TNPSC Thervupettagam

திரைத் துறைப் பெண்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமையே!

July 30 , 2024 9 hrs 0 min 11 0
  • மலையாளத் திரைப்படத் துறையில் பெண்களின் நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கையை வெளியிட கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. கேரளத்தில் 2017ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார்.
  • இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர் அமைப்பான ‘அம்மா’ பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகச் செயல்படாமல் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பைப் பாதுகாப்பதாக நடிகை பார்வதி, மஞ்சு வாரியர், படத்தொகுப்பாளர் பீனா, இயக்குநர் அஞ்சலி மேனன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தனர். மேலும், நடிகைகள் பலர் திரைத் துறையில் தங்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல், தொழில் சுரண்டல்களை வெளிப்படுத்தினர்.
  • இந்தப் பின்னணியில்தான் திரைத் துறையில் பெண்களின் குரலைப் பேசத் தனி அமைப்பு அவசியம் எனக் கருதி டபுள்யூ.சி.சி (Women in Cinema Collective) அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டியும் மலையாளத் திரைத் துறையில் பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தது.
  • இதன் அடிப்படையில், நீதிபதி ஹேமா தலைமையில் 2017இல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. திரைத் துறைப் பெண்கள் தொடர்பாக இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது நம்பிக்கை அளிக்கும் நகர்வாகப் பார்க்கப்பட்டது. இந்த ஆணையம் 2019 இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
  • ஆனால், அந்த அறிக்கையில் மலையாளத் திரை பிரபலங்கள் பலரின் அந்தரங்கம் சார்ந்த தகவல்கள் இருப்பதாகக் கூறி, அறிக்கையை வெளியிட அரசு மறுத்துவிட்டது. எந்த முன்னேற்றமும் இன்றி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தகவல் உரிமை ஆணையத்தை டபுள்யூ.சி.சி அங்கத்தினர் நாடினர்.
  • தகவல் உரிமை ஆணையம் ஹேமா ஆணைய அறிக்கையை வெளியிட மறுத்ததற்காக மாநில அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் வலியுறுத்தும் விஷயங்கள் தவிர்த்து, மற்ற அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
  • இதையடுத்து, ஜூலை 24ஆம் தேதி ஹேமா ஆணைய அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட இருந்த நிலையில், சஜி பறையில் என்கிற தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் அறிக்கையை வெளியிட கேரள உயர் நீதிமன்றம் ஒரு வார காலத்துக்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.
  • பிரபலங்கள் சிலரைக் காப்பதற்காக ஒரு பொதுநல அறிக்கையை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெளியிடாமல் இருந்தது ஜனநாயக விரோதப் போக்காகும். திரைத் துறைப் பிரபலங்கள் சிலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, பெண்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகிக்கும் நிலையில், அவர்களிடமிருந்து அத்துறை சார்ந்த பெண்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. தகவல் ஆணையத்தின் உத்தரவில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடத் தேவையில்லை என்று கூறிவிட்ட பிறகு, அறிக்கையை வெளியிடுவதைத் தாமதிப்பது நியாயம் இல்லை.
  • இந்த அறிக்கையை வெளியிடுவதோடு பிரச்சினை தீர்ந்துவிடாது. ஹேமா ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். திரைத் துறைப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கேரள அரசு நடந்துகொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories