TNPSC Thervupettagam

திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்ட சிந்துவெளி கண்டறிதல்

September 20 , 2024 117 days 160 0

திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்ட சிந்துவெளி கண்டறிதல்  

  • சிந்து​வெளிப் பண்பாடு பற்றிய பொதுவெளி உரையாடல்கள் கடந்த சில ஆண்டு​களில் பெரிதும் அதிகரித்​திருக்​கின்றன. 1924 செப்டம்பர் 20ஆம் நாள் சிந்து​வெளிப் பண்பாடு அறிவிக்​கப்​பட்டுச் சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன என்கிற ‘மைல்கல் உணர்வு’ நூற்றாண்டு (2024) விழிப்பு​ணர்வை விரிவாக்கி​யுள்ளது. இது வரவேற்​கத்​தக்கது.
  • வரலாறு என்பது முக்கிய​மானதும் தவிர்க்க முடியாததும் மட்டும் அல்ல; தப்பிக்​கவும் முடியாதது. கடந்த காலம் என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி. அது கதைகளிலும் கரிமக் கணக்கு​களிலும் மட்டும் அடங்குவது அல்ல; அது நம்முடன் நடந்தும்​வரு​கிறது, மீள்நினை​வு​களாக. வரலாறு என்பது பள்ளிப்​பாடம் மட்டும் அல்ல; சமூகத்​துக்கான படிப்​பினை​யும்கூட.
  • இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்​களோடு மட்டும் தொடர்​புபடுத்திக் காலவரையறை செய்யப்​பட்டு வந்த காலக்​கட்​டத்​தில், இந்தியத் துணைக்​கண்​டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர்மய வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்கள் மைய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையே சேரும்.
  • “சிந்து, பஞ்சாப் பகுதி​களில் வாழ்ந்த மக்கள் முதிர்ந்த பண்பாட்​டோடு, அருமை​யாகக் கட்டி​யெழுப்​பப்பட்ட நகரங்​களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்​களோடும், வளமான எழுத்​தறிவோடும் வாழ்ந்​துள்ளனர்” என்ற ஜான் மார்ஷலின் கருத்து இந்தியத் துணைக்கண்ட வரலாற்று எழுத்​தி​யலின் போக்கைப் புரட்​டிப்​போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்​ப​தென்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்பு​வாய்ந்தது.

திராவிடக் கருதுகோள்:

  • இந்தியத் தொல்லியல் துறை ‘திரா​விடக் கருதுகோள்’ (Dravidian Hypothesis) என்ற சாத்தியம் நோக்கி நகர்ந்தது. சிந்து​வெளிப் பண்பாட்டின் அறிவிப்​புக்குப் பின்னர் நேர்ந்த மிகப் பெரிய மாற்றம் இது. ‘ஆரியர்​களுக்கு முற்பட்ட சில தொல்குடிகள் இந்து மதம் என்று தற்போது அறியப்​படும் சமய மரபுக்குள் ஒருபோதும் வந்து சேரவில்லை.
  • அத்தகைய தொல்குடி​யினரின் தாய்த்​தெய்வ வழிபாடு, குறிப்​பாக, பூமித்தாய் வழிபாடு மிக வலுவானது; மிக ஆழமாக வேரூன்​றியது. இந்தியா​விலும் சரி, வேறு எங்கும் சரி... ஆரியர்கள் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த எந்த இடத்தி​லும், பெண் தெய்வங்கள் கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்குத் தாய்த்​தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்​தப்​பட்​டதற்குச் சான்றுகள் எதுவும் இல்லை’ என்று ஜான் மார்ஷல் எழுதி​யுள்​ளார்.
  • டிசம்பர் 1924இல் சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிடக் கருதுகோளைத் தெளிவாக முன்வைத்​தார். 1925 தொடக்​கத்தில் இதற்கு மாற்றான இந்தோ-ஆரியக் கருதுகோள்​களும் தோன்றின. சிந்து​வெளிப் பண்பாட்டின் மொழி, பண்பாடு ஒரு விடுகதை என்றால், திராவிடம் இந்தோ-ஆரியம் என்ற இரண்டு நிலைப்​பாடு​களும் தொடர்கதை போலவே தோன்றுகின்றன.
  • பரந்து விரிந்த ஹரப்பா பண்பாட்டு நிலப்​பகு​தியில் ஒரே வகையான மக்கள் வாழவில்லை. அதில் உள்ள பொறிப்பு​களைப் பார்த்தாலே தெரியும்; அழகான பின்னலாடையை உடுத்திய நகர மனிதர்கள், அணிகலன்களை அணிந்​தவர்கள், எருமை​யுடன் சண்டை​யிடு​பவர்கள், எருமை மாட்டின் கொம்பை வைத்து நடனமாடு​பவர்கள், பலி கொடுப்​பவர்கள், தாய்த் தெய்வங்கள், கடலில் பயணிப்​பவர்கள் என்று இந்தப் பொறிப்புகள், முத்திரைகள் பன்முகத்​தன்​மையைக் கொண்டிருப்​பதைக் காணலாம்.
  • அதே நேரத்தில் செங்கற்கள், எடைக்​கற்கள், உலோகக் கலவை, ஒரே மாதிரியான பொறிப்புகள் என்கிற தரம் சார்ந்த ஒழுங்கும் காணப்​படு​கிறது. வெளிநாட்டு வணிகமும் செழித்​திருந்தது. அத்தகைய சூழலில் பொதுவான தொடர்​புமொழி என்பது தவிர்க்க முடியாத வளர்ச்சிப் படிநிலை. ஆனாலும் அம்மொழியை இதுவரை நம்மால் வாசிக்க இயல்வில்லை. அதனால், சிந்துவெளி மொழிப் புதிர் தொடர்​கிறது.

சிந்துவெளி மக்கள் எங்கே போனார்கள்?

  • சிந்து​வெளியின் வாழ்க்கை​முறை​யில், பொருளா​தா​ரத்தில் ஏதோ ஒரு பெரிய நலிவு ஏற்பட்​டுள்ளது. ஒரு பகுதியில் வாழ்க்கை கட்டுப்​படி​யாக​வில்லை என்றால், வேறோர் இடத்துக்குப் புலம்​பெயர்வது மனித இயல்பு. அதுதான் சிந்து​வெளி​யிலும் நடந்திருக்​கக்​கூடும். நீண்ட வறட்சி, பஞ்சம் - பட்டினி, பெரும்​வெள்ளம், நிலநடுக்கம், வணிகச்​சரிவு, புதிய மொழி /பண்பாட்​டினரின் வருகை என்று காரணம் எதுவாகவும் இருக்​கலாம். அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுக்​காரணிகள் இருக்​கலாம். காரணம், எதுவாகினும் அவர்களில் ஏராளமானோர் புலம்​பெயர்ந்​தார்கள் என்பதில் ஐயமில்லை. குறிப்​பாகத் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நகர்ந்​துள்ளார்கள்.
  • சிந்துவெளி மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்பதற்குத் தொடர்ச்​சியான தொல்லியல் சான்றுகள் கிடைத்​துள்ளன. குஜராத், லோத்தல், தோலாவிரா, ராஜஸ்தான் முதலிய இடங்களில் முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிந்தைய கால ஹரப்பா பண்பாட்டின் தடயங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள தைமாபாத்தில் உள்ளன. கடல் சார்ந்​தவர்கள் கடல் சார்ந்தே நகர்வார்கள் என்றால், அவர்கள் கடற்கரையை ஒட்டி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்​திருப்​ப​தற்கே கூடுதல் வாய்ப்பு உண்டு.
  • சிந்துவெளி மக்களின் புலப்​பெயர்வை ஆராய்​வதில் மட்பாண்​டங்கள் உதவுகின்றன. மட்பாண்​டங்களை மட்டும் வைத்துப் பார்த்​தால், அந்தக் காலக்​கட்​டத்தில் கங்கை, யமுனை பகுதி சதுப்பு​நிலமாக இருக்​கிறது. மேல் கங்கை சமவெளிப் பகுதி​யில்தான் சாம்பல் பழுப்பு​நிறப் பாண்டங்​களைப் பயன்படுத்திய ஒரு பண்பாடு உருவானது. அந்தப் பண்பாட்டுடன் தொடர்​பற்​றவர்கள் கறுப்பு​-சிவப்பு மட்பாண்​டங்களை உருவாக்கிய மக்கள்.
  • சிந்து​வெளியில் அதிகமாக இருப்பது செந்நிறப் பாண்டம். தெளிவாகக் கறுப்பு​-சிவப்பு நிறப் பாண்டம் குஜராத் சூழலில் காணப்​படு​கிறது. குஜராத்தில் இருந்து ஒரு குறிப்​பிட்ட நிலையில், சிந்துவெளி மக்கள் கிழக்கு நோக்கி தபதி நதியை ஒட்டியே நகர்ந்​திருக்க வேண்டும் என்று அனுமானிக்​கவும் போதிய தடயங்கள் உள்ளன. இதுதான் இந்திய வரலாற்றின் பானைத்​தடம்.

மரபணு​வியல் ஆய்வு​களின் வழி:

  • தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லிய​மானவை என்கிற கருத்து பரவலாக நிலவு​கிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் ஆகத் தொன்மையான மரபணுத்​தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்​படுத்​தப்​படு​கிறார்கள். இம்மக்​களுடன் ஈரானிய வேளாண், வேட்டைக்​குடி​யினரின் குருதிக் கலப்பால் ஹரப்பா பண்பாடு உருவானது. இந்த ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கெனவே இங்கிருந்த தொல்தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள்தொகை உருவானது.
  • இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்​வெளி) மேய்ச்சல் பண்பாட்​டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்​தொகையும் கலந்து உருவானதே. இன்னொரு வகையில் சொல்வதெனில், இன்றைய தெற்காசிய மக்களில் பெரும்​பாலானோர் ஏதோ ஒருவகையில் ஹரப்பா பண்பாட்டு மக்கள்​தொகையோடு தொடர்​புடைய​வர்களே.

ஏன் கொண்டாட வேண்டும்?

  • சிந்துவெளி மக்கள் யார் என்கின்ற கேள்வி​யும், திராவிட மொழிக் குடும்பம், இந்தோ ஆரிய மொழிக் குடும்​பங்​களின் வழித்​தடங்கள் பற்றிய கேள்வியும் நெருக்கமான தொடர்​பு​கொண்டவை.
  • பஃறுளி ஆறும் பன்மலை அடுக்​கத்து குமரிக்​கோடும் ஆழிப் பேரலை போன்ற கடல் சீற்றத்​துக்கு இரையானதை நாம் மீள்நினை​வாகப் பதிவுசெய்​துள்ளோம். தென் மதுரை, கபாடபுரம், மதுரை, முதல், இடை, கடைச் சங்கங்கள் என்று நமது இயற்கைப் பேரிடர்கள் சார்ந்த மீள்நினை​வு​களோடு சேர்ந்து புலப்​படுவது இழந்த நூல்களும், இழந்த பண்பாடும், இழந்த நகரங்​களும்​தான். இந்த நினைவலைகளின் ஊடான ஒற்றை உண்மை புலப்​பெயர்​வு​கள்​தான். பயணங்​களால் பட்டைதீட்​டப்பட்ட ஒரு பண்பாட்டின் நடுநெஞ்சில் இருந்​து​தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’; ‘எத்திசைச் செலினும் அத்திசை சோறே’ என்பன போன்ற புரிதல்கள் புலப்​படும்.
  • “இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதரும் புலம்​பெயர்ந்​தவர்; ஒவ்வொரு​வரும் வேறெங்​கிருந்தோ வந்தவர்​தான்” என்கிறார் கவிஞர் எலிசா கிரிஷ்வோல்ட். இப்போது நாம் இருக்கும் இடத்தில்தான் யுகம் யுகமாய் முளைத்து, வளர்ந்து, நகராமல் நிற்கிறோம் என்பது போன்ற மண் சார்ந்த பேரினவாதங்​களால் நமது மொழி, இன அடையாளங்​களைக் கட்டமைக்க முயல்​கிறோம். பலரும் முன்னிறுத்து​வதுபோல இந்தியா ஒரு உருக்குப் பானை (melting pot) அல்ல.
  • அது ஒரு ‘சாலட் கிண்ண​மும்’ அல்ல. இந்தியத் துணைக்​கண்​டத்தின் பன்மி​யத்தை மழைக்​காட்டுப் பன்மியம் (Rainforest Pluralism) என்று உச்சி​முகர்ந்து கொண்டாட வேண்டும். வெவ்வேறு மொழி பேசுவோர் கூடி வாழும் பெருநகர, ஒத்திசைவு வாழ்க்கை​முறைக்கான ஒற்றை ஆவணச் சான்று சங்க இலக்கி​யம்​தான். அதனால்தான் சிந்து​வெளிப் பண்பாட்டைச் சங்க இலக்கியம் என்கிற திறவுகோல் இல்லாமல் புரிந்​து​கொள்ள முடியாது என்கிற முன்மொழிதலை வலியுறுத்து​கிறோம்.
  • கீழடி, ஆதிச்​சநல்​லூர், சிவகளை, பொற்பனைக்​கோட்டை, வெம்பக்​கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்​வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்து​வெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நின்று பேசுகின்​றன.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories