TNPSC Thervupettagam

திருமணம் வேண்டாமா அதையும் பதிவு செய்யுங்கள்

February 11 , 2024 321 days 317 0
  • உத்தராகண்ட் மாநிலச் சட்டமன்றத்தில் பிப்ரவரி 6 அன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பிரிவில் திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு (லிவ் இன் ரிலேஷன்ஷிப்) விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் விவாதத்தை எழுப்பியுள்ளன. திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதிவு செய்யத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் கழித்தும் பதிவு செய்யாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது ஆறு மாதச் சிறைத் தண்டனையாகவோ 25 ஆயிரம் ரூபாய் அபராதமாகவோ இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது அந்த உறவைத் திருமணம் என்கிற வரையறைக்குள் தள்ளுவதைப் போன்றது. திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் சட்டரீதியான சடங்குரீதியான நடைமுறைகள் எதுவும் இன்றித் திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது மசோதாவின் இந்த நிபந்தனை எனவும் விவாதம் எழுந்துள்ளது.
  • 21 வயதுக்கு உள்பட்டவர்கள் சேர்ந்து வாழும்போது அவர்களின் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற்று அதன் பிறகே பதிவுசெய்ய முடியும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபந்தனைகள், 18 வயதுக்குக் குறைவானோரின் திருமணத்தைத் தடுப்பதோடு, ஏற்கெனவே மணமானவர்கள் வேறொருவருடன் சேர்ந்து வாழ்வதையும் தடுக்கும் என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்குள் வராமல் வயது வந்த இரண்டு பேர் சேர்ந்து வாழ்கிறபோது அது பெண்களைப் பெருமளவு பாதிக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு எனவும் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதி பிரிய நேர்ந்தால் அதையும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அந்த உறவில் இருந்த பெண்ணுக்குச் சட்டரீதியான இழப்பீடும் பாதுகாப்பும் கிடைக்க இது வழிசெய்யும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், மனமொத்த இரண்டு பேர் திருமணம் புரிந்துகொள்ளாமல் நீண்ட காலம் சேர்ந்து வாழும் உறவில், பெண்ணுக்குச் சொத்துரிமையும் பிரிந்து வாழ நேர்கிறபோது இழப்பீட்டு உரிமையும் உண்டு என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேர்மாறாக இந்த விளக்கம் உள்ளது.
  • இந்த உறவில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் உண்டு என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் இருவருக்குப் பிறக்கும் குழந்தைக்குச் சட்டரீதியான அனைத்து உரிமைகளும் உண்டு என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சொல்லியிருக்கும் நிலையில், பொது சிவில் சட்டத்தில் இப்படியொரு பிரிவுக்கும் நிபந்தனைகளுக்கும் என்ன அவசியம் என்பதே பலரது கேள்வி. சேர்ந்து வாழ்ந்தாலோ பிரிந்தாலோ அதைப் பதிவு செய்தாக வேண்டும் என்பது தனி மனித உரிமைக்குள் தலையிடுவதாக அமையும் எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். தன் பாலினத் தம்பதியினர் இந்த வகைமைக்குள் வர மாட்டார்கள் என்பதால் அதுவும் பேசுபொருளாகியிருக்கிறது.
  • நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதையும் பொது சிவில் சட்டத்தின் ஓர் அம்சம் தடைசெய்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இப்படியான திருமணங்கள் வரவேற்கத்தக்கவையல்ல என்கிறபோதும் திருமணம் உள்ளிட்ட மனிதர்களின் தனி உரிமையில் அரசு தலையிடுவது முறையல்ல என்கிற வாதமும் எழுந்துள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories