- சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் முக்கியமான மசோதாக்களில் ஒன்று வாடகைத் தாய் (ஒழுங்காற்று) மசோதா. 2016-இல் கடந்த மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வாடகைத் தாய் முறையை ஒழுங்காற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மசோதா முக்கியத்துவம் பெறுகிறது.
- ஏறத்தாழ ஆண்டொன்றுக்கு ரூ.3,000 கோடிக்கும் அதிகமாகப் பணம் புரளும் தொழிலாக வாடகைத் தாய் முறை மாறிவிட்டிருக்கும் நிலையில், அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் காரணமும், அவசரமும் புரிகிறது. தம்பதியரின் மகப்பேறு குறித்த ஆர்வத்தைப் பயன்படுத்தி பெரும் பணம் ஈட்டும் இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தையில்லாத் தம்பதியரிடமிருந்து மட்டுமல்லாமல், பதிலித் தாயாக இருக்க உடன்படும் ஏழைப் பெண்களையும் இடைத்தரகர்கள் ஏமாற்றுகிறார்கள் என்கிற பரவலான குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ஆய்வு
- 2012-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 3,000-த்துக்கும் அதிகமான கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வந்தன. இப்போது அது பல மடங்காக அதிகரித்திருக்கக் கூடும். திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் புற்றீசல்களாக உருவாகி வரும் கருத்தரிப்பு மையங்கள் எந்தவிதமான வரைமுறைக்கும் உட்படாமல் செயல்படுவதால் பல போலி கருத்தரிப்பு மருத்துவமனைகள் இயங்குகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை, வாடகைத் தாய் முறையில் கருத்தரிப்பு என்பது அதற்கு சம்மதித்த பெண்மணிக்கு எதிராகவே இருந்து வருகிறது. கருத்தரிப்பு மையங்களும், இடைத்தரகர்களும் அவர்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்களே தவிர, வாடகைத் தாயாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீடு மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.
- இயற்கையான முறையில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய், வாடகைத் தாயாக ஒரே ஒரு குழந்தையை மட்டுமே பெற வேண்டும் என்கிற விதிமுறை பின்பற்றப்படாமல், அவர்களைப் பலமுறை பயன்படுத்த கருத்தரிப்பு மையங்கள் தயங்குவதில்லை.
- மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வாடகைத் தாய் (ஒழுங்காற்று) மசோதாவின்படி, வாடகைத் தாய் முறை முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. பணமாகவோ, வேறு விதமாகவோ செயற்கை முறையில் இன்னொருவரின் குழந்தையைத் தனது கருப்பையில் சுமப்பதற்கு ஆதாயம் பெறுவது வணிக ரீதியிலான கருத்தரிப்பாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், பெற்றோரில் ஒருவருக்கு நெருங்கிய ரத்த உறவினராக இருப்பவர் பதிலித் தாயாக இருப்பதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. மசோதாவின்படி, பதிலித் தாயாக இருப்பவரின் எல்லா மருத்துவச் செலவுகளும் பேறு காலத்தில் அவருக்கு உயிர்க் காப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
- தவறான முறையில் வாடகைத் தாயைப் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
வாடகைத் தாய் முறையில் கருத்தரித்தல் குறித்து விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. செயற்கை முறையிலான கருத்தரிப்புகள் குறித்த அத்தனை ஆவணங்களையும் 25 ஆண்டுகளுக்கு மையங்கள் பாதுகாக்க வேண்டும். திருமணமாகாதவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள் உள்ளிட்டோர் பதிலித் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.
அம்சங்கள்
- இன்னின்னார்தான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மசோதா குறிப்பிடுகிறது. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழிந்தும் மகப்பேறு இல்லாதவர்கள்; அதிக நாள் உயிர் வாழ முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை உள்ளவர்கள்; குழந்தைகளை இழந்தவர்கள்; உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளவர்கள் ஆகியோர் மட்டுமே வாடகைத் தாய் முறையில் குழந்தைகள் பெற முடியும் என்று வரைமுறை விதிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நிபந்தனைகள் தேவைதானா என்பதில் ஐயப்பாடு எழுகிறது.
- வாடகைத் தாயாக இருக்க முற்படுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்கள் சுரண்டப்படாமல் இருப்பதும் அவசியம். அதே நேரத்தில், ஒரேயடியாக வாடகைத் தாய் முறையைத் தடை செய்ய முற்படுவது நடைமுறை சாத்தியமாகத் தெரியவில்லை. வாடகைத் தாய் முறை குறித்து எந்தவித சட்ட திட்டங்களும் இல்லாத எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. வாடகைத் தாயாக இருக்க முற்படுபவர்களை அந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று கருத்தரிக்க வைத்தால், அதை அரசு எப்படி தடுக்க முடியும்? கருத்தரிப்பு மையங்கள் மேலும் அதிக லாபம் ஈட்ட இந்த மசோதா உதவாதா?
கருத்தரிப்பு மையங்கள் அடிப்படை தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படுவதையும், வணிக ரீதியாக குழந்தை இல்லாத தம்பதியரும், வாடகைத் தாயாக இருப்பவர்களும் ஏமாற்றப்படாமல் கண்காணிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தாமல் பதிலித் தாய் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முன்யோசனை இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது.
- கருவைச் சுமக்கும் தாய்க்கு சாதகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் வாடகைத் தாய் முறையை மாற்றுவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டுமே தவிர, முற்றிலுமாகத் தடை செய்வது பிரச்னைக்குத் தீர்வாகாது.
- குழந்தையின்மை அதிகரித்து வரும் நிலையில், உடனடித் தேவை கருத்தரிப்பு மையங்கள் ஒழுங்காற்றுச் சட்டம் தானே தவிர, வாடகைத் தாய் ஒழுங்காற்றுச் சட்டம் அல்ல.
நன்றி: தினமணி(16-08-2019)