- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில், தமிழ்நாடு பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. அதே வேளையில், சென்னை, அதனைச் சுற்றியுள்ள வட மாவட்டங்களில்தான் ஐடி தொழில்நுட்பம், உற்பத்தித் தொழிற்சாலைகள் எனப் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இயங்கிவருகின்றன.
- இத்தகைய வளர்ச்சிக்கு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. வட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர்கள், அவற்றில் பணி புரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டத்தினர்தான். ஆனால், தென் மாவட்டங்கள் இன்றைக்குப் பின்னடைவைச் சந்தித்துவருகின்றன. அதைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.
கைகொடுக்காத திட்டங்கள்:
- 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 6.88 லட்சம் வீடுகளில் முதியோர் தனித்து வசிக்கிறார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள 4.45 லட்சம் வீடுகளில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் தனித்து வாழ்கிறார்கள்.
- கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குச் செல்வது, அவர்களின் பெற்றோர் வீட்டையும் விவசாயத்தையும் விட்டுவிட்டு நகரங்களுக்குச் செல்லத் தயங்குவது என்பன உள்ளிட்ட காரணிகள் இதன் பின்னே இருக்கின்றன. இந்நிலை நீடித்தால், இன்னும் 20, 30 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்துவிடும். விவசாயம், கிராமப்புறத் தொழில்கள் மேலும் நலிவடையும்.
- தமிழ்நாடு முழுவதும் சீராக அல்லாமல், வட மாவட்டங்களிலும் கோவை மண்டலத்திலும் மட்டுமே தொழில் வளர்ச்சி பரவியிருக்கிறது என்பது நீண்ட காலமாகப் பேசப்பட்டுவருகிறது. 2001இல் பல்பொருள் சிறப்புப் பொருளாதார மண்டலம் நாங்குநேரியிலும் (Nanguneri SEZ), 2006இல் தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலம் (ELCOSEZ) கங்கைகொண்டானிலும் தொடங்கப்பட்டன.
- இப்படி நிறைய திட்டங்களைச் சொல்லலாம். ஆனால், அவற்றால் பெரிய அளவுக்குப் பலன் கிடைத்துவிடவில்லை. தற்போதுகூடத் தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா, விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா, தேனியில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. எத்தனைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அரைகுறையாக நடைமுறைப் படுத்தப்படும் போது யாருக்கும் எந்தப் பலனும் இல்லை.
தனிநபர் முயற்சிகள்:
- 2006இல் மதுரையில், செல்வகணேஷ் என்கிற இளைஞர் துணிவுடனும் தீர்க்கதரிசனத்துடனும் ஆரம்பித்த ‘மூகாம்பிகை இன்ஃபோசொல்யூஷன்ஸ்’ எனும் ஐ.டி. நிறுவனம், இன்று 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. பெரிய நிறுவனங்களுக்கு இணையான ஊதியமும் இதர பலன்களும் தரும் இந்நிறுவனத்தை, தென் மாவட்டங்களில் ஐ.டி. துறையில் ஒரு முன்னோடியாகக் கருதலாம்.
- மேலும் தென்காசி, மத்தளம்பாறையில் ‘ஸோஹோ’ நிறுவனத்தின் கிளையை நடத்திவரும் தர் வேம்பு, திலிகான்வேலி டெக் பார்க் (TiliconVeli Tech Park) வழியாகச் செயலாற்றும் பிரபாகரன் முருகையா உள்ளிட்ட சிலர், தென் மாவட்டங்களில் ஐ.டி. துறையில் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கிறார்கள்.
- ஆனால், செல்ல வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. தென் மாவட்டங்களில் ஐ.டி. தவிர விவசாயம் உள்ளிட்ட பிற துறைகளிலும், தளங்களிலும் முதலீடு செய்யவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் அமைக்கவும், தொழில்முனைவோர் பயிற்சி, ஆலோசனை மையங்கள் அமைக்கவும் மேலும் பலர் முன்வர வேண்டும்.
அரசின் பொறுப்பு:
- எனினும், சில தனிப்பட்ட மனிதர்கள், அரசின் திட்டங்களால் மட்டுமே ஆக்கபூர்வ மாற்றங்கள் ஏற்பட்டு விடாது. தென் மாவட்ட மக்களும் சமுதாயமும் தங்களது அணுகுமுறை-கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தென் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகள், சமூகம், கல்வி, தொழில் வளர்ச்சி மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்ளவில்லை; தரத்தையும் உயர்த்திக் கொள்ள வில்லை.
- பள்ளிகளைப் பொறுத்தவரை தேர்ச்சி பெறுதல், மதிப்பெண் ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துகின்றன. மாணவர்களின் தனித்திறன், கற்பனைத் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்புக் கூட்டப்பட்ட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களிலிருந்து உயர் கல்வி படிக்க சென்னை, காஞ்சிபுரம், கோவை எனப் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை மாற்றப்பட வேண்டும்.
- உதாரணமாக, ஒரு காலத்தில் வர்த்தக மையமாக இருந்த விருதுநகர் மாவட்டத்தில், அதன் கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து, பல்கலைக்கழக அளவில் தரம் உயர்த்தி கல்வி மையங்களை உருவாக்கலாம். தென் மாவட்டங்களில் உள்ள ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி தொழில்ரீதியாக இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, சுற்றுலா வழிகாட்டிகளாக நியமிக்கலாம். நிபுணர்கள் குறைவாக உள்ள மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மேம்படுத்தப்பட்ட மெய்ம்மைத் தொழில்நுட்பம் (Augmented Reality) போன்றவற்றில் பயிற்சி தரலாம்.
- மேலும், காரைக்குடியில் ஃபின்டெக், கிரிப்டோகரன்சி போன்ற படிப்புகள், மதுரை, தேனி பகுதிகளில் திரைப்படத் தொழில்நுட்பம், நுண்கலைகள், கிராமியக் கலைகள், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல் வளம், கடல் சார்ந்த ஆராய்ச்சி-தொழில்நுட்பம் என இன்றையகாலகட்டத்துக்கு ஏற்பப் படிப்புகளையும் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் தரலாம்.
- தென் மாவட்ட மக்களின் எதிர்காலச் சந்ததியினர் அவர்களின் சொந்த ஊரிலேயே வாழ வகை செய்து, தென் மாவட்டங்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2023)