- வத்தலகுண்டு ராஜம் ஐயருக்கும், நாகலட்சுமிஅம்மைக்கும் 4-10-1884 அன்று பிறந்தவர் சுப்பிரமணிய சிவா. நாட்டுக்காக - மொழிக்காக அவர் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா.
- சொல்லப்போனால், சிவா ஓர் இயக்கமாகவே செயல்பட்டவர்; மிகச்சிறந்த பேச்சாளர்; 'ஞானபாநு', 'பிரபஞ்சமித்திரன்', 'இந்தியதேசாந்திரி'ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்; உரிமையாளர்; ஆன்மிகப் பற்றுமிக்கவர்; இத்தனைக்கும் மேலாக அவர் 'நளினசுந்தரி அல்லது நாகரிகத்தடபுடல்' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
- பாரதியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க சிவா எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்பல ஆகும். பாரதியின் தேசியப் பாடல்களைத் தெருத்தெருவாகப் பாடிச்செல்லும் பஜனைக்குழு ஒன்றையும் சிவா ஏற்படுத்தினார். தாமும் பஜனைக் குழுவுடன் சேர்ந்து, பாரதியின் பாடல்களைப் பாடி தேசிய இயக்கத்தை வலுப்படுத்த உழைத்தார்.
- இந்தநிலையில், தம்முடைய திட்டமான பாரதமாதா கோவிலுக்கான நிதியைத் திரட்டவும்சிவா முற்பட்டார். சிவா சுதந்திரதேவியை தரிசனம் செய்யவேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டு விளங்கினார். தமது மாசுமருவற்ற தூய உள்ளத்தை 'எனதுபிரார்த்தனை' என்கிற அகவற்பாவில் திறந்து காட்டியுள்ளார்.
- இந்தப் பாடல் 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வெளியிட்ட 'தேசபக்தன்' இதழில் 1918 ஜனவரியில் பிரசுரமாகிஉள்ளது. இந்தப்பாடலின் ஒவ்வொரு வரியும் சிவாவின் எண்ணத்தை எதிரொலிக்கின்றது. நோய் தம்மை அணு அணுவாகத் தின்ற நிலையிலும், நம்நாட்டு மக்கள் ஏற்றம்அடைந்து, சொந்த நாட்டில் சுகமாய் வாழ 'பிரார்த்தனை' செய்த தியாகச் செம்மல்சிவா.
- 1916-ஆம் ஆண்டுமுதல் 1919-ஆம் ஆண்டுவரை சிவா தமது கவனத்தை நூல்களை எழுதுவதில் செலுத்தினார். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். எழுத்துலகப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, திருவல்லிக்கேணி கடற்கரையில் சொற்பொழிவுகள்செய்ததும்உண்டு.
- சிவா தம்முடைய அரசியல் தலைவராக திலகரையே ஏற்றுக்கொண்டார். தம் குருபக்திக்குச் சான்றாக, கடற்கரையில் சொற்பொழிவு நிகழும் இடத்திற்கு'திலகர் கட்டம்' என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
- 1920-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போதும், மதுரையில் நடைபெற்ற ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்த நேரத்திலும் சிவா ஆற்றிய சேவை அளப்பரியது. இதே 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக்கு பிரதிநிதியாகச் சிவா சென்றதும் குறிப்பிடத்தக்கது.
- 1921-ஆம் ஆண்டு பொங்கல் நாளன்று சிவா சந்நியாசியைப் போன்று காஷாய உடையைத் தரித்துக்கொண்டார். அதே நாளில், 'பாரதஆசிரமம்' என்ற பெயரால் ஸ்தாபனம் ஒன்றையும் நிறுவினார்.
- பாரதமாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டவும் சிவா திட்டமிட்டார். தமக்கு 'ஸ்வதந்திரானந்தர்' என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார். சில நாட்களில் நோய்வாய்ப்பட்டார். நோயினால் சிவா படும் துன்பங்களைக் கண்டு வ.வெ.சு. ஐயரின் உள்ளம் பதைபதைத்தது. அதனால், அவருக்கு உதவி செய்வதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
- பாரதியாரும் பாரதமாதாவுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதிலே மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தமது ஆசையை 'இந்தியா' வார இதழில் 'கிராமந்தோறும் பாரதமாதா கோயில்' என்று எழுதிப் புலப்படுத்திஉள்ளார்.
- 1922-ஆம் ஆண்டு தர்மபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலிய ஊர்களில் சிவா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாரதமாதா கோயிலைக் கட்ட, தீவிரமாக உழைத்தார்.
- இந்த நிலையில், பாப்பாரப்பட்டி சின்னமுத்து என்பார் சிவாவை பாப்பாரப்பட்டிக்கே வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சிவா பாப்பாரப்பட்டிக்கே திரும்பினார். அந்த ஊரிலேயே பாரதமாதா கோயிலுக்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தாமும் அங்கேயே தங்கிவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டார்.
- பாப்பாரப்பட்டிக்கு வந்துசேர்ந்தவுடன் ஊர்மக்களின் உதவிகொண்டு, நிலம் வாங்கிஅதற்கு 'பாரதபுரம்' என்ற பெயரையும் சூட்டினார். பின்னர் தேசபந்து சித்தரஞ்சன் தாûஸக் கொண்டு பாரதமாதா கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டச்செய்தார்.
- தாம் மேற்கொண்ட பாரதமாதா கோயில் பற்றிப் பல ஊர்களிலும் பேசினார். இதை பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை. எனவே, இவரைச் செயலற்றவராக்க முடிவுசெய்தது. அதனால், சிவாவுக்குற்ற நோயைக் காரணம் காட்டி, இவரைரயிலில் பிரயாணம் செய்யத் தடை விதித்தது.
- ஆனால், தடைஉத்தரவைக் கண்டு சிவா மனம் கலங்கவில்லை. கட்டைவண்டிகளில் பிரயாணம் செய்தும், கால்நடையாக ஊர் ஊராகச் சென்றும் தம் தேசிய பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
- இதன் காரணமாக, சிவாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், தேசத்தைப் பற்றியே கவலைகொண்டு, கும்பகோணம், மாயவரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலே தங்கிப் பின்னர், வேலூர், குடியாத்தம் மார்க்கமாகச் சென்னை வந்து சேர்ந்தார்.
- சிவா சென்னையில் தங்கியிருந்தபோது திருவல்லிக்கேணி கடற்கரையில் 'பாரதமாதா கோயில் மற்றும் ஆசிரமம்' விஷயமாகப் பேசிய சொற்பொழிவுகளுக்காக அரசு வழக்குத் தொடுத்தது.
- இவ்வழக்கில் சிவா தாமே வழக்காடினார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவா செய்த சாதனைகள்பற்பல. அவற்றுள்ஒன்று பாரதிக்கு நினைவுநாள் கூட்டத்தை நடத்தியதாகும்.
- தமிழ்த்தாயின் தவப்புதல்வராகவும், பாரததேவியின் திருத்தொண்டராகவும் திகழ்ந்தசிவா 23-7-1925 வியாழக்கிழமை காலை 5:00 மணிஅளவில், தமது 41-ஆவது வயதில் பூத உடலை நீத்துப் புகழுடல் பெற்றார். ஞான தீரராக வாழ்ந்து, பாரதிய மதம் கண்ட சுப்பிரமணிய சிவாவின் பெயர் என்றென்றும் தமிழக மக்களின் நெஞ்சில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- நாளை (அக். 4) தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள்.
நன்றி: தினமணி (03 - 10 – 2023)