TNPSC Thervupettagam

திருப்தி இல்லையேல்...

April 10 , 2019 2088 days 1393 0
  • கடந்த 1951-இல் நடைபெற்ற தேர்தலில் 30 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2014-இல் 83.40 கோடி வாக்காளர்களும் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் 90 கோடி வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தகுதி
  • மக்களின் குரலே மகேசன் குரல் என்பதைப் போல தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப்பட்டாலும் தகுதியானவர்களாகி விடுகிறார்கள். என்ன செய்ய? ஜாதி, மதம், மனம்தான் தேர்தலில் பிரதான காரணிகளாக வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்றன. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கான உயர்ந்த மரியாதையும், அங்கீகாரங்களும் ஐந்து ஆண்டுகளுக்குக் கிடைத்துவிடும்.
  • தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பார்கள் என்றால், அதற்கு பதில் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. இப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குச் செல்வதால் என்ன பயன்? இதற்குத்தான் தங்களுடைய மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டுமென்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்து வருகிறது.
திரும்ப அழைத்தல்
  • தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்க இந்தியாவில் முதன்முதலாகக் குரல் கொடுத்தவர்கள் 1944-இல் எம்.என்.ராய், 1974-இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆவர். மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது என்றார் ஜேம்ஸ் மில்.
  • தற்போது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிலிப்பின்ஸ், தைவான், உக்ரைன், வெனிசூலா, போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா, உகாண்டா, கயானா, கனடாவில் உள்ள சட்டப்பேரவைகளில், அமெரிக்காவில் அலாஸ்கா, ஜார்ஜியா, கன்சாஸ், மின்னசோட்டா, மொன்டானா, ரோட் தீவு மற்றும் வாஷிங்டன் போன்ற மாகாணங்களுடைய உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல உலக நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.
  • திரும்ப அழைக்கும் முறை முதன்முதலாக 1903-ஆம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கடைப்பிடிக்கப்பட்டது. கனடாவில் சீர்திருத்தக் கட்சி இதை தனிநபர் மசோதா மூலம் தொடக்கத்தில் வலியுறுத்தியது. ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும் உரிமையை நடைமுறைப்படுத்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவில்
  • ஏன், இந்தியாவில்கூட மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமைக்காக  10 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் திருத்தப்பட்டது.
  • குஜராத் மாநிலத்திலும் இது பரிசீலனையில் உள்ளது. திரும்ப அழைக்கும் முறையை வலியுறுத்தி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் வருண் காந்தி தாக்கல் செய்துள்ளார்.
  • பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது பாராட்டத்தக்கது.
  • நாட்டின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் மக்களிடமே உள்ளது. இறையாண்மை, பொது வாழ்வின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லாமல், தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமையை வாக்களித்த மக்களுக்கு வழங்க வேண்டுமென 50 ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. அவையின் பொதுச் செயலாளராக இருந்த மியான்மரைச் சேர்ந்த உதாண்ட் வலியுறுத்தினார்.
  • தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதிமொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான்.
ஜனநாயகக் கடமை
  • தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் சுமார் 80 சதவீதம், தங்கள் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயகக் கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும்.
  • மக்களின் திருப்திக்கு மாறாக தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் செயல்படுத்தாமல்  இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும்  உரிமையை (ரைட் டூ ரீகால்) மக்களுக்கு வழங்க வேண்டும். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.
  • திரும்ப அழைத்தல் என்ற முறை ஒரு வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், லஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் போன்றஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாட்டை ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
  • ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரைத் திரும்ப அழைக்கும் உரிமையை, அந்தக் குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு தடையாக அமையும். அரசியல் அறிவியலின்படி சமன்பாடுகளும் தடைகளும் நேர்மையான நல்ல நிர்வாகத்தை நடத்த அவசியமான காரணிகளாகும். சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106-இல் இந்தக் கொள்கை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பணி
  • அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு கண்காணிக்க உரிமையுள்ளது எனக் கூறப்பட்டது. அவ்வாறு தவறினால், தங்களைத் திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
  • சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல்வேறு சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டுபோய்விட்டது என்பது வேறு விவகாரம். திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்குக் கொண்டு வரலாம்.
  • இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் நடைமுறைப்படுத்துவது எளிதல்ல என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இது குறித்தான ஓர் ஆரோக்கியமான விவாதம் இந்தியாவில் நடப்பது வரவேற்கத்தக்கது.
  • நீதித் துறையிலும் ஊழலென்று தினமும் செய்திகள் வெளியாகின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள் நேர்மையாக தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குபடுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.
  • திரும்ப அழைக்கும் கொள்கை நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சரியாகச் செயல்படும்.
  • திரும்ப அழைக்கும் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. வெற்றி பெற்றுச் சென்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்குத் திருப்தியாகச் செயல்படவில்லை எனில் மக்களே மனுக்களைக் கொடுத்து முறையாகத் திரும்ப அழைப்பதாகும். மக்கள் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளைச் சரி செய்து திருத்துவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இன்று நம்மிடையே உள்ளது.
  • இப்படியான புரையோடிய நிலையில் நம் அமைப்புகளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க சில விவாதங்களும் நடத்த வேண்டும். அந்த வகையில் அரசியலில், பொது வாழ்க்கையில் நேர்மை என்ற இலக்கை அடைய திரும்ப அழைக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • இந்த நிலையில், 1970 காலகட்டங்களின் பலரையும் கவர்ந்த புதிய கவிதைகள், புதினங்களையும் படைத்த சுப்பிரமணியராஜு தமது கவிதையில், வாயைக் கழுவ தண்ணீரைப் பார்த்தால் தண்ணீரே அசுத்தமாக உள்ளது என்று கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. எல்லா அமைப்புகளையும் சுத்தப்படுத்த வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது.
  • மேலும், இந்தியாவில் மொத்தம் 2,301 கட்சிகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் கணக்கு. இதில் எத்தனை கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன என்பது கேள்விக்குறி. இத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் சின்னங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
சின்னங்கள்
  • ஏனெனில், மொத்தம் 86 சின்னங்களைத்தான் சுயேச்சை வேட்பாளர்களுக்காக ஒதுக்க முடியும். சில கட்சிகள் விளம்பரத்துக்காக தேர்தலில் நின்று ஊடக வெளிச்சத்துக்காக கட்சி என்ற பெயரில் பதிவு செய்து தனிநபராக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
  • இவர்களெல்லாம் வெற்றி பெறுவதால் என்ன பயன்? தேர்தல் திருவிழா அல்ல. நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற, மக்களால் மக்களுக்காக ஜனநாயக முறையில் முடிவெடுக்கும் முறைதான் தேர்தல் என்று மனதில் நிறுத்த வேண்டும்.
  • இன்று தேர்தலில் எவரும் போட்டியிடலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதில் தவறான புரிதலுடன் வாக்காளர்கள் தீர்ப்பளிப்பதால் மக்கள் விரோத சக்திகள் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு மாற்றம்தான், திருப்தி இல்லையேல் மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்தலாகும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories