- நாணயம் என்பது இரண்டு பக்கங்களைக் கொண்டது. அது போலவே, நமது நாட்டின் மக்கள் தொகையின் வளர்ச்சி என்பதன் மறு பக்கமாகக் குப்பை எனப்படும் கழிவுகளின் மேலாண்மை விளங்குகின்றது.
- மக்கள் தொகை வளர வளர அதற்கு ஏற்ற அளவில் நுகர்வுகளும் கட்டுமானங்களும் அதிகரிக்கவே செய்கின்றன. அவ்வதிகரிப்பின் உடன்விளைவாக திட திரவக் கழிவுகளும் அதிகரிக்கின்றன. அக்கழிவுகளின் மேலாண்மைக்கென்று தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
- உதாரணமாக, சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நமது மாநிலத் தலைநகராகிய சென்னையில் நாளொன்றுக்குச் ஏழாயிரம் டன்கள் அளவுள்ள கழிவுகள் சேருகின்றன. அவற்றுள் மறுசுழற்சிக்கு உள்ளாகும் கழிவுகளும், கட்டட இடிபாட்டுக் கழிவுகளும் போக சுமார் நான்காயிரம் டன்கள் அளவுள்ள குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய சேமிப்புக் கிடங்குகளுக்குச் செல்லுகின்றனவாம்.
- மேலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு சுமார் எட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு கணக்கீடு கூறுகிறது.
- பழைய கட்டடங்கள் இடிக்கப்படுவதால் உண்டாகும் கழிவுகளே நாளொன்றுக்கு எண்ணூறு முதல் ஆயிரம் டன்களாகக் குவிகின்றதாம். இப்படியே சென்றால் வரும் ஐந்தாண்டுகளில் சென்னை நகரில் நாளொன்றுக்குச் சேரும் கழிவுகளின் எடை ஒன்பதாயிரம் டன்களாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அக்கணக்கீடு தெரிவிக்கிறது.
- மாநிலத் தலைநகராகிய சென்னையைப் போலவே மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, வேலூர் போன்ற பெருநகரங்களிலும், ஏனைய பகுதிகளிலும் நிலைமை என்னவாக இருக்கும் என்பதைத் தனியே கூறவேண்டியதில்லை.
- அவ்வப்பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் சேரும் கழிவுகளைக் கையாளுவதைக் குறித்த தெளிவான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டியது முன்னிலும் அவசியமாகின்றது.
- இந்நிலையில், நமது நாடெங்கிலும் உள்ள நகரங்களுள் மிகவும் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வாகி வரும் இந்தூர் நகரம் எவ்வாறு அந்தச் சாதனையைப் புரிந்துள்ளது என்பது குறித்த காணொளி ஒன்றைச் சமீபத்தில் காண நேர்ந்தது.
- ஒவ்வொரு நகரம் அல்லது கிராமத்தின் குடிமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறையினர் ஆகிய அனைவரின் அகக்கண்களையும் திறப்பதுடன், தூய்மையான சுற்றுச்சூழல் அமைவதில் அவர்களில் ஒவ்வொருவருடைய பங்கையும் அந்தக் காணொளி தெளிவாக உணர்த்துகிறது.
- சுமார் இருபத்தாறு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதும், நாளொன்றுக்கு சற்றேக்குறைய ஆயிரத்துநூறு டன் எடையுள்ள கழிவுகளை உற்பத்தி செய்யக்கூடியதுமான இந்தூர் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நகரமாகும்.
- ஒருகாலத்தில் இந்தியாவின் மற்ற இடங்களைப் போலவே இந்தூரிலும் ஆங்காங்கே மலைபோன்று குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளைக் காண முடிந்தது. மறுசுழற்சி உள்ளிட்ட கழிவு மேலாண்மை இல்லாத நகரமாகவே இந்தூரும் விளங்கியது.
- தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப் பட்ட பிறகு அந்நகரிலுள்ள இரண்டு வார்டுகளில் மட்டும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கினவாம். குப்பைகளைக் கொட்டும் முன்பாகவே அவற்றை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் அளிப்பதற்கும், காய்கறி உள்ளிட்டவற்றின் கழிவுகளைக் கொண்டு அவரவர் வீடுகளிலேயே தாவரங்களுக்கான எருவைத் தயாரிக்கவும் மக்களை ஊக்கப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
- பின்னர் ஒருசில வாரங்களில் இந்நடவடிக்கைகளை மேலும் பத்து வார்டுகளுக்கு விரிவுபடுத்தினர். அந்தப் பத்து வார்டுகளிலும் இத்தகைய கழிவு மேலாண்மைத் திட்டம் மெதுவாக வெற்றி பெறத் தொடங்கியது.
- அதிலிருந்து பத்தாவது வாரத்தில் இந்தூர் நகரில் மொத்தமுள்ள எண்பத்தைந்து வார்டுகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளனர். நகரில் நாள்தோறும் உற்பத்தியாகும் கழிவுகள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையைச் சுமார் இரண்டாயிரத்து எண்ணூறாக உயர்த்தியுள்ளனர்.
- ஆங்காங்கே கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய பதாகைகள் வைப்பது, தூய்மையான இந்தூர் நகரத்தை உருவாக்குவோம்!"என்று பொருள்படும் கொள்கைப் பாடல்களைத் தெருக்களில் ஒலிபரப்புவது, கழிவுகளைச் சிறப்பாகத் தரம்பிரித்து வழங்கும் குடிமக்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வீடுகளின் முகப்பில் ஒட்டி கெளரவிப்பது ஆகியவற்றுடன் இத்தூய்மைப் பணிகளில் அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் அக்கறை காட்டுமாறு வலியுறுத்தப்பட்டது.
- மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் சேரும் கழிவுகள் சேகரிக்கப்படும் முன்பாகவே காய்கறி, பிளாஸ்டிக் பொருள்கள், மின்னணுப் பொருட்கள், நாப்கின்கள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு, அவற்றுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட லாரிகளில் சேகரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. மறுசுழற்சிக்கேற்ற கழிவுகள் அதற்கான முனையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டன.
- இவ்வாறு பலமுனை நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இந்தியாவிலேயே மிகத் தூய்மையான நகரமென்று பெயரெடுத்த இந்தூர் நகரம் கடந்த ஏழு வருடங்களாக அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
- தேசிய தூய்மைக் கணக்கெடுப்பு (ஸ்வச்சதா சர்வேக்ஷண்) அமைப்பு சேகரித்துள்ள தரவுகள், பொதுமக்கள் அளித்துள்ள கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் இந்தூரைத் தொடர்ந்து குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் நவி மும்பை ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருக்கின்றன.
- சில வருடங்களுக்கு முன்பு தூய்மையான பெருநகரங்களின் வரிசையில் இந்தூரை அடுத்து இரண்டாம் இடம் பெற்ற திருச்சிராப்பள்ளி, பின்னர் ஆறாம் இடத்திற்கு வந்து தற்போது பின் தங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழல், கழிவு மேலாண்மை உள்ளிட்டவை வெற்றிகரமாகச் செயல் வடிவம் பெறுவதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வுடன் சேர்ந்த பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதையே இந்தூர் நகரம் அடைந்துள்ள வெற்றி பறைசாற்றுகிறது.
- நமது மாநிலத்திலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்களும் இந்தூரை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டுக் கழிவு தூய்மை சுகாதாரம் ஆகியவற்றைப் பேணுவதில் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும் ஆகும்.
நன்றி: தினமணி (17 – 04 – 2023)