TNPSC Thervupettagam

தீ...பரவக் கூடாது!

May 28 , 2019 2059 days 1232 0
  • குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த தீ விபத்தில் மாணவர்கள் பலர் கொழுந்துவிட்டெரியும் தீப்பிழம்புகளுக்கு இடையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளப் பரிதவித்த காட்சி பலரது இதயத்தையும் உலுக்கியது. அதிருஷ்டசாலிகள் பலர் தப்பி உயிர் பிழைத்தனர். பதின்ம வயது இளைஞர்கள் பலர் தீக்கிரையாகினர். மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் 22-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். சூரத் நகரிலுள்ள சர்தானா பகுதியில் அமைந்த நான்கடுக்கு மாடி வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தை, விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், அந்தக் கட்டடத்தில் ஒரேயொரு மாடிக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏனைய இரண்டு மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்தன.
சமீபத்தில்
  • கட்டட உரிமையாளருக்கு விதிமீறல் குறித்து பலமுறை எச்சரிக்கை அனுப்பப்பட்டதே தவிர,  விதிமுறை மீறல் குறித்து மாநகர நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையில் மாநகர நிர்வாகம் கடும்  கண்டனத்துக்கு ஆளாகிறது.
  • மாநகர அதிகாரிகளின் மெத்தனப் போக்கு மன்னிக்க முடியாத குற்றம். கடந்தாண்டுதான் சூரத் நகரில் இதேபோல இன்னொரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் சூரத் மாநகரிலுள்ள ஏனைய கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நிர்வாகத்துக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோலத் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தலைநகர் தில்லியிலுள்ள ஐந்து மாடி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2017 டிசம்பரில் மும்பையிலுள்ள இரண்டு உணவு விடுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் தீக்கிரையானார்கள்.
  • 50 பேர் கடுமையானதீக்காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர். 2016-இல் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சையில் இருந்த 19 நோயாளிகள் மரணித்தனர்.
  • 2010-இல் பெங்களூரில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழக்க நேரிட்டது.
தமிழகத்தில்
  • தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 2004 ஜூலை 16-இல் நடந்த கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தும், அதில் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகள் உடல் கருகி மாண்டதும், மாறா வடுவாக அனைவரது இதயத்திலும் நிலைத்துவிட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. பலர் உயிரிழக்கின்றனர். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளிக்கொணரப்படுமேயானால், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் மிகுந்த தர்மசங்கடத்துக்கு உள்ளாகும்.
  • கடந்த 2015-இல் மட்டும் இந்தியாவில் பொது இடங்களிலும் தனியார் வீடுகளிலும் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 17,700 என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 1997-இல் தில்லியிலுள்ள உபஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 59 பேரும், 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளும் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும்.
  • மத்திய - மாநில அரசுகளும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் தீ விபத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.
  • அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுடன் தீ விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதைத் தலைக்குனிவுடன் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தில்லி உபஹார் திரையரங்க உரிமையாளர்களும்,  கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குக் காரணமானவர்களும் உச்சநீதிமன்றத்தில் விடுதலை பெற்ற அவலத்தை என்னவென்று உரைப்பது?
தீ விபத்து
  • தீ விபத்து பாதுகாப்பு குறித்து போதிய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பின்பற்றப்படுவதில்லை. தீயணைப்புத் துறை அனுமதி வழங்கிய பிறகு தொடர்ந்து கால இடைவெளியில் ஆய்வு செய்வதில்லை. அனுமதி பெற்ற பிறகு கட்டட உரிமையாளர்களும் அதில் செயல்படும் கடைகள், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்களும் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில், அனுமதியில்லாமலேயே மாறுதல்களைச் செய்துகொள்கிறார்கள். அவை கண்காணிக்கப்படுவதில்லை.
  • இந்தியாவில் 8,550 தீயணைப்பு நிலையங்கள் இருக்க வேண்டும். ஆனால், 2,000 தீயணைப்பு நிலையங்கள்தான் இருக்கின்றன. இதிலிருந்து எந்த அளவுக்குத் தீ விபத்து பாதுகாப்பு குறித்து அரசு முனைப்புக் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு இல்லாமல் இல்லை. எந்தவோர் அடுக்குமாடிக் குடியிருப்போ, வணிக வளாகமோ, பொது இடமோ  அவை எல்லாமே தீ விபத்துக்கான காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் கட்டடம் கட்டுபவர்கள் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பாதுகாப்பு அம்சங்கள்குறைவாக இருந்தால் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்காது.

நன்றி: தினமணி (28-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories