- அதிகாரத்துக்கு எதிராக மனிதர்கள் போராடுவது என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமே என்பார் நாவலாசிரியர் மிலன் குந்தேரா (Milan Kundera). இங்கே நினைவு என்பதை அவர் வரலாறு என்று எழுதியிருக்கவில்லை. நினைவு என வரும்போது அங்கே மறத்தலும் இணைகிறது.
- வரலாறு எனச் சொல்கையில் அது கற்றல், கற்பித்தல், அறிதல், தரவுகள், முக்கியத்துவம் ஆகியவற்றோடு கைவிடுதல் அல்லது உயிர்ப்போடு வைத்திருத்தலோடு இணைகிறது. தனிமனிதர்களைப் போலவே சமூகமும் நினைவினாலும் மறதியினாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் அதிகாரம் தனது தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்திக்கொள்கிறது.
- ஒருமுறை வரலாற்றை நினைவுகூர்வது ஊக்குவிக்கப்பட்டால், மறுமுறை அதனை மறத்தல் ஊக்குவிக்கப்படும். சமகாலச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முனைந்திருக்கும் எந்த ஒரு சமூகத்திடமும் அதன் சிக்கல்களுக்கு வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட அல்லது நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு அல்லது ஒரு போக்கே மூலகாரணம் என்று சொல்லப்படுமாயின், அங்கே அதிகாரம் அதன் விளையாட்டைத் தொடங்கிவிட்டது என்றே பொருள்.
மடியில் சுமக்கப்படும் கனல்
- கடந்த காலத்தின் ஓர் அறையில் தீ வைத்தால் நிகழ்காலத்தின் வீடு சூடாகும் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இதன் பொருள், வரலாறு அதன் மடியில் நெருப்பைச் சுமந்து, அவ்வப்போது கக்கும் காட்ஸில்லாவைப் போல இருக்கிறது என்பதே. மறதியின் நீருக்கடியில் அமைதியாக இருக்கும் காட்ஸில்லாவை வெளியே இழுத்து அதனை அலைக்கழித்தால் அது நெருப்பைக் கக்கும்.
- வரலாறு, அது சொல்வது அனைத்தும் உண்மை என்கிற தளத்தில் இயங்குகிறது. எந்த ஓர் அறிவுத் துறையும் இப்படியொரு தன்னம்பிக்கை இல்லாமல் இயங்குவதில்லை. எனினும், அதனை நாம் முக்கியத்துவம் பெற்றதாக நினைப்பதற்குக் காரணம், இன்றைய நாளை நாம் வரலாற்றால் அளந்துவிட முடியும் என்பது மட்டுமல்ல; இன்று என்பது நேற்றின் தவறுகளைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது என்று நம்புவதால்தான்.
- ஒரு சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அதன் மக்கள் குதிரைகளின் குளம்படிகளைச் சில காலம் பின்னோக்கித் தொடர வேண்டும் என்று வரலாற்றின் குதிரைகளில் ஏறி வருகின்றவர்கள் சொல்கிறார்கள். அதனை நம்பி குளம்படிகளைப் பின்னோக்கித் தொடர்பவர்கள் பழைய சிலந்தி வலைகளில் அகப்பட்டு, யதார்த்தத்தைக் குழப்பிக்கொள்கிறார்கள். வரலாற்றிடம் கவனமாக இருப்பதற்கு பதிலாக - அதன் குதிரை வீரர்களிடமே நாம் கவனமாக இருத்தல் வேண்டும்.
மடைமாற்றும் உத்தி
- இங்கே இன்னொரு சிக்கல் எழுகிறது: வரலாற்று உண்மைகளை, தரவுகளை, கருத்துகளைத் திரிப்பவர்களுக்கு எவ்வாறு பதில் சொல்வது? அவ்வாறு பதில் சொல்வது நேர விரயமா? பொய்யின் சிறப்பான பண்பு, அதனால் ஒரு கதையைச் சொல்ல முடியும் என்பதே. பொய்யின் கதை புனையும் ஆற்றலிடம், உண்மை தன் இயல்புக்கும் மீறிப் போராட வேண்டியிருக்கும்.
- பொய் சொல்வதற்குக் கற்பனை போதும்; உண்மையைச் சொல்வதற்குக் கல்வி, துணிச்சல், அனுபவம் ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன. உண்மைக்குக் கதை சொல்லும் ஆற்றல் இல்லை. எனவே, யார் ஒருவர் துணிந்து வரலாற்றின் ஏதோ ஓர் அங்கத்தை மாற்றியமைக்க விரும்பும் வகையில் சொல்லிலும் செயலிலும் ஈடுபடுகிறாரோ அவரிடம் உள்நோக்கம் மட்டுமல்ல, அதிகாரத்துக்கான வேட்கையும் நிரம்பி உள்ளது என்று அறிவோம். கதையினால் அதிகாரத்தைக் கட்டமைக்க விரும்புகிறவர்கள், புனைவின் வசீகரத்தால் சமூகத்தைத் தன்னிலை மறக்கச் செய்து, அதன் பாதையை மடைமாற்றப் பார்க்கிறார்கள்.
எதிர்கொள்வது எப்படி?
- இப்போது வரலாற்றுத் திரிபுகளுக்குப் பதில் சொல்வது நேர விரயம் என்கிற விஷயத்துக்கு வருவோம். உள்நோக்கத்தோடும் திட்டத்தோடும் செயல்படுகின்றவர்கள் சட்டென ஒரு சமூகத்தின் அன்றாடத்தின் மீது கல்லெறிகிறார்கள். கல் எறிந்தவர்கள் பதில் தாக்குதலால் காயமடையலாம் என்றாலும், அப்படி ஒரு கல்லெறிதல் நிகழும் என்பதை யோசித்துகூடப் பார்க்காத ஒருவரே முதலில் காயமடைகிறார், வலியை உணர்கிறார்.
- இந்த எதிர்பாராத தாக்குதல் நம்மை நிலைகுலைய வைக்கிறது. நாம் தடுமாறிச் சுதாரிப்பதற்குள் கல்லெறிபவர் மற்றொரு கல்லை எறிகிறார். செயல்படாத ஒரு திட்டத்தை நிறைவேற்றத் தொடர்ந்து தனது ஆற்றல், செல்வம், நேரத்தைச் செலவழிப்பவருக்குப் பதில் சொல்வதை நமது அன்றாட வேலைகளில் ஒன்றாக மாற்ற இயலுமா? அவ்வாறு மாற்ற இயலாததால் நாம் அமைதியாகிவிட, குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காகவும் திட்டத்துக்காகவும் வரலாற்றைத் திரிப்பவர்கள் மேலும் உற்சாகம் அடைகிறார்கள்.
- இச்சிக்கலை எப்படித் தீர்ப்பது? ஓய்வே இல்லாமல் ஒருவர் வரலாற்றைக் கற்றுக்கொண்டிருக்க முடியுமா? ஓரளவுக்கு மட்டுமே சாத்தியம் உடைய ஒன்றை, ஏன் ஒருவர் தொடர்ந்து முயன்றுபார்க்க வேண்டும்? ஒரு பொய்யின் மூலம் வரலாற்றைத் திரிப்பவர்கள், போலி வரலாற்றைத் திணிப்பவர்கள், அதனை மறைக்க விரும்புகிறவர்களின் அடிப்படைகளை, நோக்கங்களை, அரசியலை அறிந்துகொண்டு அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்தல் ஒரு வழியாக அமையலாம். இதனை ‘ரத்து செய்யும் கலாச்சாரம்’ (Cancel culture) என்று அழைக்கிறார்கள். ஆனால், இது இரண்டு கூர்முனைகளைக் கொண்ட கத்தி போன்றது. இதன் பலன்கள் சந்தேகத்துக்கு உரியவை.
மாற்று வழிகளின் தேவை
- வரலாற்றுச் சிக்கல்களுக்கு எதிராகச் சமகாலச் சிக்கல்களைப் பேசுவது. ஒரு சமூகத்தை இதனை நோக்கிச் செலுத்துவதில் அதிகக் கவனம் கொடுத்தல்; தீர்வை வரலாற்றில் தேடுவதை நிறுத்துதல் ஆகியவற்றை முன்மொழியலாம். இவ்வாறு சொல்லப்படுகிற பல மாற்றுக்களும் நீண்ட காலம் எடுப்பவை; எனினும், ஓயாமல் முயல வேண்டியவை.
- எனவே, ஒரு கல்லடிக்குப் பதிலடி கொடுப்பதே உடனடியாகத் தேவை எனும்போதும், அதற்கான மாற்று வழிகளை முன்னெடுப்பதே நீண்ட காலத்துக்கு நன்மை அளிக்கக் கூடியது. கற்கோட்டையின் முன்னே அகழியை உருவாக்குவதைப் போல நீண்ட காலத் திட்டங்களுக்கு முன்பு, உடனடி பதிலடிகளும் தேவைப்படுகின்றன. எனினும், அகழியை ஆழப்படுத்த முனைவதைக் காட்டிலும் கோட்டையைப் பலப்படுத்துவதே நல்லது. அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் என்பது சோர்வுக்கு எதிரான ஊக்கத்தின் போராட்டமும் ஆகும்.
நன்றி: தி இந்து (06 – 07 – 2023)