TNPSC Thervupettagam

துணைவேந்தர் தேடுதல் குழுவும் கூட்டாட்சித் தத்துவமும்

January 8 , 2025 9 hrs 0 min 41 0

துணைவேந்தர் தேடுதல் குழுவும் கூட்டாட்சித் தத்துவமும்

  • துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரின் பிரதிநிதி இடம்பெறுவது குறித்துத் தமிழக அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையே எழுந்துள்ள சர்ச்சை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருக்கக்கூடிய சூழலுக்குக் கொண்டு செல்லுமோ என்கிற அச்சத்தைக் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

துணைவேந்தரின் முக்கியத்துவம்:

  • ஒவ்வொரு பல்கலைக்​கழகமும் இணைப்பு பெற்ற கல்லூரிகளை வழிநடத்துவது தொடங்கி, அரசின் திட்டங்​களைச் செயல்​படுத்துவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டி​யுள்ளது. இவை அனைத்​துக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்திச் செல்ல​ வேண்டிய பெரும் பொறுப்பு துணை வேந்​தருக்​குத்தான் உள்ளது.
  • துணைவேந்​தரின் ஜனநாயகபூர்வமான அணுகு​முறை​யும், சிறந்த திட்ட​மிடலும், ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்றாடச் செயல்​பாடு​களும் ஒரு பல்கலைக்​கழகத்தைச் செயல்​திறன்​மிக்க கல்வி நிறுவனமாக முன்னிறுத்​தும். எனவே, ஒரு பல்கலைக்​கழகத்தின் அன்றாடச் செயல்​பாட்டில் துணைவேந்​தரின் பணி இன்றியமை​யாதது. ஆனால், தற்போதைய நிலையில் சென்னை, மதுரை காமராஜர், கோவை பாரதி​யார், சிதம்பரம் அண்ணாமலை, சென்னை அண்ணா, ஆசிரியர் கல்வி​யியல் பல்கலைக்​கழகங்​களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
  • துணைவேந்தர் இல்லாத பல்கலைக்​கழகங்​களில் மூன்று உறுப்​பினர்​களைக் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக் குழு நிர்வாகப் பணிகளைக் கவனிக்​கும். இந்த மூவரும் தங்களுக்​குரிய வழக்கமான பணிகளுடன், பல்கலைக்கழக நிர்வாகப் பணியினையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் ஒருவர் மட்டும் கையாள வேண்டிய கோப்பு​களில் இந்த மூன்று உறுப்​பினர்​களும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.
  • இம்மூன்று உறுப்​பினர்​களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் இருக்​கும்​போது, பல்கலைக்​கழகத்தின் அன்றாடச் செயல்​பாட்டுக்காக முக்கிய, உடனடி முடிவு​களுக்காக மூவரிடமும் ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படு​கிறது. இதனால், பல்கலைக்​கழக - கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்​கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.

அதிகரிக்கும் சிக்கல்:

  • துணைவேந்தர் பதவி காலியாகும் சூழல் வரும்​போது, அடுத்த துணைவேந்​தரைத் தேர்ந்​தெடுக்கத் தேடுதல் குழு ஒன்று அமைக்​கப்​படும். இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவது என்பது தற்போது ஒரு முக்கியப் பிரச்​சினையாக உருவெடுத்​துள்ளது. துணை வேந்தரை நியமிப்​ப​தற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறை தெரிவிக்​கிறது. அதன் அடிப்​படை​யில்தான் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்​கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் வாதமாக உள்ளது.
  • ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளை முழுவதுமாக மாநில அரசு ஏற்றுக்​கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், துணைவேந்தர் தேடுதல் குழு குறித்து அந்தந்தப் பல்கலைக்​கழகச் சட்டங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்ள விதிமுறை​களையே கடைப்​பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறுகிறது. துணைவேந்தர் தேடுதல் குழு குறித்துத் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்​கழகங்​களும் ஒரே மாதிரியான சட்டங்​களைக் கொண்டிருக்க​வில்லை.
  • மதுரை காமராசர், சென்னைப் பல்கலைக்​கழகங்​களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதி இல்லை. பாரதி​தாசன், பாரதி​யார், பெரியார், மனோன்​மணியம் சுந்தர​னார், அன்னை தெரசா ஆகிய பல்கலைக்​கழகங்​களில் ஆளுநரின் பிரதிநிதி இல்லை. அண்ணா, அண்ணாமலை, திருவள்​ளுவர், அழகப்பா, ஆசிரியர் கல்வி​யியல், திறந்​தநிலைப் பல்கலைக்​கழகங்​களில் ஆளுநரின் பிரதி​நி​தி​யும், தமிழக அரசின் பிரதி​நி​தியும் துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம்பெற்றுள்​ளனர்.
  • இவ்வாறு துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்​பாகத் தமிழகத்தின் மாநிலப் பல்கலைக்​கழகங்கள் அனைத்​துக்கும் ஒரு பொதுவான விதி இல்லாத​போது, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்​துள்ளவாறு அனைத்துப் பல்கலைக்​கழகங்​களும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சார்பாக ஒரு பிரதி​நி​தியைத் தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்பது கூட்டாட்சித் தத்து​வத்​துக்கு மட்டுமல்ல, பல்கலைக்​கழகங்​களின் தன்னாட்​சிக்கும் விரோதமானது.
  • அதனால்​தான், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள், 2010இல் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதி​நிதி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம்பெற வேண்டும் என்கிற பரிந்​துரை, கூட்டாட்சித் தத்து​வத்தின் மாண்புகளை உள்வாங்​கிக்​கொண்ட அப்போதைய பல்லைக்கழக மானியக் குழுவி​னால் 2013ஆம் ஆண்டில் ரத்துசெய்​யப்​பட்டு, அந்தந்தப் பல்கலைக்​கழகச் சட்டங்​களின் அடிப்​படை​யிலேயே துணைவேந்தர் தேடுதல் குழுக்கள் அமைக்​கப்பட வேண்டும் என்கிற திருத்தம் கொண்டு​வரப்​பட்டது.

மாநில அரசின் முடிவே இறுதி​யானது:

  • மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2018 வெளிவந்த பின்பு​தான், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறை​களைப் பின்பற்றி, அந்தந்தப் பல்கலைக்​கழகங்​களின் சட்டப்படி, தேடுதல் குழுக்கள் அமைக்​கப்​பட்டுத் துணைவேந்​தர்கள் தெரிவு செய்யப்​பட்டனர். அப்போதெல்​லாம், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரின் பிரதிநிதி தேடுதல் குழுவில் இல்லையே என்கிற கேள்வி எழவில்லை என்பதை இங்கே சுட்டிக்​காட்ட வேண்டி​யுள்ளது.
  • அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உயர் கல்வி தொடர்பான பல்கலைக்​கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பாக மாநிலத்தில் பின்பற்றிவந்த சட்ட நடைமுறைகள் மறுதலிக்​கப்​படுவதன் நியாயம் என்ன? துணைவேந்​தருக்கு உரிய தகுதிகள் எனப் பல்லைக்கழக மானியக் குழு அறிவித்​ததைப் பின்பற்​றாமல், தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்​கப்பட்ட வரலாறும் உண்டு.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2010இல் பல்கலைக்​கழகத் துணைவேந்​தர்களாக நியமிக்​கப்​படு​பவர்கள் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்​பிட்​டுள்ளது. பேராசிரியர் பதவி என்பது பல்கலைக்​கழகங்​களில் மட்டுமே உள்ளதாகும். ஆனால், 2012 முதல் 2015 வரை மதுரை காமராசர் பல்கலைக்​கழகத்தில் உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் கல்யாணி மதிவாணனும், இதே காலக்​கட்​டத்தில் திருச்சி பாரதி​தாசன் பல்லைக்​கழகத்​தில், திருப்பூர் அரசுக் கல்லூரியில் முதல்வராக இருந்த முத்துக்கு​மாரும் துணைவேந்​தர்​களாகச் செயல்​பட்​டுள்​ளனர்.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறை​களில் கூறப்​பட்​டுள்ள விதிமுறைகளை அமல்படுத்து​வதில் மாநில அரசின் முடிவே இறுதி​யானது என்பதற்கு இவற்றை உதாரண​மாகச் சொல்ல முடியும். துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள், பிரிவு 7.3 (ii)–ஐ நீக்கி​விட்டு அந்தந்தப் பல்கலைக்​கழகச் சட்டங்​களின்​படியே இக்குழு அமைக்​கப்பட வேண்டும் என 2021ஆம் ஆண்டு அரசாணை எண் 5 வெளியிடப்​பட்டது கவனிக்​கத்​தக்கது.
  • நிறைவாக, திட்டக்குழு இருந்த காலக்​கட்​டத்​தில், ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு, தனக்கு ஒதுக்​கப்​படும் நிதியி​லிருந்து பல்கலைக்​கழகம் - கல்லூரி மாணவர்​களின், ஆசிரியர்​களின் நலனுக்கான ஏராளமான திட்டங்​களைச் செயல்​படுத்தியது. தற்போது அத்தகைய திட்டங்கள் குறைவு அல்லது இல்லை.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதியம் குறித்த பரிந்​துரைகள், மாநிலத்தில் அமல்படுத்​தப்​படு​வ​தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தில் 50 விழுக்​காட்டை முதல் ஐந்து ஆண்டு​களுக்குக் கொடுத்துவந்த பல்கலைக்கழக மானியக் குழு, 7ஆவது ஊதியக் குழுவில் இதனை 39 மாதங்கள் மட்டும் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால், இந்தக் குறைந்​தபட்ச நிதிகூடத் தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்​களுக்குக் கொடுக்​கப்​பட​வில்லை. இந்தப் பிரச்​சினையில் உரிய தீர்வு ​காணப்​பட​வில்லை என்​றால், அது ​மாணவர்​களின் எ​திர்​காலத்​தைத்​தான் ​பாதிக்​கும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories