TNPSC Thervupettagam

திருமெய்யம் ஒப்பந்தம்

August 11 , 2024 157 days 169 0
  • புதுக்​கோட்டைக்கு அருகில் உள்ளது திருமெய்யம். பொதுக் காலம் 7 - 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்​பட்டன. ஒன்று, குன்றின் மேற்பகுதியில் அமைய, கீழ்ப்​பகுதியில் சிவபெரு​மானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்​நாட்​டளவில் பள்ளி​கொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்த​போதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்​பாளர்​களின் எண்ணிக்​கை​யிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளி​கொண்ட​வருடன் செய்தமைத்​தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்​ளார்​. சிவபெருமான் குடைவரையும் லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்​நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்​கிறது. இரண்டும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்​கப்​பெற்று, வாகான வருவாய் திட்ட​மிடப்​பட்​டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்​பங்​களாய்த் தொடங்கி, சச்சரவு​களாய் வெடித்து வழிபாட்டு நிறுத்​தத்தில் முடிந்தன.
  • எத்தனை காலம் இந்நிலை நீடித்தது என்பது தெரியாத​போதும் இதற்கான விடியல் பொ.கா.1245இல் வந்ததை இங்குள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது. சோழர், பாண்டியர் பகையால் தமிழ்​நாட்​டிற்குள் நுழைந்த மைசூர் ஹொய்சளர் திருச்​சிக்கு அருகில் தலைநகரை உருவாக்கி ஆளத் தொடங்கிய காலமது. ஹொய்சள அரசர் வீரசோமேசுவரரின் படைத்​தலை​வர்கள் மெய்யத்தை உள்ளடக்கிய கானநாட்டை வென்றிருந்​தனர். மெய்யத்தின் இரு கோயில் பூசல்​களும் பூசை நிறுத்​தமும் அவர்கள் கவனத்​திற்கு வந்தபோது, உரியவாறு அதை நேர்செய்யக் கருதிப் பெருங்​கூட்டம் ஒன்றைக் கூட்டினர்.
  • கானநாடு மட்டுமல்​லாது, சுற்றிலும் உள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களின் ஆட்சிக் குழுவினருடன், இது சைவ, வைணவக் கோயில்​களுக்கு இடையிலான சிக்கல் என்பதால் கானநாட்டுச் சைவ, வைணவப் பெரிய​வர்கள், அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் அழைக்​கப்​பட்​டனர். சைவர்கள் பக்கம் பேசத் திருக்​கொடுங்​குன்றம் சைவாச்​சா​ரியார்​களும் வைணவத்​திற்குத் துணைநிற்கத் திருக்​கோட்​டியூர் திருப்​பாணதாதர் குழுவினரும் வந்திருந்​தனர். ஹொய்சளப் படைத் தலைவர்களான ரவிதேவரும் அப்பண்​ணரும் முன்னிலை வகித்தனர்.
  • ‘வருவாய் இரு கோயில்​களுக்கும் பொதுவாக இருந்​ததால் பங்கிட்​டுக்​கொள்​வதில் சிக்கல். ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்த சச்சரவு​களால் முதல்கள் அழிந்தன. பூசை நின்றது’ என்று நிர்வாகம் சொல்ல, கோயில் கணக்கு​கள் ஆராயப்​பட்டன; சொத்து ஆவணங்கள் சோதிக்​கப்​பட்டன. இருப்​பதும் இழந்ததும் தெரிய​வந்தது. இவர்களும் அவர்களு​மாய்க் குறைகளை அடுக்​கினாலும் இருந்​தவரில் சார்பற்றோர் முடிவுகளை நோக்கிப் பேச்சை நகர்த்தினர். இரு கோயிலாரும் இணங்கிய பிறகு, படைத் தலைவர்கள் முன்னிலையில் திருமெய்யம் ஒப்பந்தம் கையெழுத்​தானது.
  • ஒப்பந்​தத்தின் முதல் கூறாய் வருவாய் திட்ட​மிடப்​பட்டது. மெய்யத்​திலும் அதற்கடங்கிய சிற்றூர்​களிலும் பயிரிடப்பட்ட நிலவிளைச்​சலில் கோயில் கடமையாக வரவான நெல் வருவாய் ஐந்து கூறுகளாக்​கப்​பட்டு, பெருமாள்​கோ​யிலுக்கு மூன்றும் சிவன்​கோ​யிலுக்கு இரண்டு​மாய்ப் பிரிக்​கப்​பட்டது. அருகருகே இருந்த இவ்விரு கோயில்களைத் தச்ச முழக்​கோலால், ஒரு முழம் கனத்தில் சுவரெடுத்துப் பிரிக்​கவும் அச்சுவர் எங்கிருந்து, எப்படி, எதுவரை நீள்வது என்பது குறித்தும் முடிவுசெய்​ததுடன், சுவர் நீளும் வழியிலுள்ள மரங்களை அகற்றவும் சுவரமைப்புச் செலவை இரு கோயில்​களும் நெல் வருவாய் பெற்ற அதே விகிதத்தில் பகிர்ந்து​கொள்​வதென்றும் தீர்மானித்​தனர். எல்லைகளும் முறையாக வரையறுக்​கப்​பட்டன.
  • கிழக்குச் சுனை பெருமாளுக்கும் மேற்குக் கிணறு சிவபெரு​மானுக்கும் ஆயின. நீர்நிலைகளில் தூர் எடுக்​கும்போது அவ்வக்​கோயில் உற்சவப் படிமங்களை எழுந்​தருளுவித்துக் கொள்ள அனுமதி​யா​யிற்று. ஊர் நிலப்​பகுதி ஒன்று ஐந்து கூறுகளாக்​கப்​பட்டு, மூன்றின் விளைவு பெருமாளுக்கும் இரண்டின் விளைவு சிவபெரு​மானுக்​குமாய் ஒப்பந்​த​மானது. விஷ்ணு கோயிலுக்கான பழங்கொடைகளாக விளங்கிய அண்டக்​குடி, பெருந்துறை நிலங்கள் அவர் பெயரிலேயே உறுதி​செய்​யப்​பட்டன.
  • இரு கோயில்​களும் அவரவர் வருவாயில் கருவிக் கலைஞர்​களைப் பணியமர்த்திக் கொள்ளவும் அந்தந்தக் கோயிலுக்கென அளிக்​கப்​பட்​டிருந்த பழங்கொடைகள் பழநடை மாறாது நின்று நிலவவும் ஆணையானது. கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் சிலர் விலைக்கு வாங்கி, வரியிறுக்க முடியாமல் நாட்டுப்​பொதுவாக ஓலையெழுதித் தந்த மேலைப்பாதி நிலமும் அதன் வரி வருவாயும் இரு கோயில்​களுக்கும் சரிபாதி​யாகப் பகிரப்​பட்டது.
  • இங்குள்ள மற்றொரு கல்வெட்​டால், ‘வைஷ்ணவ மாகேசுவரம்’ என்று சுட்டப்​படும் இந்தத் திருமெய்யம் ஒப்பந்​தத்தின் இறுதிப்​பகுதி முக்கிய​மானது. இரு கோயில் நிர்வாகமும் அவரவர் கோயிலுக்​குரிய கல்வெட்​டுகள் அடுத்தவர் கோயிலில் இருந்தால் அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயிலில் பதிவுசெய்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் முதற்​கூறு. இக்கல்​வெட்டுப் படிகளை ஏற்காதவர்கள், ‘ராஜ, மாத்ரு, நாட்டுத் துரோகி​களாய்க் கருதப்​படுவர். அவர்களுக்குப் பிறப்பு, இறப்புத் துன்பங்கள் நேரும்’ என்று எச்சரிக்கும் ஒப்பந்தம், அவர்கள் அரசிற்கு 200 அச்சுத் தண்டமும் தர வேண்டும் என்கிறது.
  • இரண்டாம் கூறு இரு கோயில்​களும் இரு வேறு வளாகங்​களாகப் பிரிந்த நிலையில், இரண்டுக்கும் பொதுவான இடத்திலும் பிற பகுதி​களிலும் நேர்ந்த கல்வெட்​டழிப்பு. சிவன்​கோ​யிலில் மூன்று கல்வெட்​டுகள் அழிக்​கப்​பட்டன. அவற்றுள், ‘பாஷை தெரியாத கல்வெட்டு’ என்ற சுட்டலுடன் இவர்களால் அழிக்​கப்பட்ட கல்வெட்டு, புகழ்​பெற்ற குடுமியான்மலை இசைக் கல்வெட்​டொத்த அமைப்பில் இக்குடைவரை பெற்றிருந்த மற்றோர் இசைக் கல்வெட்​டாகும். அதை அழித்த இடத்தில்தான் 40 பேர் கையெழுத்​திட்​டுள்ள இந்தத் திருமெய்யம் ஒப்பந்தம் மறு செதுக்​கலாய்க் கண்சிமிட்​டு​கிறது. இவர்களின் அழிப்​பையும் மீறி பழைய இசைக் கல்வெட்டின் எச்சங்கள் இந்தப் புதிய பொறிப்​பினூடே ஆங்காங்கே தலைகாட்​டுவதுஇவர்தம் செய்நேர்த்திக்குச் சான்றாம்!
  • இந்த ஒப்பந்​தத்தால் இரு கோயில்​களுக்கும் இடையே அமைதி நிலவியதா என்றால், இல்லை என்கிறது இங்குள்ள இன்னொரு கல்வெட்டு. சிவன்​கோயில் கருவிக் கலைஞர்​களுக்கான நிலமளிப்பில் திருவேங்​கடத்து நம்பி செந்தாமரைக் கண்ணரால் நேர்ந்த துன்பத்தை ஈடுசெய்ய, அக்கோயில் நிர்வாகம் மீண்டும் நாடு, நகரம், ஊராட்​சிகளை அணுக, அம்முறையீட்டில் உண்மை இருப்பது உணர்ந்த அப்பெருங்​குழு, மெய்யம் சபைக்கு இச்சிக்​கலைத் தீர்க்க ஆணையிட, ஒருவாறாக உரியது நடந்து தீர்வேற்​பட்டது.
  • பகிர்ந்து​கொள்ளும் பேரன்பு இறை வளாகங்​களில்கூட இல்லாமல் போனமையால், இரு கோ​யில்கள்​ இழந்​ததும் அந்த இழப்பை நேர்​செய்ய ஊரும் நாடும் ஆட்​சி​யாள​ரும் ஒன்​றுகூடி உழைத்​ததும் திரு​மெய்யம்​ ஒப்​பந்​தத்​தின் நேர்ப்​பார்​வையென்​றால், மரங்கள்​ வெட்​டப்​பட்​டதும் வரலாற்றுச் சான்​றுகளான கல்​வெட்​டுகள் அழிக்​கப்​பட்​டதும் அதன் எதிர்ப்​பார்​வை​யாய்​ நிற்​கின்​றன.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories