TNPSC Thervupettagam

துக்க நாள் அல்ல... என்றாலும் துக்கமாயிருந்தது

August 21 , 2023 510 days 455 0
  • இந்த ஆண்டு சுதந்திர தினம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்கு மனஅழுத்தம் தந்த தினமாகக் கடந்து சென்றது. தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் பொய்களும் வெட்டிப் பெருமிதப் பீற்றல்களும் நம் மக்களுக்குப் புதியதல்ல; ஆகவே, அது காரணமல்ல. பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசியாக வேண்டும்.

கவலையளிக்கும் நிகழ்வுகள்

  • பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பழக்கமில்லாத பிரதமரை, நாடாளுமன்றத்தில் பொறுப்பாக உட்கார்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியும் பழக்கமில்லாத பிரதமரை வம்படியாக இழுத்துவந்து இரண்டேகால் மணிநேரம் பேசவைத்தார்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
  • ஆனாலும் அவர் இரண்டு மணி நேரம் மணிப்பூரைப் பற்றிப் பேசாமல், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து கட்சி மேடையில் பேசுவதுபோலப் பேசிக்கொண்டே இருக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அதற்குப் பிறகு ஒரு 15 நிமிடங்கள் மணிப்பூரின் மகள்களைக் காக்க (எதிர்பார்த்தபடி) உறுதிபூண்டு சூளுரைத்தார் பிரதமர்.
  • ராகுல் காந்தியின் கேள்விகளால் தொந்தரவுக்குள்ளான ஆளுங்கட்சியினர், கேள்விகளை ஒதுக்கி விட்டு அவரது பறக்கும் முத்தத்தை இறுகப்பற்றி மேலெழுந்து வரமுயன்று தோற்றுக்கொண்டிருந்தார்கள்.
  • பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாகப் பதில் சொல்லும் கடமை தமக்கு இருப்பதாகக் கிஞ்சித்தும் உணரவில்லை. நாடாளுமன்ற நிகழ்வுகள் மிகுந்த கவலையளிக்கின்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சட்டமன்றத்தில் திமுகவினர் அவமதித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்தார்.

விடையில்லாக் கேள்விகள்

  • மாண்புமிகு நிதியமைச்சர் நாட்டுக்குப் பதில் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். அவரது வீட்டிலிருந்து எழும் கேள்விகளுக்கேனும் அவரால் பதில் சொல்ல முடியுமா? நாடறிந்த பொருளாதார அறிஞரும் நிர்மலா சீதாராமனின் வாழ்க்கைத் துணைவருமான பரக்காலா பிரபாகர், அவருடைய ‘Midweek Matters’ உரைகளில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மதிய இடைவேளையில் எழுப்பும் கேள்விகளுக்கு அவரிடம் விடை உண்டா? 2024 இல் பாஜக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் இதுகாறும் செய்து வைத்துள்ள நாசங்களைச் சரி செய்யப் பல ஆண்டுகள் ஆகும் என்று பரக்காலா பிரபாகர் முன்வைக்கும் கவலைகளுக்கு ஆறுதல் சொல்லும் வார்த்தைகள் நிதியமைச்சரிடம் உண்டா?
  • பரக்காலா பிரபாகரின் நூலான ‘The Crooked Timber Of New India: Essays On A Republic In Crisis’-ஐச் சமீபத்தில் வாசித்தபோது, மிகுந்த நிதானத்துடனும் புள்ளிவிவரங்களின் ஆதாரத்தோடும் பாஜகவின் பொய்களை அவர் கட்டுரைக்குக் கட்டுரை தோலுரித்து வைப்பதைக் காண முடிந்தது.
  • 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், ‘மக்கள்தொகைப் பெருக்கம் பெரிய நெருக்கடியை உருவாக்குகிறதுஎனப் பிரதமர் மோடி முன்வைத்த வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை விவரிக்கும் கட்டுரை ஒருசோற்றுப் பதம். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ஊழலும் குடும்ப அரசியலும்தான் நாட்டின் பெரிய எதிரி என்பதுபோலப் பேசியுள்ளார் மோடி.

நாடு போவது எங்கே?

  • நாங்குநேரியில், பள்ளி மாணவர்கள் சக மாணவரை அரிவாள் எடுத்துக் கொலைவெறியோடு தாக்கிய கொடுமையும் மணிப்பூரில் இனவாத அரசியல் பாஜக ஆட்சியில் பற்றி எரிந்துகொண்டிருப்பதும் நமது கவலையாக இருக்க, பாரதப் பிரதமரின் கவலையெல்லாம் குடும்ப அரசியலைப் பற்றியதாக இருக்கிறது. சாரமில்லா தேசியப் பெருமிதங்களும் சாதிப் பெருமிதங்களும் மாணவர்களைக் கொலைக் குற்றவாளிகளாக்கிக் கொண்டி ருக்கின்றன.
  • பெண்களை அவமதித்து இனப்பெருமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகளைத் தகர்த்துத் தெருவில் நிறுத்தும் புல்டோசர் அரசியலை ஆளும்கட்சி கையிலெடுத்து நிற்கிறது. அவகேடான குடியுரிமைச் சட்டம்என்கிற ஒன்று நிறைவேறும் முன்பே இந்த ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சாதாரணக் குடிநபராக நமக்கு அச்சம் மிகுந்து எழுகிறது. எங்கே போகிறது நாடு? எங்கே அழைத்துச் செல்கிறீர்கள் நாட்டை?
  • மிகவும் பிற்போக்கான கருத்தியலுக்குள்ளும் கலாச்சாரத்துக்குள்ளும் சிக்கிக்கிடக்கும் இந்தியச் சமூகத்தை, சமத்துவத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியதுதான் இன்றைய முக்கியமான அரசியல் கடமை. ஆனால், மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் போன்ற அறிவியல் பரப்பும் துறைகளுக்கு மூடுவிழா நடத்த முயன்று கொண்டிருக்கிறது.
  • அறிவியலைப் பரப்புவது வகுப்புவாத அரசியலுக்கு ஆபத்தல்லவா? குடும்ப அரசியல்தான் முக்கியப் பிரச்சினை என்று பேசிக்கொண்டிருப்பது திசை திருப்பும் அரசியலன்றி வேறொன்றுமில்லை. நேருவின் மீதும் அவர் வாரிசுகள் மீதும் இவர்களுக்கு என்ன கோபம் என்று நமக்குப் புரியாமலில்லை.

துக்க நாள்

  • கருத்து: 76 ஆண்டுகாலச் சுதந்திர இந்தியாவில் பல முன்னேற்றங்களை நாடு கண்டிருக்கிறது. பல நல்ல சட்டங்கள் - பெண் விடுதலையை நோக்கியும் சமத்துவம் நோக்கியும் - கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், நம் சிவில் சமூகமும் நம் பண்பாடும் படு பிற்போக்காக இருக்கிறதே. அதைப் பயன்படுத்தும் சாதி, மத அரசியல்வாதிகள்தாமே ஆட்சிக்கு வருகிறார்கள்? இதில் முறிப்பை ஏற்படுத்துவது எப்படி என்கிற பெருங் கவலையுடன் இந்தச் சுதந்திர தினம் கடந்துசென்றுள்ளது.
  • 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்க பெரியார் அறைகூவல் விடுத்த அறிக்கையில் இவ்விதம் குறிப்பிட்டார்: இந்தியர்களில் எல்லாக் கட்சி மக்களிடையேயும் அதிகாரத்தை ஒப்புவிக்காமலும், எல்லோருடைய குறைகளைக் கேட்காமலும், எல்லாக் கட்சியாரையும் சமரசப்படுத்தாமலும், தங்களுக்குப் பல வழிகளிலும் வியாபாரத்துக்கும் பிரிட்டன் நலத்துக்கும் சில இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு காங்கிரஸ்காரரிடம் மாத்திரம் அதாவது, பார்ப்பன ஆதிக்கமும் வடநாட்டார் சுரண்டல் வசதியும் கொண்ட - ஒரு சுயநல தந்திர சூழ்ச்சி கொண்ட கோஷ்டியார் கைக்கு அதிகாரத்தை மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பாதுகாப்புத் தரும் நிபந்தனையோடு அதிகாரத்தை மாற்றியிருக்கிறார்கள்.
  • இவ்வாறு கூறிய பெரியார், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் எதிர்காலத்தில் நவகாளிஉருவாகும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டார். எல்லாக் கட்சியாரையும் செவி மடுக்காத குற்றத்தால் இன்று மணிப்பூரில் நவகாளி பற்றி எரிவதாகக்கொள்ளலாம். பெரியார் சொன்ன துக்க நாள்கருத்தைப் பின்னர் திராவிட இயக்கம் கைவிட்டது என்றாலும் முன்வைத்த சில கேள்விகள் அர்த்தமுள்ளவை.

நன்றி : இந்து தமிழ் திசை (21– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories