TNPSC Thervupettagam

தீண்டாமை எப்படி நிலைநிறுத்தபட்டது

January 6 , 2024 315 days 326 0
  • இந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான   தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள். தனித்தும் வாசிக்கலாம். தொடராகவும் வாசிக்கலாம்.
  • வர்ணங்கள் சார்ந்த சமூக ஒழுங்கிற்கும், அதாவது வர்ண தர்மம் என்று அழைக்கப்பட்டதற்கும், இன்றைய ஜாதிய சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்துவருகிறோம். இதில் பிராமணர்கள் என்ற அடையாளம் வர்ணமாகவும், ஜாதியாகவும் தொடர்ந்து விளங்கிவருவதைக் காண்கிறோம். தர்ம சாஸ்திரங்கள், சூத்திரங்கள், புராண, இதிகாசங்கள் ஆகியவற்றை சம்ஸ்கிருத மொழியில் எழுதியவர்களும் பிராமணர்கள்தான்.

இரண்டு அம்சங்களை நாம் கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.

  • முதலில் இந்தச் சம்ஸ்கிருத மொழி சார்ந்த பிராமணிய பண்பாட்டை ஆரிய பண்பாடு என்று சொல்லும்போது நாம் உடற்கூறு அடிப்படையில் ஆரியர்களைத் தனியான இனமாகக் (ஆங்கிலத்தில்ரேஸ்’) கூறுவதில்லை. அதேபோல ஆரியர்கள் அல்லாதவர்களை, திராவிட பண்பாடு போன்ற மாற்றுப் பண்பாடுகளைக் குறிப்பிடும்போதும் அவர்களை உடற்கூறு அடிப்படையில் ஆரியர்களிடமிருந்து வேறுபடுத்துவதில்லை. இதை அம்பேத்கரும் உறுதிபட சான்றுகளுடன் விளக்குகிறார்.
  • இரண்டாவது அம்சம் நாம் முதலிலேயே சுட்டிக்காட்டியபடி சமகால சமூகத்திலுள்ள பிராமணர்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதும் நமது நோக்கமல்ல. இன்றைய பிராமண சமூகத்தில் பல முற்போக்காளர்கள், சீர்திருத்தவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளார்கள். பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், ஜாதியவாதிகளும் உள்ளார்கள். அனைத்து பிராமணர்களையும் ஒரே அடையாளமாக பார்ப்பதோ, அவர்களைக் கடந்த காலத்திற்குப் பொறுப்பாக்குவதோ சரியான அணுகுமுறையாக இருக்காது.
  • பிராமணியம் உருவாக்கிய வர்ண தர்ம சமூகம், அதன் தொடர்ச்சியாக உருவாகிய இன்றைய ஜாதிய சமூகம், அதில் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்வது, எப்படிச் சமத்துவமும், சமூக நீதியும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது என்பதே அனைவர் முன்னாலும் உள்ள கேள்வி.
  • இதில் தங்கள் பங்கு என்னாவாக இருக்க வேண்டும் என்பதை பிராமண சமூகத்தினர் தீவிரமாக சிந்திக்க வேண்டும். காலப்போக்கில் எல்லாம் மாறும் என்று வாளாவிருக்கக் கூடாது. நிச்சயம் தர்ம சாஸ்திர பிரதிகளை மறுதலிப்பது போன்ற செயல்பாடுகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு சற்றே பொறுப்புணர்வுடன் அந்தச் சம்ஸ்கிருத பிரதிகள் எப்படிச் சமூகத்தைக் கட்டமைத்தன என்பதைக் குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். விமர்சித்து, நிராகரிக்க வேண்டும்.

அம்பேத்கரின் கேள்விகள்

  • சென்ற வாரம்சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் யார்?’ என்ற அம்பேத்கரின் நூலை விவாதித்தோம். அந்த நூலுக்கு அடுத்து அம்பேத்கர்தீண்டப்படாதவர்கள்: அவர்கள் யார், அவர்கள் ஏன் தீண்டப்படாதவர்கள் ஆனார்கள்?’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் 1948ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
  • அதன் முகவுரையிலேயே அவர் ஏன் அதிகம் படித்தவர்களான பிராமணர்களிடையே பிரான்ஸ் நாட்டு வோல்டேர் (1694-1778) போன்ற ஒரு புரட்சிகர சிந்தனையாளர் தோன்றவில்லை என்று கேட்கிறார். அதாவது வர்ண, ஜாதி சமூகத்தை உருவாக்கிய பிராமண சமூகத்தினர் அதன் தீமைகளை எடுத்துக் கூறி நிராகரிப்பதில் முன்னிற்பதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறார்.
  • இன்றைய நிலையில் ஜாதிய சமூக அநீதியின், சமத்துவமின்மையின் தீவிர வெளிப்பாடாக உள்ளது பட்டியல் இனத்தவர்கள் சந்திக்கும் தீண்டாமைக் கொடுமைகளும், ஒதுக்குதலும்தான்.
  • இந்திய அளவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியல் ஜாதியினர் 16.6%, பட்டியலின பழங்குடியினர் 8.6% உள்ளனர் என்னும்போது 25% மக்கள் பட்டியலினத்தவர்களாக உள்ளனர். இவர்கள் வர்ணமற்றவர்கள், அவர்ணர்கள் என்று அறியப்பட்டவர்கள். அதாவது வர்ண சமூகத்தில் உள்ளடக்கப்படாதவர்கள். தீண்டாமைக்கு ஆளானவர்கள். அது ஏன் என்பது முக்கியமான கேள்வி.
  • இந்தக் கேள்வியை அம்பேத்கர் எப்படிப் பரிசீலிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியமானது. வர்ண சமூகம் என்ற ஒன்றை கட்டமைத்த பின், அதற்கு வெளியில் நிறுத்தப்படுபவர்களும் அதனால் பாதிப்படைகிறார்கள் என்பது வெளிப்படையானது. அவர்கள் வர்ணமற்றவர்களா, ஐந்தாவது வர்ணமா என்பது பிரச்சினையில்லை. வர்ண சமூகம் அவர்களை எப்படி நடத்தியது என்பதுதான் பிரச்சினை.

பெளத்தத்திற்கு எதிரான பிராமணிய எதிர்ப்புரட்சி  

  • வேள்விகளை, யாகங்களை மையமாகக் கொண்டிருந்த வேத கால ஆரிய சமூகத்தில் பிராமணர்கள் பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கினார்கள். உயிர்களை பலியிடும் இந்த வேள்வி பண்பாட்டிற்கு எதிராக பெளத்தம் பெரியதொரு புரட்சியைச் செய்தது. மெளரியப் பேரரசு, குறிப்பாக அசோகர் காலத்தில் புத்த மதத்தை முழுமையாக ஏற்றதால் பிராமணர்கள் செல்வாக்கு பெரிதும் குறைந்தது.
  • பெரும்பாலான ஆய்வாளர்கள் பிராமணிய தர்ம சாஸ்திரங்கள், குறிப்பாக மனுதர்ம சாஸ்திரம், அசோகர் காலத்திற்குப் (பொது ஆண்டிற்கு முன் 268 முதல் 232 வரை) பிறகே எழுதப்பட்டதாகக் கருதுவதை நாம் கவனித்தோம்.
  • அதாவது, பெளத்தம் உருவாக்கிய ஒழுக்க நெறிகளுக்கு மாற்றாக, அதனை பின்பற்றி உருவானதே பிராமணிய தர்ம சாஸ்திரங்கள் என்று கருதப்படுகிறது. இவ்வாறான சிந்தனைக்கு ஒப்பாகவே அம்பேத்கரும் பிராமணர்கள் புத்த மதத்திற்கு எதிராக செய்த எதிர்ப்புரட்சியே பிராமணிய இந்து மத உருவாக்கம் என்று கூறுகிறார்.
  • உதாரணமாக புத்தரின் உருவச்சிலைகளை நிறுவி பெளத்தர்கள் வழிபாடு செய்ததை எதிர்கொள்ள சிவன், விஷ்ணு உள்ளிட்ட கடவுளர்களை மையப்படுத்தி கோயில்களை பிராமணர்கள் கட்டத் துவங்கியதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.
  • கடைசி மெளரிய மன்னன் பிருஹத்ரதனை அவனுடைய தளபதி புஷ்யமித்திர சுங்கன் கொன்று சுங்க வம்சத்து ஆட்சியை நிறுவியதை (பொது ஆண்டிற்கு முன் 180) ஒட்டியே பிராமணர்களின் எதிர்ப்புரட்சி துவங்கியது என்றும், இந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு முழுமையாக ஆராயப்படவில்லை என்றும் அம்பேத்கர் கூறுகிறார்.
  • சுங்க வம்சத்து ஆட்சியில்தான் மனுதர்ம சாஸ்திரம் முதலியவை எழுதப்பட்டதாக பல ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். வேத கால ஆரிய பண்பாட்டிலிருந்து பலவகைகளிலும் வேறுபட்ட பிராமணிய மதம் அந்தக் காலகட்டத்தில்தான் உருவாகிறது. பின்னர் குப்தர்கள் காலத்தில் முழுமையாக நிறுவப்படுகிறது என்பதே தரவுகள் அடிப்படையில் செய்யப்படும் யூகம்.

மாமிச உணவும், மாட்டிறைச்சியும்

  • வேள்விகளில் விலங்குகளைப் பலியிடுவதை எதிர்த்து அகிம்சையை போதித்த புத்த பிக்குகளை எப்படி எதிர்கொள்வது எனப் பிராமணர்கள் சிந்திக்க நேர்ந்தது. அவர்களைவிட உயர்ந்த ஒழுக்க சீலர்களாக தங்களை நிறுவிக்கொள்ள விரும்பினார்கள். அதற்கு வேள்விகளில் பலியிடுவதை நிறுத்தினால் மட்டும் போதாது என நினைத்தார்கள். அதனால் ஒரேயடியாக மாமிசம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, தாவரங்களை மட்டும் உண்பவர்களாக மாறினார்கள்.
  • வேள்விக் கலாச்சாரத்தில் பிராமணர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்களை அம்பேத்கர் தருகிறார். வீட்டிற்கு விருந்தாளி வருகிறார் என்றால், பிராமணர்கள் பசுக்களைக் கழற்றிவிட்டுவிடுவார்களாம். ஏனென்றால், விருந்தாளி பசுவை சமைத்துக் கொடுக்கச் சொல்லி கேட்பார்; அதைத் தட்ட முடியாது என்பதால். இப்படியாக பசு மாமிசப் பிரியர்களாக வேத கால பிராமணர்கள் வாழ்ந்திருப்பதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.
  • ஆனால், மாட்டிறைச்சியை மட்டும் தவிர்க்காமல் மாமிச உணவையே தவிர்த்து தங்களைச் சீலம் மிக்கவர்களாக ஆக்கிக்கொண்டார்கள். அத்துடன் பசுவைப் புனிதக் குறியீடாக கட்டமைத்தார்கள்.
  • பொதுவாகவே புனிதக் குறியீடுகளைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்வதில்தான் மதச் சமூகங்கள் தங்கள் ஒருங்கிணைப்பு ஆற்றலைப் பெருகின்றன என்பதை எமிலி தர்கைம் என்ற சிந்தனையாளரை மேற்கோள் காட்டி விளக்குகிறார் அம்பேத்கர். அப்படிப் புனிதக் குறியீடான பசு மாட்டின் இறைச்சியை உண்பதால்தான் வர்ணமற்றவர்களைத் தீண்டத்தகாதவர்களாக கட்டமைத்தார்கள் என்பது அம்பேத்கர் யூகம்.
  • பிராமணர்கள் மாமிசமே சாப்பிடாததைக் கண்ட பிராமணரல்லாத வர்ணத்தினர் மாமிசம் சாப்பிட்டாலும், மாட்டிறைச்சியை மட்டும் தவிர்த்தார்கள். ஆனால், வர்ண சமூகத்தின் எல்லைக்கு அப்பால் நிறுத்தப்பட்டவர்கள் மாட்டிறைச்சியைத் தொடர்ந்து உண்டார்கள். இந்த மூவகைப் பாகுபாடே தீண்டாமையின் தோற்றுவாய் என முன்மொழிகிறார் அம்பேத்கர்.

சமூக விலக்கமும், தீண்டாமையும்

  • வர்ணமற்றவர்களின் விலக்கத்திற்கும், தீண்டாமைக்கும் மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய விளக்கங்களை முன்வைக்கிறார் அம்பேத்கர்.
  • மேய்ச்சல் இனக்குழக்களாக இருந்தவர்கள், பயிர்த்தொழில் பழகி நிலையான சமூகங்களாக மாறினர். தொடர்ந்து மேய்ச்சல் குழுக்களாக இருந்த சமூகங்கள் உடைந்து சிதறி (பிரோக்கன் மென் – ‘Broken Men’) நிலைபெற்ற சமூகங்களைச் சார்ந்து வாழத் தலைப்பட்டார்கள். அவர்கள்தான் ஊருக்கு வெளியே வர்ணமற்றவர்களாக அமர்த்தப்பட்டார்கள்.
  • புத்த மதத்தைப் பின்பற்றியோரும் வர்ண சமூகத்திற்கு வெளியே நிறுத்தப்படனர். பிராமணர்களுக்கும், அவர்களுக்கும் இருந்த தீவிர முரண்பாட்டின், வெறுப்பின் வெளிப்பாடாக ஒருவரை ஒருவர் தூய்மையற்றவர்களாகக் கருதினர்.
  • இறுதியாக மாட்டிறைச்சி உண்பது, இறந்துபோன கால்நடைகளை அப்புறப்படுத்தி உண்பது என்ற சமூக நடைமுறை, மேற்சொன்ன முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி அவர்களைப் புனிதமற்றவர்களாக, தீண்டத்தகாதோராகக் கட்டமைப்பதற்கு இட்டுச்சென்றது என்பதே அம்பேத்கர் கருத்து.
  • தூய்மையற்றவர்கள் என்ற சித்தரிப்பைத் தீண்டத்தகாதோர் என்ற நிலையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறார் அம்பேத்கர். மனுதர்மத்தில் தூய்மையற்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்களே தவிர, தீண்டத்தகாதோர் என யாரையும் கூறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய கணக்கீட்டில் பொது ஆண்டு 400க்குப் பிறகே, குப்த சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்குப் பிறகே தீண்டாமை தோன்றியது எனக் கருதுகிறார்.   
  • இப்படியாக பெளத்த மதத்தினை, அதன் கருத்தியலை எதிர்கொள்ள பிராமணிய கருத்தியல் நட த்திய எதிர்புரட்சியின் விளைவே வர்ண சமூக உருவாக்கமும், அவர்ணர்கள்-தீண்டப்படாதோர் என்ற வகைப்பாடும் என்று சுருக்கமாகக் கூறலாம். இதன் மூலம் அரசுருவாக்க, பேரரசுக் கட்டமைப்பின் கருத்தியல் ஆதார விசையாக பிராமணீய இந்து மதம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

நன்றி: அருஞ்சொல் (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories