- பெண்கள், ஆண்கள், குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது திருமணங்கள் குறித்துப் பேசியே ஆக வேண்டும். திருமணம் என்பதே மனிதர்களின் சுயநல ஏற்பாடுதான். தனக்கென ஒரு மனைவி, தனக்கு மட்டுமே பிறந்த பிள்ளைகள் என்கிற உத்தரவாதத்துக்கு ஒவ்வோர் ஆணுக்கும் பெண் தேவைப்பட்டாள். அவள் வீட்டுப்படி தாண்டாமல் இருக்கவும், மற்ற ஆண்களைச் சந்திக்கும் வாய்ப்பை முறியடிக்கவும் பல கற்பிதங்களை அந்தக் காலத்தில் வகுத்தனர்.
- பெண் பூ போன்றவள், தெய்வம் போன்றவள் என்று சொல்லிப் பாதுகாக்கப்பட வேண்டியவளாகச் சித்தரித்தனர். கோயில்களில் சிலைகளைக் கருவறையில் வைத்துப் பூசிப்பதுபோல அவளை மதித்து இவர்கள் பூசிப்பதாகவும் ஒரு மாயையை உருவாக்கினர்.
கற்பிதங்கள் பலவிதம்
- அவளுக்குப் படிப்பு அவசியமில்லை, உலக ஞானம் அவசியமில்லை, அறிவு வேலை செய்ய வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டது. வீட்டில் இருப்பவர்களைக் கவனிக்கும் பொருட்டு வகை வகையாகச் சமைக்கவும், வீட்டை அலங்கரித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கணவனின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கவும், பிள்ளை களைப் பெற்றுக்கொண்டு அவர்களைப் பராமரிக்கவும் அவளின் உழைப்பு தேவைப்பட்டது.
- அப்போதுதானே ஆண் செளகரியமாகக் குடும்பத் தலைவன் என்று அதிகாரம் செய்து வாழ முடியும்! சட்டப்படி ஆணும் ஒரு திருமணம்தான் புரியலாம் என்றாலும், வெளியே செல்லும் ஆண் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். அதற்கும் செளகரியமாக ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்திவைத்துக்கொண்டார்கள்.
- யார், யாரைத் திருமணம் செய்யலாம் என்பதிலும் சுயநலமே அடித்தளமாக இருந்தது. குடும்பத்தில் உள்ள சொத்து வெளியாட்கள் வந்து அனுபவித்துவிடக் கூடாது என்பதால் நெருங்கிய உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்துவைக்கப்பட்டன. விவரம் தெரியும் வயது வந்துவிட்டால், தன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியாமல் போய்விடுமோ என்று குழந்தையாக இருக்கும்போதே பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்துவிடுவதும் வழக்கமாக இருந்தது.
திருமணச் சந்தை
- ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிப்பதே பெண்ணின் பாக்கியம் என்பதுபோல் ஆக்கப்பட்டதால், திருமணம் என்பது வியாபாரச் சந்தையானது. எந்தப் பெண் நிறைய பணம் கொண்டு வருகிறாளோ அவள்தான் தேர்ந்தெடுக்கப்படுவாள். ‘பொண்ணும் முத்தா இருக்கணும், பணமும் பத்தா இருக்கனும்’ என்றொரு சொலவடையே உண்டு. பெண் அழகாகவும் இருந்து பணமும் நிறைய கொண்டுவருவதாக இருந்தால் அவளைத் திருமணம் செய்ய நிறைய பேர் போட்டி போடுவார்கள். இந்த வழக்கத்தால், பெண்ணுக்கு அறிவைவிட அழகு முக்கியமானது என்று பரப்பப்பட்டது.
- வசதியில்லாத பெற்றோருக்குப் பெண் குழந்தை சுமையாகிப்போனாள். இதிலிருந்து பிறந்தவைதான் பெண் சிசுக் கொலைகள். ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ளாத மனைவியை விட்டுவிட்டோ அல்லது உடன் வைத்துக்கொண்டோ இன்னொரு பெண்ணை ஆண் மணந்துகொள்வது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு அறிவியல்ரீதியாக இருவருமே காரணமாக இருக்கலாம் என்கிற உண்மையும் குழந்தை ஆணாகப் பிறக்காமல் இருப்பதற்குப் பெண் காரணமல்ல என்கிற உண்மையும் ஒதுக்கப்பட்டன. சிறு வயதுப் பெண் பிள்ளைகளை வயதான, ஏற்கெனவே பல திருமணங்கள் புரிந்து பல பிள்ளைகளை வைத்திருக்கும் ஆணுக்குத் திருமணம் செய்துவைக்கும் வழக்கமும் அந்தக் காலத்தில் வெகு சாதாரணமாக நடந்துவந்தது.
ஒளியேற்றிய சீர்திருத்தம்
- திருமணங்கள் இப்படியான சொர்க்கங்களில் நிச்சயிக்கப்பட்டன என்றால், ஒரு வேளை திருமணத்துக்குப் பிறகு மனைவி இறந்துவிட்டால் கணவன் தன்னையும், தன் பிள்ளைகளையும், தன் பெற்றோர்களையும் பராமரிக்க இன்னொரு பெண்ணை மணக்கலாம். ஆனால், ஒருவேளை கணவன் இறந்துவிட்டால் அவள் காலத்துக்கும் தான் மட்டுமோ இல்லை பிள்ளைகள் இருப்பின் பிள்ளைகளுடனோ தன் தந்தை அல்லது தமையனின் தயவில் தன் மிஞ்சிய வாழ்நாளைக் கழிக்கவேண்டும்.
- அவர்களின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று பேசப்போவதில்லை. உடன்கட்டை ஏற்றிய வழக்கத்தையும் இங்கு பேசவே போவதில்லை. சிறிது நிதானித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்தக் காலத்தில் வசதி குறைவான குடும்பங்களின் பெண்கள் பெருவாரியாக வயதானவர்களுக்குத்தான் மனைவியானார்கள். அப்போதுஅந்தப் பெண்களில் எத்தனை பேர் சிறு வயதிலேயே கணவனை இழக்கும் ‘அபாக்கியவதிகள்’ ஆகியிருப்பார்கள்!
- காலப்போக்கில் இந்தப் பழக்க வழக்கங்கள் சட்டச் சீர் திருத்தங்களாலும், முற்போக்குச் சிந்தனை கொண்ட சில தலைவர்களின் வழிகாட்டுதலாலும், மேற்கத்திய நாடுகளின் தாக்கங்களாலும், பெண் கல்வி முன்னெடுப்புகளாலும் வெகுவாகக் காணாமல் போய்விட்டாலும், இன்றும் அங்கும் இங்கும் சட்ட விரோதமாகச் சிலர் பெண்களுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கத்தைக் கைவிடாமல்தான் இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் கணவனை இழந்த பெண்களை மறுமணம் செய்யவிடாமல் தடுக்கும் குடும்பங்கள் உண்டு. அவள் எந்த நல்லதுக்கும் சேர்த்துக்கொள்ளப்படாத வழக்கங்களும் இன்னும் முழுதாக வழக்கொழிந்து போய்விடவில்லை என்பதே உண்மை.
சீரமைப்பது அவசியம்
- நம் சமூகத்தில் திருமணம் என்பது பெருவாரியாகப் பெற்றோர்களால் / வீட்டுப்பெரியவர்களால் நிச்சயிக்கப் படுகிறது. சாதி, அந்தஸ்து, உறவுமுறை என்று பல அடிப்படைகள் காரணிகளாக இருக்கின்றன. எத்தனையோ வகைகளில் எத்தனையோ மாற்றங்களை, முன்னேற்றங்களை நாம் கண்டுவிட்டாலும் இன்னும் தனக்கான இணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமல்ல பாவம் அது ஆண்களுக்கும் பல குடும்பங்களில் கொடுக்கப்படவில்லை.
- திருமணம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமா? அதைத் தனிமனிதர் நிர்ணயிக்க வேண்டுமா அல்லது மற்றவர்களா? திருமணம் வேண்டாம் என இருப்பவர்களுக்கு ஏன் இவ்வளவு அழுத்தங்களை நட்பும் சுற்றமும் கொடுக்க வேண்டும்? அவசியம் என்று ஒரு தனிமனிதர் நினைத்தாலும், அவர் யாருடன் வாழவேண்டும் என்பதை யார் நிர்ணயிக்க வேண்டும்? அதற்கான உரிமை படைத்தவர் யார்?
- திருமணம் செய்துகொள்ளும் இருவருக்குள் எல்லாம் சரியாக அழகாக அமைந்துவிட்டால் அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகவும், சரியாக அமையாதபட்சத்தில் மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லிச் சமாதானப்படுத்துவதும் ஆறறிவு கொண்ட மனிதர் பேசும் பேச்சா? முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, திருமணம் என்பது பல காரணங்களின் பொருட்டு மனிதர் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிறுவனமே தவிர, இயற்கையின் செயல் அல்ல. இயற்கையையோ, கடவுளையோ, நம் மற்ற நம்பிக்கைகளையோ கைகாட்டி விட்டுக் கடந்து சென்றுவிட முடியாது. இது மனிதனின் செயல். நாம் ஏற்படுத்திய நிறுவனத்தில் பிரச்சினை என்றால் அதைத் திருத்திச் சீரமைக்க நாம்தான் முயலவேண்டும்.
நன்றி: தி இந்து (23 – 07 – 2023)