- அண்மையில் ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச அனுமதிக்கப்பட்ட நேரமான 15 நிமிஷங்களுக்கும் கூடுதலாக 50 நிமிஷங்கள் பேசினார்.
- சிறப்புப் பிரிவுகள் 370, 35-ஆவது பிரிவுகளை இந்தியா நீக்கியதால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும். அணு ஆயுதப் போர் உண்டாகும். இது இந்திய துணைக் கண்டம் மட்டுமின்றி உலகையே பாதிக்கும் என்றெல்லாம் உரக்கப் பேசினார்.
- எனினும், அவருக்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை.
- இதனால் ஆத்திரம் அடைந்து, ஐ.நா.வில் இருந்த தனது நாட்டின் நிலையான பிரதிநிதி மலீஹா லோதியை 72 மணி நேரத்துக்குள் திரும்ப அழைத்துக் கொண்டார்.
- இப்போது துருக்கி பிரதமர் எர்டோகன், மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது, இம்ரான் கான் ஆகிய மூவரும் சேர்ந்து ஓர் ஆங்கிலச் செய்தி ஊடகத்தைத் தொடங்க உள்ளனர்.
மலேசிய பிரதமரின் ஆதரவு
- இது குறித்து மகாதிர் பின் முகமது தனது சுட்டுரையில் இஸ்லாம், முஸ்லிம் குறித்த அநேக செய்திகள் துல்லியமாக வருவதில்லை என்பதை உணர்கிறோம்; தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிப்பதாகக் கருத வேண்டாம். இதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை; இஸ்லோமோபியாவிற்கு எதிராக இந்த ஊடகம் செயல்படும் என்று எழுதியுள்ளார்.
- மலேசிய நாட்டின் பிரதமர் என்றாலும், மகாதிர் முகமது மலாய் வம்சத்தில் வந்தவர் இல்லை; இந்திய வம்சாவளியினர். பூர்வீகம் கேரளம்; இவர் தனது நாட்டில் இந்திய அரசால் தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியான மும்பைவாசி ஜாகீர் நாயக்குக்கு அடைக்கலம் கொடுத்து வருபவர்.
- ஜாகீர் நாயக்கின் மத வெறுப்புணர்வு பேச்சின் காரணமாக மலேசியாவில் மலாய், சீன, இந்திய மக்களின் மத நல்லிணக்கம் கெடும் என்பதால் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இவரது பேச்சினைக் கேட்ட பிரதமர் மகாதீர் முகமது, நான்கூட இவ்வாறு பேசியதில்லை என்றார்.
- பின்னர், மலேசிய அரசின் காவல் துறையின் முன் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனாலும், இந்தியா பல முறை கேட்டுக்கொண்ட பிறகும் அவர் திருப்பி அனுப்பப்படவில்லை.
- மேலும், மலேசிய நாட்டு சுற்றுலாத் துறை செய்தியின்படி கடந்த ஆண்டு மலேசிய நாட்டுக்குப் பயணித்த இந்தியர்களின் எண்ணிக்கை 6 லட்சம். இவர்களால் அந்த நாட்டுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 4500 கோடி டாலர்கள்.
- இந்த நிலையில்தான் ஐ.நா. பொதுச் சபையில் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது உரையாற்றும்போது, ஜம்மு-காஷ்மீரை இந்தியா கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது என பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினார்.
துருக்கியின் வரலாறு
- போர்க் கப்பல்களை வடிவமைத்து தயாரித்து அதனைப் பராமரிக்கவும் திறன் படைத்த உலகின் 10 நாடுகளில் துருக்கியும் ஒன்று.
- இந்த நாடு பாகிஸ்தானுக்காக போர் கப்பல் ஒன்றை வடிவமைத்து தயாரித்து வருகிறது என்ற செய்தியை அந்த நாட்டுப் பிரதமர் கூறியுள்ளார்.
- துருக்கியின் வரலாறு ஏனைய முஸ்லிம் நாடுகளைப் போல இல்லாது ஓர் உண்மையான குடியரசு நாடாகும்.
- வலிமையான ஆட்டோமான் துருக்கிப் பேரரசில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி வீழ்ந்து குடியாட்சி மலர்ந்தது.
- 1923 அக்டோபர் 23-இல் துருக்கி குடியரசு என அங்காராவில் இருந்த புரட்சி தேசிய மன்றம் அறிவித்தது.
முஸ்தபா கமால் பாட்சா
- தேசியப் புரட்சியின் தலைவர் முஸ்தபா கமால் பாட்சா துருக்கி நாட்டின் தலைவரானார்.
- இஸ்தான்புல் ராணுவக் கல்லூரியில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றார்.
- இவரது புரட்சிகரமான கொள்கைகளால், திட்டங்களால் இவரை துருக்கியர்களின் தலைவர் என்ற பொருளில் கமால் அட்டாடர்க் என்று துருக்கி மக்கள் அழைத்தனர்.
- இவரது சீர்திருத்தக் கொள்கைகளுக்கு கமாலிசம் என்று பெயர்.
- இவரது ஆறு கோட்பாடுகள் மிக முக்கியமானவை:
1) குடியாட்சி;
2) தேசப்பற்று;
3) மக்களின் இறையாண்மை;
4) அரசுடைமை;
5) மதச்சார்பின்மை;
6) புரட்சிகரமான சீர்திருத்தங்கள்.
- இந்தியா உள்பட பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை தனது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் துருக்கி இணைத்துக் கொண்டுள்ளது.
- துருக்கியில் இதுவரை இருந்து வந்த அரேபிய எழுத்து வடிவத்தை மாற்றி லத்தீன் மொழி அடிப்படையில் துருக்கிய எழுத்து வடிவம் கொண்டுவரப்பட்டது. துருக்கிய மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
- நாட்டின் இறையாண்மை என்பது மக்களிடமிருந்து பெறப்படும் என்றார் கமால் பாட்சா.
- எல்லா துருக்கியர்களும், இன, சமய வேறுபாடு இன்றி எப்போதும் சமமானவர்கள்.
- எல்லா அடிப்படை உரிமைகளும், எல்லோருக்கும் உண்டு.
- அரசியலில் மதம் கலப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
- எனவே, துருக்கி ஒரு மதச்சார்பற்ற அரசு என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
- இதை அமல்படுத்துவதற்காக பல கடுமையான சட்டங்களை அவர் கொண்டு வந்தார்.
- காலங்காலமாக இருந்து வந்த காலிஃபா பதவி ஒழிக்கப்பட்டது.
- புனித நீதிமன்றங்கள் மூடப்பட்டன. புதிதாக சமயத் துறை அமைக்கப்பட்டு அது பிரதமரின் மேற்பார்வையில் செயல்பட்டது.
- நாட்டில் இதுவரை செயல்பட்டு வந்த மதராஸாக்கள், புனிதக் கல்லறைகள் மூடப்பட்டன.
- 1928-இல் துருக்கி ஓர் இஸ்லாமிய நாடு என்றிருந்த சொற்றொடர் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
- மேலும், அரசு, தனியார் பள்ளிகளில் முஸ்லிம் மத போதனைகள் நிறுத்தப்பட்டன.
- 1939-ஆம் ஆண்டு முதல் துருக்கி ஒரு முழுமையான மதச்சார்பற்ற குடியரசாக செயல்படத் தொடங்கியது.
- பெண்கள் பர்தா அணிவதை முற்றிலுமாக தடை செய்தார்.
- 1934-இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1935-இல் நடைபெற்ற தேர்தலில் 35 பெண்கள் சட்டப்பேரவைக்குத் தேர்வு பெற்றனர்.
- முஸ்லிம் நாள்காட்டி முறையான ஹிஜ்ரி ஆண்டு முறையை ஒழித்து, மேலை நாட்டு கிரிகேரியன் நாள்காட்டி முறையைப் புகுத்தினார்.
- வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமை என நிர்ணயிக்கப்பட்டது.
- இவ்வாறு துருக்கியில் நவீன காலத்துக்கு ஏற்ப சீர்திருத்தங்களைப் புகுத்தி நாட்டை வலிமையாக்கினார்.
- இதனால், உலகில் துருக்கியின் செல்வாக்கு உயர்ந்தது. இவரை துருக்கியின் தந்தை என மக்கள் போற்றினர்.
துருக்கியின் நிலைப்பாடு
- இத்தகைய பெருமைகளைக் கொண்ட துருக்கியின் தற்போதைய பிரதமர், இந்தியாவை மத வழியில் துண்டாடிப் பிறந்த சிறிய நாடான பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்பது காலத்தின் கொடுமை.
- ஐ.நா. பொதுச் சபையில் இந்திய இளம் பெண் ராஜதந்திர பிரதிநிதி விதிஷா மைத்ரா பாகிஸ்தானின் உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டியது இவரின் காதுகளுக்கு எட்டவில்லையா?
- பாகிஸ்தான் பிரதமர் பேச்சில் வன்மம், போர் வெறி போன்ற பேச்சு மெடிவெல்-காலத்தை ஒத்திருக்கிறது.
- ஐ.நா.சபையால் குறிப்பிடப்பட்ட 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாதக் குழுக்கள் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தானால் கூற முடியுமா?
- பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் குடியிருந்ததை மறுக்க முடியுமா?
- 1947-இல் 23 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர், இன்று 3 சதவீதமாகச் சுருங்கியிருப்பதற்கு நீங்கள்தானே காரணம்.
- கிறிஸ்தவர், சீக்கியர், அகமதியர், இந்து, ஷியா, பஸ்தூன், சிந்தி மற்றும் பலுசிஸ்தானியர் ஆகியோரை தெய்வ நிந்தனை செய்தனர் என்று சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதும், கட்டாய மத மாற்றம் செய்வதும் இன்றைக்கும் பாகிஸ்தானில் நடந்து கொண்டுதானே இருக்கிறது?
- இதை சர்வதேச சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று பல உண்மைகளைச் சொல்லியதில் அவர் பங்கு சிறப்புடையது. ஐ.நா. பொதுச் சபை இவரது உரையைக் கவனத்தில் கொள்ளும்.
- இந்த நிலையில், இதுவரை இந்தியாவின் நட்பு நாடாக இருந்த துருக்கி ஒரு சார்பான நிலை எடுத்து பாகிஸ்தானை ஆதரிப்பதால் நம் நாட்டுப் பிரதமர் மோடியும் தனது ராஜ தந்திர விளையாட்டில் காயை விரைவாக நகர்த்தியுள்ளார்.
- ஐ.நா. பொதுச் சபையில் மொத்தம் 17 நிமிஷங்கள் மட்டுமே பிரதமர் மோடி பேசினார்.
- ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதை விடுத்து உலகின் முன் தற்போது சவாலாக உள்ள பருவ நிலை மாற்றம், அதிகரித்து வரும் பயங்கரவாதம், உலக சுகாதாரம் குறித்தும் சங்க இலக்கிய வரியை மேற்கோள்காட்டியும் பேசி உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றார்.
துருக்கி vs கிரீஸ், சைப்ரஸ், ஆர்மேனியா
- இந்தியா திரும்பும்முன் துருக்கியின் பகை நாடுகளான கிரீஸ், சைப்ரஸ், ஆர்மேனியா நாட்டுப் பிரதமர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
- கிரீசுக்கும், துருக்கிக்கும் ஏஜியன் கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் மோதல் உள்ளது.
- சைப்ரஸ் நாட்டின் ஒரு பகுதியைத் துருக்கி கைப்பற்றி துருக்கி குடியரசின் சைப்ரஸ் வடக்கு என்று பிரகடனம் செய்ததால் கோபமாக இருக்கும் அந்த நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை, இறையாண்மை ஆகியவற்றுக்கு இந்தியா துணை நிற்கும் என்றார் பிரதமர் மோடி.
- ஆர்மேனியர்களை லட்சக்கணக்கில் இனப் படுகொலை செய்த துருக்கியை மன்னிப்பதும் இல்லை; மறப்பதும் இல்லை; இதுதான் ஆர்மேனியாவின் தற்போதைய நிலைப்பாடு.
- இதனால் எதிரிக்கு எதிரி நம் நண்பன் என்ற வகையில் இந்த மூன்று நாடுகளும் இந்தியாவின் பக்கம் என்பதை தனது சந்திப்பு மூலம் துருக்கிக்கு உறுதிப்படுத்தினார்.
- உலக அரசியல் விமர்சகர்கள் இதனை இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதுகிறார்கள்.
- மதச்சார்பற்ற நாடாக உருவெடுத்து உலகில் புகழ் பெற்ற துருக்கி குடியரசு, இன்றைக்கு மத வெறி கொண்ட பாகிஸ்தானுடன் துணை நிற்பதால் துருக்கியா இப்படி என அரசியல் விமர்சகர்கள் புருவம் உயர்த்திப் பார்க்கிறார்கள்.
நன்றி : தினமணி (23-10-2019)