TNPSC Thervupettagam

திறந்தவெளிச் சிறைகள்: அரை நூற்றாண்டுக் கால விவாதம் எப்போது செயல்வடிவம் பெறும்?

October 22 , 2021 1129 days 513 0
  • சிறைகளைப் பார்வையிட்டு ஆய்வுகள் நடத்திவரும் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர், அனைத்து மத்தியச் சிறைகளிலும் திறந்தவெளிச் சிறைகள் அமைக்க அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
  • திறந்தவெளிச் சிறைகளுக்கு ஏற்றவாறு இடங்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றும் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் செயல்வடிவம் பெறும் என்றும் அவர் கூறியிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே.
  • நீண்ட காலச் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களில் நன்னடத்தை கொண்டவர்களுக்குத் தண்டனையின் கடுமையைக் குறைக்கும் வகையிலும் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையிலும் திறந்தவெளிச் சிறைகள் அமைகின்றன.
  • தண்டனையின் நோக்கம் குற்றவாளிகளைச் சீர்திருத்துவதாக அமைய வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் திறந்தவெளிச் சிறைகளைச் சட்டவியல் அறிஞர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
  • 1972-ல் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அப்போதைய சட்ட அமைச்சர் செ.மாதவன், தஞ்சாவூரின் நீலகிரித் தோட்டத்திலும் கோவை சிங்காநல்லூரிலும் திறந்தவெளிச் சிறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • சிவகங்கை அருகிலுள்ள முத்துப்பட்டியிலும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வேங்கடப்பட்டினத்திலும் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
  • கோவை, சேலம், சிவகங்கையில் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் செயல்பட்டுவந்தாலும் தஞ்சை திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்கு ஆளாகித் தற்போதுதான் நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப் பட்டுள்ளது.
  • சிங்காநல்லூர் திறந்தவெளிச் சிறையில் 100 சிறைவாசிகளும், சேலம் பண்ணைச் சிறையில் 10 சிறைவாசிகளும், சிவகங்கை புரசடை உடைப்புச் சிறையில் 150 பேரும் மட்டுமே தங்க முடியும்.
  • எனவே, திறந்தவெளிச் சிறைச்சாலைகள் என்பவை தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெயரளவுக்கானவையாக மட்டுமே இருந்துவருகின்றன என்பதுதான் உண்மை நிலை.
  • 1972-ல் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்பட்ட செங்கல்பட்டு வேங்கடப்பட்டினம் திறந்தவெளிச் சிறைச்சாலை தொடங்கப்படவில்லை.
  • 1971-ல் சட்டமன்ற விவாதங்களில் மாவட்டம்தோறும் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் தொடங்கப்படுமா என்றும்கூடக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
  • அப்போது மதுரையிலே திறந்தவெளிச் சிறைச்சாலைக்கான இடம் தேடப்பட்டுவருவதாக அப்போதைய சட்ட அமைச்சர் செ.மாதவன் தெரிவித்தார். மதுரையிலும் இன்னும் திறந்தவெளிச் சிறைச்சாலை தொடங்கப்படவில்லை.
  • சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறைவாசிகளாக இருந்த காங்கிரஸ்காரர்கள் விடுதலை கிடைத்து ஆட்சிக்கு வந்த பிறகு, சிறைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்று தனது சிறைக் குறிப்புகளில் எழுதியுள்ளார் அண்ணா.
  • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறைத் துறைச் சீர்திருத்தங்களைப் பற்றி தீவிரமாகப் பேசியது.
  • அண்ணாவும் அவரையடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.கருணாநிதியும் இருவரது ஆட்சிக் காலத்திலும் சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்புவகித்த செ.மாதவனும் அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்களது அனுபவங்களின் விளைவாக சிறைச் சீர்திருத்தங்களில் தீவிர அக்கறை காட்டினார்கள்.
  • திறந்தவெளிச் சிறைகளையும் மேம்படுத்த விரும்பினர். அவர்களின் விருப்பங்களுக்கும், அவர்களது காலத்தில் நிறைவேற்ற முடியாமல் போன அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை இன்றைய திமுக அரசுக்கு உண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை (22 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories