- வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. தொழில் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் விவசாயத்துக்கு கடன் வழங்குவதை மையமாகக் கொண்டும் 1970-ஆம் ஆண்டு பல தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
தொழில் துறை வளர்ச்சி
- தொழில் துறை வளர்ச்சி அடைந்தபோதிலும், வாராக் கடன்கள் அதிகரித்த காரணத்தால் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால், நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி செய்து மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் சிகா சட்டம் (நலிவடைந்த நிறுவனங்கள் நலன் காக்கும் சட்டம்) 1985-இல் வரையறுக்கப்பட்டது. பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பிறகு, 1993-இல் வாராக் கடன்கள் அதிகரித்த காரணத்தால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் மீட்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு கடன் மீட்கும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
- கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்ட பிறகும்கூட வாராக் கடன்கள் அதிகரித்தன; மேலும் கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் செயல்பாடு மந்தமாக இருந்ததால், வங்கிகளே நேரடியாகக் கடன்களை வசூலிக்கும் வகையில், சர்பாசி (கடன் நிலுவையை வசூலிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உரிமை அளிக்கும் சட்டம்) என்ற சட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2002-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
புள்ளிவிவரம்
- 1947-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த மொத்த கடன் தொகை ரூ.11 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது; ஆனால், 2007-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அது ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதாவது, மொத்த கடன் அளவு சுமார் 7 ஆண்டுகளில் ரூ.41 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.
- கடன் உயர உயர, வாராக் கடன் அளவும் அதிகரித்தது. இந்த 7 ஆண்டுகளில் வங்கிகள் அதிக அளவில் கடனுதவி அளித்ததன் விளைவாக, வாராக் கடன் விண்ணை முட்டும் அளவுக்குச் சென்று விட்டது.
- 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.2,24,542 கோடியாக இருந்தது. இது மூன்றே ஆண்டுகளில், அதாவது 2017-இல் மூன்று மடங்குக்கு மேல் ரூ.7,23,513 கோடியாக அதிகரித்தது.
- தொடர்ந்து அதிகரித்து வந்த வாராக் கடன்கள் பிரச்னைக்கு தீர்வுகாண முதல் கட்டமாக நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் திவால் சட்டத்தை 2016-இல் பாஜக அரசு நிறைவேற்றியது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நலிவடையும் நிறுவனங்களின் வழக்குகளை விசாரணை செய்து முடித்து வைக்க தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி - நேஷனல் கம்பெனி லா டிரிப்யூனல்) ஏற்படுத்தப்பட்டது. இத்துடன் சேர்த்து திவால் நிலைமையை நிர்வகிக்கும் மத்திய அரசின் இந்திய திவால் மேலாண்மை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
- சுமார் ரூ.2.02 லட்சம் கோடி வாராக் கடன்களை உள்ளடக்கிய 4,452 திவால் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பே தொழில் நிறுவனங்களுக்கு இடையிலேயே தீர்வு காணப்பட்டன என்பது, இந்திய திவால் மேலாண்மை வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் வெற்றியடைந்ததன் அடையாளம்.
பொதுத் துறை வங்கிகள்
- பொதுத் துறை வங்கிகளைப் பொருத்தவரை, 12 பெரிய தொழில் நிறுவனங்களின் ரூ.3.45 லட்சம் கோடி வாராக் கடன் சுமை வழக்குகளை திவால் சட்டத்தின் கீழ் 2017-இல் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்திடம் இந்திய ரிசர்வ் வங்கி முறையிட்டது. இந்த 12 வழக்குகளில் 3 மட்டுமே பொதுத் துறை வங்கிகளுக்கு பெரும் தொகை இழப்புடன் முடிவுக்கு வந்தன. அதாவது, நலிவடைந்த தனியார் உருக்காலை நிறுவனத்தின் ரூ.13,175 கோடி வங்கி வாராக் கடன் சுமையை மற்றொரு பெரிய உருக்காலை நிறுவனம் ரூ.5,320 கோடிக்கு ஏற்று கையகப்படுத்திக் கொண்டது.
- இதே போன்று நலிவடைந்த மேலும் ஓர் உருக்காலை நிறுவனத்தின் ரூ.56,022 கோடி வங்கி வாராக் கடன் சுமையை, அதே துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ரூ.35,571 கோடிக்கு ஏற்று கையகப்படுத்தியது. மூன்றாவதாக வாராக் கடன் பிரச்னையில் மூழ்கிய தனியார் எரிசக்தி நிறுவனத்தின் வங்கி வாராக் கடன் ரூ.11,015 கோடியை லாபத்தில் செயல்பட்டு வரும் தனியார் முதலீட்டு நிறுவனம் ரூ.2,892 கோடிக்கு கையகப்படுத்தியது.
- மேலே குறிப்பிட்ட மூன்று வழக்குகள் முடிவுக்கு வந்ததன் மூலம் வங்கிகளுக்குக் கிடைத்த வாராக் கடன் தொகை ரூ.43,783 கோடி. ஆனால், நலிந்துபோன அந்த மூன்று நிறுவனங்களும் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த வாராக் கடன் தொகை ரூ.80,212 கோடி. ஆக, நிலுவை வாராக் கடன் தொகையில் 54.59 சதவீதத்தை மட்டுமே வங்கிகள் பெற முடிந்தது. குறைந்த தொகையில் நலிந்த நிறுவனங்களை அதன் போட்டி நிறுவனங்கள் கையப்படுத்திக் கொண்டன. அதனால், வங்கிகளுக்கு ரூ.36,429 கோடி, அதாவது 45.41 சதவீத அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
வாராக் கடன்
- இந்த நேரடி வருவாய் இழப்பு தவிர, வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மதிப்பீட்டாளர்கள் முதலானோருக்கு கட்டணமாக பெருமளவு தொகை அளிக்கப்பட்டதும் வங்கிகளுக்கு வாராக் கடன்கள் மூலம் ஏற்பட்ட இழப்பை அதிகரித்தது.
- இதே போன்று ஜவுளித் துறையில் முன்னோடியாக இருந்து நலிவடைந்த வட இந்திய நிறுவனத்தை அதன் போட்டியாளரான வட இந்திய நிறுவனம் திவால் சட்டம் - தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) மூலம் மிகவும் குறைவான தொகையை அளித்து கையகப்படுத்தியது. அதாவது, நலிவடைந்த வாராக் கடன் நிலுவை ரூ.50,000 கோடிக்கு, ரூ.5,000 கோடியை மட்டுமே போட்டி ஜவுளி நிறுவனம் அளித்தது. இது ஒருவகையான சட்டபூர்வ மோசடி என்றுதான் கூற வேண்டும். கையப்படுத்திய நிறுவனங்களில் அசையாச் சொத்தின் மதிப்பே அவர்கள் அளித்த தொகையைவிட அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.
- வழக்கமான தீர்வு நடைமுறைகளின்படி அல்லது சர்பாசி (எஸ்ஏஆர்எப்இஏஎஸ்ஐ) சட்டத்தின்படி (கடன் நிலுவையை வசூலிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உரிமை அளிக்கும் சட்டம்) மேலே குறிப்பிட்ட அளவுக்கு, அதாவது 45.41 சதவீத அளவுக்கு (ரூ.36,429 கோடி) இழப்பீட்டுச் சலுகையை வங்கிகள் அளிக்க ஒப்புக் கொண்டிருக்காது. இந்த மாதிரி இழப்பீட்டுச் சலுகையை வங்கிகள் அளித்திருந்தால், அதன் பின்விளைவு முக்கியமாக சலுகையை அனுமதித்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.
தற்போதைய நிலை
- வங்கிகளின் தற்போதைய இழப்பீடுக்கு திவால் சட்டமே காரணம். நலிவடைந்த நிறுவனங்கள் தங்களை புனரமைத்துக் கொள்வதற்கான திட்டத்தை வங்கிகளுக்கு அளிக்க திவால் சட்டத்தில் வழியில்லாமல் இருப்பதும், திவாலை நோக்கி நலிவடைந்த நிறுவனத்தைத் தள்ளி வெளியேறச் செய்வதுமே இத்தகைய பெரும் தொகை இழப்பீட்டுச் சலுகைக்குக் காரணம். நலிவடைந்த நிறுவன உரிமையாளருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம், ஏராளமானோர் வேலையிழப்பு ஆகிய விளைவுகளையும் திவால் சட்டம் ஏற்படுத்துகிறது.
- மேலும், நலிவடைந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் போட்டி நிறுவனத்துக்கு அளிக்கப்படும் ஊக்கம், திவால் சட்டத்தின் பெரும் குறைபாடாகும். ஏனெனில், நலிவடைந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் போட்டி நிறுவனம், குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் ஏகபோக அதிகாரத்தைப் பெற்று சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் துரதிருஷ்டவசமான நிலை ஏற்படுகிறது.
- நலிவடைந்த நிறுவனங்களின் பெரும் வாராக் கடன்கள் தொகை இழப்பீட்டுச் சலுகைகள் காரணமாகப் பாதிக்கப்படுவது, வங்கிகளில் தங்களது உழைப்பைச் சேமித்து வைத்துள்ள பொதுமக்கள்தான். கடந்த 5 ஆண்டுகளில் வாராக் கடன் நிலுவைத் தொகைகளை முழுவதுமாக வங்கிகள் பெற்றிருந்தால், தங்களது வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கு மேலும் கூடுதலான வட்டி விகிதத்தை அளித்திருக்க முடியும்.
- மேலும், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதக் கட்டணம், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஏடிஎம் அட்டை பராமரிப்புக்கான ஆண்டுக் கட்டணம் உள்ளிட்டவற்றை வங்கி நிர்வாகங்கள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
கடந்த காலங்களில்....
- கடந்த காலங்களில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு தொழில் நிதி மற்றும் மறு சீரமைப்பு வாரியம் (பிஐஎப்ஆர்) மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டது. அதாவது, நிலுவைத் தொகையோ அல்லது வட்டியோ தள்ளுபடி செய்யப்படாமல், வட்டி மீதான அபராத வட்டி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கடன் பெற்ற அசல் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அசல் தொகையின் வேறுபாடு வங்கியின் முதலீடாக (ஈகுவிட்டி) கருதப்பட்டு நலிவடைந்த நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டது.
- திவால் சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது சரியான அணுகுமுறையல்ல. திவால் சட்டத்தின் கீழ் தொழில் நிதி மற்றும் மறு சீரமைப்பு வாரியத்தை (பிஐஎப்ஆர்) மத்திய அரசு அமைத்து, நலிவடைந்த நிறுவனங்களை மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டும். வாராக் கடன் பிரச்னையில் உள்ள பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, நலிவடைந்த நிலையில் உள்ள சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கும் உதவ வேண்டும்.
- எனவே, இன்றைய பொருளாதார மந்த நிலையில் இந்திய திவால் சட்டத்தை மறு ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. குறிப்பாக, நலிவடையும் நிறுவனங்களை திவால் நிலைக்குத் தள்ளுவதைக் காட்டிலும், அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு முயற்சி செய்வது மிக அவசியம். இதன் மூலம் வேலையிழப்புப் பிரச்னையும் பெருமளவில் தவிர்க்கப்படும்.
நன்றி: தினமணி (04-09-2019)