TNPSC Thervupettagam

தீதும் நன்றும் பிறா்தர வாரா

December 22 , 2023 330 days 241 0
  • அண்மைக்காலமாக ஊடகங்களில்கொட்டித் தீா்த்த கனமழை’, ‘அடித்துச் செல்லப்பட்ட பாலம்’, ‘வீடுகளில் புகுந்த வெள்ளம்’, ‘மலைப்பாதையில் நிலச்சரிவுஇப்படிப்பட்ட செய்திகளையே தொடா்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்களும்நமக்கு இது ஒன்றும் புதிதில்லையே. ஆண்டுதோறும் நடப்பதுதானேஎன்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 கொடுத்து இப்போதைக்கு மக்களை சமாதானப்படுத்தலாம் என்று அரசும், நமக்கு விமோசனமே இல்லை, கிடைத்த வரைக்கும் வாங்கிக் கொள்ளலாம் என்று மக்களும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
  • மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் வரும்; அப்போது கூடவே தண்ணீா் பற்றாக்குறையும் வரும். இன்று அதிக தண்ணீரால் துன்பப்படும் மக்கள், நாளை தண்ணீரில்லாமல் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலையாய் அலைவார்கள். பிறகு புயல் வரும்; அதற்கு நிவாரணம் கிடைக்கும். மீண்டும் மழை வெள்ளம். மீண்டும் நிவாரணம் - இது ஒரு தொடா்கதை.
  • மழை அளவாகப் பெய்தால்கருணைஎன்று கொண்டாடுகிறோம்; அளவுக்கதிகமாகப் பெய்தால்சீற்றம்என்று குற்றஞ்சாட்டுகிறோம். இயற்கை எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதா்களாகிய நாம் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் நிலைப்பாடுகளும் மாறும். இதை நாம் என்று உணரப் போகிறோம்?
  • தீதும் நன்றும் பிறா்தர வாரா. இன்று நாம் அனுபவிக்கும் துன்பமும் இன்பமும் நேற்று நாம் செய்த செயல்களின் பலனே. இன்று நாம் செய்யும் செயல்களே நாளைய நம் இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும். இவ்வுண்மையை நாம் உணராவிடில் இந்நிலையே தொடா்ந்துகொண்டிருக்கும்.
  • இது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வன்று. இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் இயற்கையைத் துன்புறுத்தியதால்தான் புயல், மழை, வெள்ளம் மட்டுமின்றி வேறு பல இன்னல்களையும் வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். போனது போகட்டும், இனிமேலாவது இயற்கையின் அம்சங்களான பஞ்சபூதங்களை வணங்கி, அவற்றின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு, அவற்றின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, அவற்றோடு இணைந்து வாழ உறுதி பூணுவோம்.
  • அதற்காக அரசும் மக்களும் என்ன செய்ய வேண்டும்? மக்கள்தொகை அதிகமாக அதிகமாக, அடிப்படைத் தேவைகளான சுவாசிக்கக் காற்று, உண்ண உணவு, குடிக்கத் தண்ணீா், இருக்க இடம் ஆகியவற்றின் தேவையும் அதிகரிக்கும். முதல் கட்டமாக அரசு மக்கள்தொகையைக் குறைக்கும் பணியில் உறுதியுடன் இறங்க வேண்டும். கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் மக்கள்சிறுகுடும்பம்என்னும் சித்தாந்தத்துக்கு மாறிவிட்டார்கள்.
  • கல்வியறிவு குறைவாகவுள்ள சில பின்தங்கிய வட மாநிலங்களில், வறுமையின் காரணத்தால், குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற நிலையுள்ளது. அது போக, சில மதத்தினரிடம், குடும்பக்கட்டுப்பாடு தவறு என்ற மனப்பான்மை இன்னும் இருக்கிறது. அரசுஒரு குடும்பம் ஒரு குழந்தைஎன்ற கொள்கையை வலியுறுத்தி, ஒரு குழந்தை மட்டும் உள்ள குடும்பத்துக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
  • ஊடகங்கள் வாயிலாக தீவீரமாக பிரசாரம் செய்து நாட்டின் எல்லா மூலைகளுக்கும் இக் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும். பின்தங்கிய மாநிலங்களில் மக்களுக்கு வறுமையைப் போக்கும் விதத்திலும், அதே சமயத்தில் கல்வியறிவைப் பெருக்கும் வகையிலும் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சிறிது சிறிதாகஒரு குடும்பம் ஒரு குழந்தைஎன்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • அரசின் எந்தத் திட்டமும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றியடையாது. மக்களோ காலங்காலமாக ஜனநாயகத்தின் சௌகரியங்களை மட்டும் அனுபவித்துப் பழகிவிட்டார்கள். கடைமையுணா்வு மிக்க அரசு அதிகாரிகள், சேவை மனப்பான்மை கொண்ட சமூக ஆா்வலா்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றினால் நிச்சயம் மக்கள்தொகை விரைவில் கட்டுக்குள் வரும். இத்திட்டம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே.
  • முப்பது ஆண்டுகளில் மக்கள்தொகை ஒரு சமநிலைக்கு வந்துவிடும். பிறகு அதை இலேசாகத் தளா்த்தலாம். மக்களும் சிறு குடும்பத்தின் வசதிகளை அனுபவித்து விட்டபடியால் மறுபடி பெரிய குடும்பத்தை நாட மாட்டார்கள்.
  • நாம் இன்று ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டால் நாளை அக்குழந்தையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதையும், நாம் இன்று வரிசையாகப் பெற்றுப் போட்டால் நாளை அத்தனை குழந்தைகளும் காற்றுக்கும் உணவுக்கும் தண்ணீருக்கும் பரிதவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
  • இயற்கையோடு இயைந்த வளா்ச்சியே நிலைக்கும் என்பதை அரசு உணா்ந்ததாகத் தெரியவில்லை. மரங்களை வெட்டித்தான் சாலைகள் போடப்படுகின்றன; காடுகளை அழித்துத்தான் அணைகள் கட்டப்படுகின்றன; மலைகளை உடைத்துத்தான் குவாரிகள் செயல்படுகின்றன; நீா்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன; ஆறுகளைச் சுரண்டித்தான் வீடுகளுக்கான மண் எடுக்கப்படுகிறது. இவற்றை அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும்.
  • மனிதா்களின் பேராசைக்கு இன்று எல்லையே இல்லாமல் போய்விட்டது. விளைநிலங்கள், குளம் குட்டைகள், தோப்புகள், பொட்டல் காடுகள் எல்லாமே வீட்டு மனைகளாகிவிட்டன. மக்கள் தங்கள் தேவைக்கும், சக்திக்கும் மீறி மனைகளை வாங்கி வீடுகளைக் கட்டுகின்றனா்.
  • பணக்காரா்கள், நகரத்தில் ஒன்று, கோடை வாசஸ்தலமாக மலைப்பிரதேசத்தில் ஒன்று, ஓய்வெடுக்கப் பண்ணை வீடு ஒன்று என்று கட்டித்தள்ளுகிறார்கள். வசதியில்லாதவா்களுக்கு அரசு அடுக்ககங்கள் கட்டித்தருகிறது. ஆனால் எங்கே? நகரைத் தாண்டிக் காடுகளின் அருகே.
  • விமான நிலையங்கள் விரிவாக்கத்துக்கும் எட்டுவழிச் சாலைகளுக்கும் விளை நிலங்கள் பலியாகின்றன. நீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வராமல் என்ன செய்யும்? அரசு உடனடியாக மனைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
  • சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா்கூடங்குளம் அணுஉலை பற்றிக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம், அணு உலையின் பாதுகாப்பு விதிகளைப் பற்றி அரசிடம் சரியான முறையில் கேள்விகள் எழுப்பவில்லை. தேரி மற்றும் நா்மதா அணை போன்ற மிகப்பெரிய திட்டங்களிலும் உச்சநீதிமன்றம் பட்டும்படாமலுமே நடந்து கொண்டிருக்கிறது.
  • சுற்றுச்சூழல் வல்லுநா் என்.டி. ஜெயலின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அரசு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவே உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளமும், நிலச்சரிவும், பொருட்சேதமும், உயிர்ச்சேதமும்என்று பேசியுள்ளார். மேலும், ‘நாம் எதனைச் சார்ந்து நிற்க வேண்டும்? சுற்றுச்சூழலா அல்லது வளா்ச்சியா என்பதைச் சென்னையின் பெருவெள்ளம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறதுஎன்றும் கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இதை கவனிக்க வேண்டும்.
  • மக்கள் சாலைகள், வீடு, மகிழுந்து, சுற்றுலா போன்றவற்றையே வளா்ச்சி என்று நினைக்கிறார்கள். அந்த வளா்ச்சிக்கு அவா்கள் என்ன விலை கொடுக்கிறார்கள் என்பது பேரிடா் வரும்போதுதான் தெரிகிறது. சென்னையிலும், திருநெல்வேலியிலும், டெல்டா மாவட்டங்களிலும் நீராதாரங்களை முறையாகப் பராமரிக்காததாலும் நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டுமானங்கள் கட்டப்பட்டதாலும் மழைவெள்ளம் உண்டானது. இது எல்லோரும் அறிந்த ஒன்று.
  • இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் கோவை மாவட்டம் எதிர்கொள்ளும் துன்பங்கள் அதிகம் பேசப்படாதவை. இம்மாவட்டத்தின் பல கிராமங்கள் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளன. சிறுவாணி, நொய்யல் ஆறுகளின் வடிகால்களாக ஏகப்பட்ட ஏரிகளும், குளங்களும் உள்ளன. இவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து ஏகப்பட்ட வாய்க்கால்களும் இருந்தன. இன்று பாதிக்கு மேல் காணாமல் போய்விட்டன. அதனால் குளங்கள் எல்லாம் தூா்ந்து போய்விட்டன.
  • சில பெரிய குளங்கள் நகரின் கழிவுநீரும் குப்பைக்கூளங்களும் கலந்து மோசமடைந்து விட்டன. இதற்கு அரசு மட்டுமல்ல, மக்களும் பொறுப்பு. குப்பை மேலாண்மை மற்றும் கழிவு நீா் சுத்திகரிப்பு எல்லாம் மிக மோசமாக உள்ளன. இத்தொழிற்சாலை நகரத்து மக்களோ, தொழில் உற்பத்தியைக் காட்டிலும் குப்பை உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றனா்! ஆங்காங்கு குப்பை மலைகள் அடைத்து மழைநீா் வடியாமால் எல்லா சாலைகளும் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கை.
  • சென்னையில் வெள்ளம் வந்தால் அதை வாங்கிக்கொள்ள கடல் இருக்கிறது. கோவைக்கு அதுவும் இல்லை. மேட்டுப்பாங்கான ஊா் என்பதால் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வாரம் அடைமழை பெய்தால், கோவை நகரும் தண்ணீரில் மிதக்கும்.
  • அரசு எந்தத் திட்டத்தையும் சுற்றுச்சூழல் வல்லுநா்களைக் காலந்தாலோசித்த பிறகே செயல்படுத்த முன்வர வேண்டும். மக்களும் பேராசையை கைவிட்டு இயற்கையை அரவணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழக வேண்டும். எப்போதோ எங்கோ படித்தது - ‘இயற்கையைப் பாழாக்காதீா்கள்; அது திருப்பி அடித்தால் நம்மால் தாங்க முடியாது!’

நன்றி: தினமணி (22 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories