TNPSC Thervupettagam

திராவிட மாதிரி எதிர்கொள்ளும் புதிய சவால்கள்

July 12 , 2023 553 days 348 0
  • தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கும் மசோதாவைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியபோது, தொழிலாளர் உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையிலான தொழில்மயமாக்கத்துக்கான வியூகங்கள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
  • சந்தையின் மூலம் எழக்கூடிய பொருளாதார இழப்பையும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் மூலம் எழக்கூடிய சமூகப் பின்னடைவையும் நீக்குவதற்கு அனைவரையும் உள்ளடக்கிய தொழில் மயக் கொள்கையை நாடுவதே ‘திராவிட மாதிரி’யின் (Dravidian Model) முதன்மை லட்சியம். உற்பத்தித் திறனின் வழியாக வளங்களைப் பங்கிட்டுக்கொள்வதே திராவிட மாதிரியாகும்.
  • பின்னர், அந்த மசோதா பின்வாங்கப்பட்டுவிட்டாலும் அதன் மூலம் நிறைவேற்றப்படவிருந்த சட்டத்திருத்தம், மாநிலத்துக்கு அதிக முதலீடுகளைக் கொண்டுவந்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் என்று திமுக அரசு கூறியது; இது மிகவும் பிழைபட்ட புரிதல்.

தலைகீழாகிறதா கட்டமைப்பு மாற்றம்?

  • ஒரே நேரத்தில் அடிப்படை மாற்றங்களையும் வறுமைக் குறைப்பையும் சாதித்த மிகச் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்திய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் வேளாண் துறையில் உள்ள மொத்த வேலைகள் குறைவாக இருப்பதே இதற்கான முக்கியச் சான்றாகும். ஆனால், இப்போது இந்தப் போக்கு தலைகீழாகிக்கொண்டிருக்கிறது.
  • 2018-19இல் 27%ஆக இருந்த வேளாண் துறை வேலைகள், 2020-21இல் 30%ஆக அதிகரித்தன. எண்ணிக்கை அடிப்படையிலும் இது 85 லட்சத்திலிருந்து 1 கோடியே 5 லட்சமாக அதிகரித்துள்ளது. பல்வேறு இடர்ப்பாடுகளின் விளைவாகவே 20 லட்சம் பேர் வேளாண் வேலைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  • வேலைவாய்ப்புகளில் உற்பத்தித் துறையின் பங்கு 20%இல் இருந்து 16%ஆகச் சரிந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்தச் சரிவு இன்னும் துலக்கமானது. 2011-12இல் 65 லட்சத்திலிருந்து 58 லட்சம் ஆகியுள்ளது. இங்கு விவாதிக்கப்படும் காலகட்டம் தற்போதைய திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முந்தையதுதான். ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகும் இவற்றைச் சரிசெய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பவையாக இல்லை.
  • எடுத்துக்காட்டாக, 224 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதன் மூலமாக ரூ.2,73,448 கோடி மதிப்பிலான முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதில் எவ்வளவு முதலீடு உண்மையில் அடையப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
  • இதில் 4,10,561 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அரசு கூறுவதுதான் கவனிக்கத் தக்கது. அப்படியென்றால் உறுதிசெய்யப்பட்ட மூலதனத்தின் ஒரு அலகுக்கு 0.01 வேலைகள்தான் உருவாக்கப்பட்டுள்ளன (ஒவ்வொரு ஒரு கோடி மூலதனத்துக்கும் தலா ஒரு வேலைவாய்ப்புகூட உருவாக்கப்படவில்லை). இது முந்தைய நிலையைவிட மிகக் குறைவு.
  • கடைசியாக வெளியிடப்பட்ட தொழில் தரவுகளின் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி (2019-20) மூலதனத்துக்கும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கும் இடையிலான விகிதம் (பணியாளர்களின் எண்ணிக்கையும் திரட்டப்பட்ட மொத்த மூலதனமும்) தமிழ்நாட்டில் 1க்கு 0.58, குஜராத்தில் 0.34, மகாராஷ்டிரத்தில் 0.33. இந்தப் போக்கை நாம் தடுத்துநிறுத்தவில்லை என்றால் ஊதியம் குறையும், வேலைவாய்ப்புகள் மறைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
  • வரலாற்றுரீதியாக, மூலதனத்தின் தேவைகளுக்கும் தொழிலாளர்களுக்கு உரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் இடையே சமநிலையைப் பேணும் வளர்ச்சியை நாடுவதுதான் தமிழ்நாட்டின் தனித்தன்மை. உலக அளவில் மூலதனச் சொத்துகளின் பங்கு அதிகரித்ததன் விளைவாக, தேசிய வருமானத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியத்தின் பங்கு குறைந்துவந்த நிலையில் தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில் ஊதியத்தின் பங்கு, கூட்டப்பட்ட மொத்த மதிப்பு (Gross value added) என்னும் அடிப்படையில் வேறு பல மாநிலங்களைக் காட்டிலும் அதிகரித்தது. 2019-20இல் தமிழ்நாட்டில் கூட்டப்பட்ட மொத்த மதிப்பில் ஊதியத்தின் சராசரிப் பங்கு 21%. இது குஜராத்தில் 12%, மகாராஷ்டிரத்தில் 14%.
  • தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கு ஆதரவான கொள்கைகளால் உலக அளவில் ஊதியத்தின் பங்கு குறைந்துவருகிறது. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும், ஒப்பீட்டளவில் இங்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இங்கு ஊதியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கின்றன என்றால், ஒப்பந்தத் தொழிலாளர் முறை குறைவாக இருப்பதும் தொழிலாளர்களின் பேரம் பேசும் வலிமை அதிகமாக இருப்பதும்தான் காரணம்.
  • தமிழ்நாட்டில் நிறுவனங்களால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டிருந்த தொழிலாளர்களின் பங்கு, 2015-16இல் 80%. இந்த வகையில் தேசிய சராசரி 66%. ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை - ஒழிப்பு) சட்டம் 1970இன் பயன்பாடு அல்லது தவறான பயன்பாட்டால் மேற்கண்ட போக்கு வேகமாகச் சரிந்துவருகிறது (2019-20இல் தமிழ்நாட்டில் நேரடித் தொழிலாளர்களின் பங்கு 76%). இந்தச் சட்டத்தை விளங்கிக்கொள்வதில் நீதிமன்றத்திலும் தொழிற்களத்திலும் தொழிலாளர்களுக்கு எதிரான மாற்றம் நிகழ்ந்துள்ளது.
  • தமிழ்நாட்டின் பலமாகத் திகழ்ந்துவந்த விஷயம் இப்போது தேய்ந்துவருகிறது. 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி மாநில அளவிலும் தேசிய அளவிலும் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான முத்தரப்புக் குழுவை உருவாக்குவோம் என்னும் வாக்குறுதியை திமுக அளித்திருந்தது.
  • அடிமட்டத்துக்குச் செல்வதற்கான இந்த ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு இணைய வேண்டியதில்லை. தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை அளித்தும் மட்டுமே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டியில் முந்திவிட முடியும் என்பதில்லை.
  • தமிழ்நாட்டில் வலிமையான நிலையில் இருக்கும் அதன் திறன்மிகு தொழிலாளர் படை, வலுவான உள்கட்டமைப்பு, முன்னோக்கிய, பின்னோக்கிய இணைப்புகளின் மூலம் பிறருக்கு விலையில்லா நன்மைகள் (Positive externality) கிடைக்கச்செய்யும் நிறுவனமயப்பட்ட சூழல் மண்டலம் (Institutionalized ecosystem), அன்றாடச் செலவுகளைக் குறைக்கும் ஆட்சிமுறைப் பாணி ஆகியவற்றால்தான் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

திறனளித்தலும் வேலைவாய்ப்புகளின் எதிர்காலமும்

  • உற்பத்தியில் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான தானியங்கித் தொழில்நுட்பங்கள், இணையவழி வணிகப் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய போக்கு தீவிரமடையத்தான் போகிறது.
  • இதனால், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் வழக்கமான வேலைகள் கைவிடப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊதியச் செலவுகளின் பங்கு குறையும். ஒரு திறன், அது பயனளிக்கும் காலத்தின் சராசரி அளவு மென்மேலும் சுருங்கிக்கொண்டே போகும் சூழலில், உற்பத்தித் துறை மட்டுமே வருங்காலப் பணிகளுக்கான தீர்வைத் தந்துவிட முடியாது.
  • சேவைத் துறையில் அறிவுசார் தொழில்களுக்கு மாறுவது தவிர்க்க முடியாதது. பள்ளி முடித்தவர்களில் உயர் கல்விக்குச் செல்வோர் தமிழ்நாட்டில் 51.4%; இந்திய அளவில் இது 27.1%. உயர் கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியிருக்கும் இந்தச் சாதனையும் அறிவுசார் தொழில்களுக்கான மாற்றத்துக்கு உதவவில்லை. பள்ளிக் கல்வியின் மோசமான தரம்; உயர்கல்வியின் உள்கட்டமைப்புப் போதாமைகள்; தொழிற்கல்வியில் கற்பிக்கப்படும் நடைமுறைப் பயன்பாடு சார்ந்த திறன் மோசமாக இருப்பது ஆகியவை இளைஞர்களிடையே திறன் இடைவெளி அல்லது வேலைவாய்ப்புத் தகுதியின்மைப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.
  • இரண்டாம் நிலை நகரங்களில், மென்பொருள் நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன. நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் பாராட்டத்தக்கவை என்றாலும், இதுபோன்ற திட்டங்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை இப்போது தெரிந்துகொள்ள முடியாது.
  • சமூகக் கொள்கையின் பண்புசார் அம்சங்களுக்கு முகம்கொடுக்கும் புதிய அணுகுமுறையும் மதிப்புக்குரிய ஊதியத்தையும் கண்ணியமான பணிச்சூழலையும் உறுதிசெய்யும் தொழில் மயத் திட்டமுமே தமிழ்நாட்டுக்கு இப்போது தேவைப்படுகின்றன.

நன்றி: தி இந்து (12 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories