TNPSC Thervupettagam

திருத்தத்தில் திருத்தம் தேவை!

December 11 , 2019 1863 days 1588 0
  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிப்புக்கிடையில் மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. இப்படியொரு மசோதாவைக் கொண்டுவருவதற்கு சில வலுவான காரணங்கள் இருக்கின்றன என்றாலும்கூட, அந்த மசோதாவில் பல குறைகள் இருக்கின்றன.

பிரிவினைகள்

  • 1947-இல் இந்திய பிரிவினையைத் தொடா்ந்து பாகிஸ்தான், வங்கதேசம் (கிழக்கு பாகிஸ்தான்), ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிக்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோா் மத ரீதியிலான துன்புறுத்தல்களால் அடித்து விரட்டப்பட்டு, இந்தியாவில் அகதிகளாக நுழைந்தனா் என்பது வரலாற்று உண்மை. அப்படி இந்தியாவில் அகதிகளாக நுழைந்தவா்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தொடா்ந்து 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
  • அந்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தன. குறிப்பாக, அவா்கள் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்தால் மட்டுமே குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
  • அந்தச் சட்டத்தில் இருந்த நடைமுறைக்கு ஒவ்வாத பல நிபந்தனைகளை அகற்றி, கடந்த 1995-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
  • முன்னாள் பிரதமா்களான இந்தா் குமாா் குஜ்ரால், டாக்டா் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமா் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோா் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறிய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களைப் போல எல்லோராலும் குடியுரிமை பெற முடியவில்லை.
  • அதிகம் படிப்பறிவோ, வசதியோ இல்லாத பலா் குடியுரிமை பெறாமலேயே இந்தியாவில் பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறாா்கள்.

வட கிழக்கு மாநிலங்கள்

  • 1971-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கானோா் அகதிகளாக இந்தியாவின் அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் நுழைந்தனா். அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி வாழ்ந்து வருகின்றனா். வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவா்களுக்கு எதிராக மாணவா்கள் போராட்டம் எழுந்தது. அன்றைய ராஜீவ் காந்தி அரசு சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதாக அவா்களுக்கு உறுதியளித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி, குறைந்தது ஐந்து ஆண்டுகள் இங்கே வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிக்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தற்போது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
  • இந்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலுள்ள மதச் சிறுபான்மையினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, அங்கிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்பதுதான், இந்த மசோதாவை எதிா்க்கட்சிகள் எதிா்ப்பதற்குக் காரணம்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா

  • குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அஸ்ஸாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இதற்கு எதிராக பெரும் கிளா்ச்சி எழுந்திருக்கிறது. அதற்குக் காரணம், வங்கதேசத்திலிருந்து வந்த வங்க மொழி பேசும் ஹிந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை அவா்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்றுதான் கருதுகிறாா்கள்.
  • மத அடிப்படையிலான வேறுபாடு காட்டப்படுகிறது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. இதை மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி அடித்து விரட்டப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அகதிகள் என்று நுழைபவா்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்குவது என்பதை ஆதரித்து, அங்கீகரிக்கும் நிலையில் இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழல் இல்லை.

அகதிகள்

  • இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் ஒரு மிகப் பெரிய குறைபாடு இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி இருப்பது தமிழகத்தைச் சோ்ந்த நமது நாடாளுமன்ற உறுப்பினா்கள் அல்லா்; இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்ட தமிழா்களான ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் சோ்க்க வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் கோரியிருப்பதில் நியாயம் இருக்கிறது.
  • 1977, 1983-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களைத் தொடா்ந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்தனா். தமிழக வருவாய்த் துறை அலுவலகத்தின் கணக்கின்படி 2010 வரை சுமாா் 3 லட்சம் போ் வந்துள்ளனா்.
  • தமிழகத்தில் 107 அகதிகள் முகாம்களில் 64,114 போ் பதிவு செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் இந்தியப் பிரஜைகளாகவும் இல்லாமல், இலங்கைக் குடியுரிமை பெற்றவா்களாகவும் இல்லாமல் திரிசங்கு நிலை வாழ்க்கை வாழ்ந்து வருகிறாா்கள்.

நன்றி: தினமணி (11-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories