துரியோதனனின் காதல்
- துரியோதனனின் காதல் மனத்தை வெளிப்படுத்தும் கதை, ‘இன்னும் ஒரு கணம்’. எழுதியவர் பாவண்ணன். வியாச பாரதத்தின் ஆதி பருவத்தில் ‘திரௌபதி மாலையிடு சருக்கம்’ என்கிற பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய தொன்மக்கதையை எடுத்துக்கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. பாஞ்சால நாட்டு மன்னனான துருபதனின் மகள் திரௌபதி, அவர் செய்த யாகத்திலிருந்து கிடைத்தவர். திரௌபதியின் உண்மைப் பெயர் கிருஷ்ணை. மகளுக்குத் திருமணம் செய்யச் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்கிறார் துருபதன். நட்பைப் பெருக்கவும் பகையை முடிக்கவும் பாண்டவர்களுள் ஒருவருக்கே தன் மகளை மணம் முடிக்கவும் துருபதன் முடிவு செய்திருந்தார்.
- திரௌபதியை அலங்கரித்து ரத்தின மேடையில் அமர வைத்தார் துருபதன். சுயம்வரத்திற்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரும் திரௌபதியின் அழகில் மயங்கித் தன்னிலை இழக்கின்றனர். பாண்டவர்கள் அந்தணர் வேடத்தில் அமர்ந்திருக்கின்றனர். துரியோதனனும் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்கிறார். பிற நாட்டு மன்னர்களைப் போன்று துரியோதனனும் திரௌபதியின் அழகைக் கண்டு களிப்புறுகிறார். இந்தப் புள்ளியைத்தான் பாவண்ணன் தன் கதைக்குக் கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். மகாபாரதத்தின் துரியோதனன் கதாபாத்திரத்தை மறுவாசிப்புச் செய்யும்போது, அவர் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாகவே அறியப்படுகிறார். துரியோதனனின் உடனிருந்தவர்கள் அனைவரும் அவரது அழிவுக்கே வழிசெய்தனர். துரியோதனனுக்கு இறுதியில் நிகழ்ந்தது ஒரு கொடூரமான மரணம்.
- உயிருக்குப் பயந்து குட்டையில் ஒளிந்துகொண்டிருந்த துரியோதனனை வெளியே வரவழைத்து, ‘கதை’யால் தொடைமீது அடிக்கிறார் பீமன். ‘இது தர்மமா?’ என்று துரியோதனனே பீமனைப் பார்த்துக் கேட்கிறார். துரியோதனன் தரப்பு நியாயங்களையும் நவீன இலக்கியங்கள் பொருட்படுத்துகின்றன. ஊசிமுனை அளவுக்கும் பாண்டவர்களுக்குக் கருணை காட்டாத துரியோதனனுக்குள்ளும் ஒரு காதல் மனம் இருப்பதைப் பாவண்ணன் கண்டுகொள்கிறார். திரௌபதியைப் பார்த்த உடனே திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார் துரியோதனன். அவளைத் திரும்பத்திரும்பப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார். அவரையும் வெட்கம் தின்று தீர்க்கிறது. இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றுத் தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எண்ணுகிறார். வியாசருடைய பிரதியில் இந்தச் சுயம்வரத்தில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்ட இடம் மிகச் சிறிது. இதைப் பாவண்ணன் பெரிதும் விரிவாக்கியிருக்கிறார்.
- தற்பெருமைமிக்க கர்ணனைத் தனது பலமாகக் கருதி ஏமாந்துபோனவர் துரியோதனன். யுத்தத்தின் இறுதி நாளில் அஸ்வத்தாமன் செய்த தவறாலேயே துரியோதனன் இருக்கும் இடத்தை பாண்டவர்கள் அறிகின்றனர். உடன் இருக்க வேண்டிய தருணத்தில் அஸ்வத்தாமன் ஓடி ஒளிந்துகொள்கிறார். தருமனைவிட ஒருநாள் பிந்திப் பிறந்தவர் துரியோதனன். ஆனால், தருமனைவிட வீரன். தருமனுக்கு அருமையான தம்பிகள் கிடைத்தார்கள்; துரியோதனனுக்கு அப்படி அமையவில்லை. தன்னை நம்பாமல் அடுத்தவர்களது பேச்சைக் கேட்டுப் பெரும் பழியைத் தேடிக்கொண்டவர் துரியோதனன். திரௌபதியைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு அநாதைகளைப் போல அலைந்து கொண்டிருந்தவர்கள் பாண்டவர்கள். திரௌபதியைத் திருமணம் செய்துகொண்ட பிறகுதான், அவர்கள் நிலையாக இருப்பதற்கு ஒரு நிலம் கிடைத்தது. அந்தப் போட்டியில் துரியோதனன் வெற்றி பெற்றிருந்தால், பாரதக் கதை பெரும் திருப்பங்களைச் சந்தித்திருக்கும். ஆனால் அப்படி நிகழவில்லை.
- திரௌபதி மீது துரியோதனன் கொண்ட அளவுகடந்த விருப்பம், அவனை ஒரு நாய்க்குட்டியைப் போன்று குழைய வைக்கிறது. தேவையில்லாத பதற்றத்தை உடல் வெளிப்படுத்துகிறது. தனக்குள்ளே பேசிச் சிரித்துக்கொள்கிறார். கிந்துரம் (வில்) கிருஷ்ணையை நினைவூட்டுகிறது. போட்டியில் பார்வையாளராகப் பங்கேற்க வந்த துரியோதனனை கிருஷ்ணையின் அழகு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற தீவிரநிலைக்குத் தள்ளுகிறது. தன்னைப் பார்த்து கிருஷ்ணையும் நாணம் கொள்வதாகத் துரியோதனன் கற்பனை செய்துகொள்கிறார். கனவும் நினைவும் ஒன்றென மயங்கி துரியோதனனுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஆழ்மனதில் புதைந்திருந்த கடந்த ஜென்மங்களின் காதலெனும் அரும்பு இக்கணத்தில் மலர்ந்துவிட்டதாகக் கருதுகிறார். சக நாட்டு மன்னர்களையும் நண்பர்களையும்கூட அக்கணத்தில் எதிரியாகக் கருதுகிறார். அனைவருமே இப்போட்டியில் தோற்க வேண்டும் என்று பெருமூச்செறிகிறார். தன் செயலுக்காகத் தானே கூச்சப்பட்டு நெளிகிறார் துரியோதனன். அவர் கூச்சப்படுவார் என்பதெல்லாம் மூலப் பிரதிகள் வெளிப்படுத்தாதவை.
- துரியோதனனின் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியைத்தான் பாவண்ணன் இப்புனைவின் மூலமாகச் செய்திருக்கிறார். கிருஷ்ணையை நினைத்து துரியோதனன் பனியாக உருகுகிறார். தான் ஒரு அரசகுமாரன் என்பதையும் மறந்து கனவுலகில் மிதக்கிறார். கிருஷ்ணையை மட்டும் கொடுத்துவிட்டு, அஸ்தினாபுரத்தையே அபகரித்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று துரியோதனன் கருதுகிறார். ஜராசந்தன் வில்லைத் தொட்டுத் தூக்கும்போது, ‘இந்த துரியோதனனுக்காகவே பிறந்தவளடா இந்த கிருஷ்ணை, பல ஜென்மங்களாகத் தொடரும் காதல் உறவடா இது. இதை அறுத்துவிடாதே ஜராசந்தா’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்க்கிறார்.
- ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரையில் விழுகிறார் துரியோதனன். துரியோதனன் இந்தப் போட்டியில் வெற்றிபெறப் போவதில்லை என்பது இக்கதையை வாசிக்கும் அனைவரும் அறிந்ததுதான். ஏனெனில், உண்மைப் பிரதியில் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், துரியோதனன் கிந்துரத்தை வளைப்பதற்கு முன்புள்ள மனப் பதற்றங்களும் கிருஷ்ணை மீதான காமமும் பழம்பிரதியில் இல்லாதவை. அதனை பாவண்ணனுடைய கதையின் மூலமாகத்தான் அறிய முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)