திரையுலகத்தில் இருந்து மாநில முதல்வர் வரை... கோலோச்சிய ஜெயலலிதா!
- அரசியல் குடும்ப பின்னணியோ, சிறு வயது முதல் அரசியல் வாசனையோ அறியாத ஜெயலலிதா தான், பின்னாளில் மாநிலத்தை ஆளும் முதல்வரானார். 1948-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி கர்நாடக மாநிலம், மாண்டியாவில் பிறந்த அவர், 1964-ம் ஆண்டு சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து உயர்கல்வி பயில உதவித்தொகை கிடைத்தும், திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- 1961-ல் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பின், 1965-ல் தரின் ‘வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்று முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். 1982-ல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
- மாநிலங்களவை உறுப்பினராக 1984 முதல் 1989 வரை பணியாற்றினார். மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவின் பேச்சை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெகுவாக பாராட்டியுள்ளார். கடந்த 1987-ல் எம்ஜிஆர் மறைந்த நிலையில், அதிமுக இரண்டாக பிளவுபட்டது.
- மறைந்த ஜானகி அம்மையார் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் என இருந்த நிலையில், 1989-ல் ஒன்றுபட்ட அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதன்பின், 1991-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்முறையாக முதல்வர் ஆனார். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத் திருத்தம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சரித்திர சாதனையை நிகழ்த்தினார். 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த இவர், பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்தார்.
- தமிழக முதல்வராக ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்ற போதுதான் அம்மா மருத்துவ பரிசோதனை திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், முதியோர் இலவச பஸ் பயண திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகநல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை சுனாமி தாக்கிய போது, இவரது நிர்வாகத் திறமை பாராட்டப்பட்டது.
- 2003-ல் மாநிலத்தின் எல்லைக்குள் ஆன்லைன் உட்பட அனைத்து லாட்டரிகளையும் விற்பனை செய்வதைத் தடை செய்து ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றினார். 2011-ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள், ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தார். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள், திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாகவும் மாற்றியவர் மக்களின் மனங்களில் வாழ்கிறார்.
- டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)