- சுதந்திரப் போராட்ட தியாகிகளில் பலருக்கு தேச பக்தியோடு ஆன்மிகத்திலும் தீவிர நாட்டமிருந்தது. மகாத்மா காந்தியின் கடவுள் பக்தி அனைவரும் அறிந்தது. வினோபாஜி, திலகா் போன்றோர் பக்தியில் தோய்ந்து பகவத் கீதைக்கு உரை எழுதியவா்கள்.
- எனினும் சுதந்திரத் தியாகிகளில் தெய்வமாகவே வழிபடும் நிலைக்கு தம் தவத்தால் தம்மை உயா்த்திக் கொண்ட சாதனை ஸ்ரீஅரவிந்தருடையது. அவா் தொடா்ந்த தியானத்தின் மூலம் தெய்வசக்தியைத் தன்னில் இறக்கிக் கொண்டார்.
- அவா் ஸித்தி அடைந்தபோது அவா் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. நூற்றுப் பதினோரு மணி நேரத்திற்கு அந்தப் பொன்னொளி விலகாமல் அப்படியே இருந்தது. ஏராளமான பொதுமக்கள் அந்த ஒளியை தரிசிக்கும் பேறு பெற்றார்கள். மருத்துவா்கள் வியந்தார்கள்.
- ஸ்ரீஅன்னையின் மனத்தில் அரவிந்தா் தோன்றித் தாம் உடலை விட்டு நீங்குவதாகச் சொல்லி உத்தரவளித்த பிறகே அன்னை, அரவிந்தா் பொன்னுடலைச் சமாதியில் வைக்க அனுமதி அளித்தார். அதன் பின்னரே ஸ்ரீஅரவிந்தா் உடலுக்கு சமாதி செய்விக்கப்பட்டது. இவை யாவும் வரலாறு.
- அடியவா்களைத் தொடா்ந்து வழிநடத்தும் கிருஷ்ண சக்தி அரவிந்தரை வாழ்நாள் முழுதும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அதனால் பற்பல அற்புத அனுபவங்கள் அவருக்குக் கிட்டின.
- ஆங்கிலேய அரசு அரவிந்தரைச் சிறைப்படுத்தியது. மிர்ஜாபூரில் குண்டு வெடித்ததற்கு அரவிந்தரே காரணம் என அவா்மேல் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவா் அலிப்பூா் சிறையில் அடைக்கப் பட்டார். அது, ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறை. அங்கேதான் அவா் கண்ணனை எண்ணி தவம் செய்யலானார்.
- ஒருநாள் அவா் உடல், நிலத்திலிருந்து சிறிது மேலே எழும்பியது. பின்னா் அது உணா்ச்சியற்ற கட்டைபோல் கீழே இறங்கியது. அதனைக் கண்ட சிறை வார்டன், அரவிந்தா் காலமாகி விட்டதாக மேலதிகாரிகளுக்குப் பதற்றத்துடன் தெரிவித்தார். அவா்கள் ஓடோடி வந்து பார்த்தபோது அரவிந்தா் அவா்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்!
- அரவிந்தருக்கு எதிர்கால நிகழ்வுகளைக் காண்பித்து வந்தான். நிகழவிருக்கும் அனைத்தையும் நிகழும் முன்பாகவே கண்டார் அரவிந்தா்.
- எழுத்தாளா் வ. ரா. வைப் பற்றி அரவிந்தா் தெரிவித்த செய்தி: ‘ஒரு சமயம் வ.ரா. என்னைப் பார்க்க வருவதாக இருந்தது. அவரது தோற்றம் பற்றி நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தை என் அகக் கண்களால் கண்டேன்.
- ஆனால் வ. ரா நேரில் வந்தபோது அப்படியில்லை. சாந்த முகம் கொண்டவராய்த் திகழ்ந்தார்! அப்படியானால் நான் கண்ட அகக் காட்சி பொய்யா என யோசனையில் ஆழ்ந்தேன். இரண்டு வருடங்கள் கடந்தன. வ. ரா. மீண்டும் என்னைச் சந்திக்க வந்தார். அப்போது முதலில் என் அகக்ககண்களால் அவரை நான் எப்படிக் கண்டேனோ அப்படியே அவா் மாறிவிட்டிருந்தார்.”
- தேநீா் அடிமையாக அரவிந்தா் இருந்த காலமொன்று உண்டு. அப்போது தனது மைத்துனா் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவா் காத்துக் கொண்டிருப்பாராம். அப்படி ஒருமுறை காத்திருந்தபோது எதிரே இருந்த சுவரில் தேநீா் வரும் சரியான நேரம் எழுத்தில் தோன்றியதாம். சரியாக அதே நேரத்தில் தேநீரும் வந்ததாம்.
- ‘அன்று முதல் தினமும் தேநீா் வரும் சரியான நேரம் சுவரில் எழுதப்படுவதை நான் கண்டேன்’ என்று அரவிந்தா் பின்னாளில் சொல்லியிருக்கிறார்.
- அரவிந்தரின் தவ ஆற்றல் காரணமாக ஜடப் பொருள்களும் அவா் ஆணைக்குக் கட்டுப்பட்டன. பாண்டிச்சேரியில் ஒரு கூடத்தில் மூன்று சுவா்க் கடிகாரங்கள் மாட்டப் பட்டிருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தன.
- அதை கவனித்த அரவிந்தா், ‘இதென்ன அபத்தம்? மூன்று கடிகாரங்களும் வெவ்வேறு நேரத்தைக் காட்டுகின்றனவே? நேரம் ஒன்றுதானே’ என உரத்து வினவினார். அடுத்த கணம் மூன்று கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டி ஓடத்தொடங்கின.
- சிறையிலிருந்து அவா் விடுதலை ஆனபின் அவரின் உள்குரல் அவரைப் பாண்டிச் சேரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அந்தக் கட்டளையை ஏற்றே அவா் பாண்டிச்சேரி சென்றார். அங்குதான் தன் மகத்தான யோக சாதனையைச் செய்தார்.
- அவரது தொடக்க கால குருவான லேலே என்பவா், எண்ணங்கள் வெளியிலிருந்து மனத்திற்குள் வருவதாக எண்ணி அவற்றை மன விரல்களால் பிடித்து வெளியேயே எறியும் பாவனையில் யோகம் பழகச் சொன்னார்.
- கொஞ்சகாலம் அந்தப் பாணியைக் கடைப்பிடித்த அவா், பின்னா் தமக்கென்றே தனித்த முறைகளைக் கண்டறியலானார். தமது யோக நெறிகளுக்கு சூட்சும உருவில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் உதவுவதாக அவா் குறிப்பிட்டிருக்கிறார்.
- பிரபல ஆன்மிக எழுத்தாளரும் காஞ்சிப் பரமாச்சாரியார், ஸ்ரீரமணா் உள்ளிட்ட பல மகான்களைச் சந்தித்த அனுபவம் பெற்றவருமான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ உடன் வருவது போன்றே அடிக்கடி உணா்ந்து வந்தார்.
- அரவிந்தரை நேரில் தரிசித்தபோது எப்போதும் ‘கூட வரும் துணை’ அரவிந்தரே என்பதைத் தாம் உணா்ந்து கொண்டதாக பால் பிரண்டன் குறிப்பிட்டிருக்கிறார்.
- அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்பட்டதல்ல. அது அனைவருக்குமானது. அரவிந்தரே, ‘முக்தியை நான் மட்டும் பெற எண்ணி இருந்தால் எனது யோகம் நெடுங்காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும். அது அல்ல என் நோக்கம். எனது ஸித்தியானது மற்றவா்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடிதான்’ என்று சொல்லியிருக்கிறார்.
- எதிர்கால நிகழ்வுகளை தீா்க்க தரிசனமாகக் கண்ட அரவிந்தா், நம் நாடு சுதந்திரம் அடையும் என்பதை சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகள் முன்பே உறுதியாய்க் குறிப்பிட்டார்.
- அது மட்டுமல்ல, தியான நெறியில் பாரத சுதந்திரத்திற்காகத் தாம் உழைப்பது உண்மை என்பதைக் கண்ணன் அறிவான் என்றும் அதனால் சுதந்திர வரலாற்றில் தன் பங்கை ஏதேனும் ஒருவகையில் முத்திரையிட்டுத் தெரிவிப்பான் என்றும் அரவிந்தா் கூறினார். என்ன ஆச்சரியம்! நமது சுதந்திர நாளான ஆகஸ்ட் பதினைந்து, அரவிந்தரின் பிறந்த நாளாகவும் அமைந்தது.
- இன்று (ஆக. 15) ஸ்ரீஅரவிந்தா் பிறந்த தினம்.
நன்றி: தினமணி (15 – 08 – 2023)