- பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான தேடுதல் குழுவுக்கான நியமன அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
- தமிழ்நாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களைப் பின்பற்ற, பல்கலைக்கழகச் சட்ட விதிகள் உள்ளன. பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பிலும் துணைவேந்தர்களை நியமிக்கப் பொதுவான வரையறைகள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேடுதல் குழுவில் பொதுவாக மூன்று பேர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஒருவர், அரசு, வேந்தர் சார்பில் தலா ஒருவர் என 3 பேர் நியமிக்கப்படுவார்கள். புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டதும், அந்த அறிவிப்பு ஆளுநர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்படும்.
- ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவில் யுஜிசி சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் கருத்து. துணைவேந்தர் நியமனத்துக்கு யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது; யுஜிசி சார்பில் உறுப்பினர் தேவையில்லை என்பது அரசின் வாதம்.
- இந்தக் கருத்து முரண்பாடுகளுக்கு இடையே ஆளுநர் மாளிகையிலிருந்து யுஜிசி உறுப்பினர் அடங்கிய தேடுதல் குழுக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி யிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இது பின்பற்றப்படுவதாகக் கூறுகிறது ஆளுநர் தரப்பு. பல்கலைக்கழகச் சட்ட விதிகளில், ‘துணைவேந்தரைத் தேர்வுசெய்யும் தேடுதல் குழுவை அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என்று எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இந்தத் தேடுதல் குழு பல்கலைக்கழகச் சட்டம், விதிமுறைகளுக்கு மாறானது என்றும்; சட்டப்படி இதை எதிர்கொள்ளவிருப்பதாகவும் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான அதிகார மோதல் துணைவேந்தர் நியமனத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.
- பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டே அதுதொடர்பான விவரங்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டன. ஆனால், ஓராண்டுக்குப் பிறகு தற்போது அதைத் திருத்தி, புதிய தேடுதல் குழுவை ஆளுநர் அமைத்திருப்பதைத் தேவையற்ற சர்ச்சையாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலும், வழக்கமான நடைமுறைக்கு மாறாக ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அதற்குத் தர்க்கரீதியான காரணங்கள் இருக்க வேண்டும். அப்படி எதுவும் கூறப்படாதபோது, அது விமர்சனத்துக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.
- பல்வேறு விவகாரங்களில் ஆளுநர்-அரசுக்கு இடையிலான மோதலின் நீட்சியாக குஜராத், தெலங்கானாவில் இருப்பதுபோல துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசே எடுத்துக்கொள்வதற்கான சட்ட மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநர் வசம் நிலுவையில் இருப்பதால், தேடுதல் குழு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதை அடுத்தகட்ட அதிகார மோதலின் வெளிப்பாடாகவே கருத வேண்டியிருக்கிறது.
- தேடுதல் குழு தொடர்பான முரண்கள் துணைவேந்தர்கள் நியமனத்தை மேலும் தாமதப்படுத்தக்கூடும். இது பல்கலைக்கழகங்களை மட்டுமல்ல, உயர்கல்வியை நம்பியிருக்கும் மாணவர்களின் நலனையும் சேர்த்தே பாதிக்கும். எனவே, பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் நலன் கருதி, இரு தரப்பும் தங்களுக்குள் உள்ள மோதல்களையும் முரண்களையும் களைய முன்வர வேண்டும். அது உயர்கல்விக்குச் செய்யும் நன்மையாகவும் அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2023)