துளசி வழிபாடு
- ஆன்மிகத்துடன் அறிவியலையும் எடுத்துக் கூறும் அறநெறிகள், இயற்கை சார்ந்த வழிபாடுகளை முன்னிலைப்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக கூறப்படும் துளசி வழிபாடு ஆன்ம பலத்துடன் தேக பலத்தையும் அளிக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. இறைவனுக்கு பிரியமானதாக கருதப்படும் துளசிக்கு ‘பிருந்தா’ என்ற பெயரும் உண்டு.
- தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றி வைத்து, மகாவிஷ்ணு மற்றும் துளசி தேவியை வழிபடுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதனால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கி, மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
- பொதுவாக பல மரங்கள், செடிகள் பகல் நேரத்தில் கரியமில வாயுவை சுவாசித்துக் கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும். இரவு நேரத்தில் அது அப்படியே மாறுபடும். ஆனால், மகத்துவம் வாய்ந்த துளசி, பூமிக்கு 24 மணி நேரமும் பிராணவாயுவை மட்டுமே தரும் சிறப்பு வாய்ந்தது.
- துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், நம் சுவாசம் ஆரோக்கியமாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பச்சை துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த தீர்த்தத்தை அருந்தும்போது, நம் உடலில் அது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்கிறது.
- லட்சுமிதேவியின் அவதாரமாக துளசி செடி கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை ஒழிக்க வல்ல துளசி, இருமல், சளி மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. வைணவ சம்பிரதாயத்தின்படி துளசி இலைகள், திருமாலுக்கு உகந்ததாகக் கருதப்படுகின்றன. வைணவர்கள், இறைவனுக்கு மந்திரம் சொல்லி, அவரை அர்ச்சிக்க இந்த இலைகளையே பயன்படுத்துகின்றனர்.
- திருமாலுக்கு துளசி மாலை அணிவித்து, அவருடைய அருளைப் பெற வேண்டுகின்றனர். திருமாலின் அதிர்வுகள் மற்றும் ஆன்மாவுடன் பக்தர்கள் இணக்கமாக இருக்க துளசி செடியின் நறுமணம் உதவுகிறது. ஏகாதசி தினம் திருமாலுக்கு உகந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் சுக்ல பட்ச (வளர்பிறை) துவாதசி தினத்தில் துளசி பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில் திருமால் துளசி தேவியை மணம் செய்து கொள்வதாக ஐதீகம்.
- துளசி செடியை மணமகள் போல் அலங்கரித்து, அன்றைய தினம் வழிபாடு தொடங்கும். உலகில் 200-க்கும் அதிகமான துளசி வகைகள் உள்ளன. உருவ அமைப்பு வேறுபட்டு இருந்தாலும், அவற்றின் பலன்கள் ஒன்றாகத்தான் உள்ளன. பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோன் வாயுவை துளசி வெளிவிடுகிறது.
- இதனாலேயே அதிகாலை வேலையில் எழுந்து நம் முன்னோர் துளசி வழிபாட்டை மேற்கொண்டனர். துளசி செடியை வலம் வருவதால், ஓசோன் வாயு நம் சுவாசத்தின் மூலம் உட்சென்று உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியும், மூளைக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. மரங்கள் வளர்க்க முடியாத சூழலில், இல்லத்தின் அருகே நுழைவாயில், பால்கனி, மொட்டை மாடி போன்றவற்றில் துளசி செடியை வளர்ப்பதன் மூலம் தூய்மையான பிராணவாயுவை பெறலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)