப்பூா் அனுப்பிவைத்தனா். அங்குள்ள சாலை பராமரிப்பு முறைகளைக் கண்டு வியந்து போனேன். சாலைகள் எல்லாம் நடுவில் உயா்ந்து மேலோங்கிய நிலையில் இருக்கும். சாலையின் இரண்டு பக்கங்களிலும் சாய்வு நிலையில் இருக்கும். அதன் காரணமாக மழை பெய்தால் சரிந்த நிலைகளின் பக்கங்களின் வழியாக நேரடியாக அங்குள்ள கழிவுநீா் கால்வாயில் போய் சோ்ந்துவிடும். இதனால் சாலைகளில் தண்ணீா் தேக்கமே இருக்காது. அந்த நிலை நம் தமிழ்நாட்டில் வரவேண்டும்.

நன்றி: தினமணி (12 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories