TNPSC Thervupettagam

தெலங்கானா ஒரு மனிதரைச் சுற்றும் கண்கள்

December 1 , 2023 370 days 264 0
  • பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய கடைசித் தேர்தலான மிஸோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா - ஐந்து மாநிலத் தேர்தலை அரசியல் ஆர்வமுடைய எவரும் கவனிப்பது அவசியம்.
  • பத்தாண்டுகளில் பிரதமர் மோடியும், பாஜகவும் எத்தகைய மாற்றங்களைத் தேர்தல் களத்திலும் சமூகத்திலும் உருவாக்கியுள்ளனர் என்பதை மிக நெருக்கமாகக் காட்டும் தேர்தல் இது. அரிதாக, பாஜகவுக்கு இணையாகவோ, பாஜகவைக் காட்டிலும் பலமாகவோ காங்கிரஸ் உள்ள மாநிலங்கள் இவை.
  • 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிப் பயணித்து, ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை எழுதிய சமஸ், 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிய பயணத்துக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலை ஒட்டிப் பயணித்தார். தேர்தல் மாநிலங்களின் வரலாற்று - சமூக - அரசியல் பின்னணியுடன் அந்தந்த மாநிலத்தவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் 5 மாநிலங்களின் சூழலையும் இங்கே தருகிறார்.
  • முன்னதாக ‘தினமலர்’ இதழில் வெளியான கட்டுரைகளின் முழு வடிவம் இப்போது ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிறது.
  • தெலங்கானா முழுக்க இந்தத் தேர்தல் களத்தில் ஒரு சொல்லே பேசப்படுகிறது, ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி; சரி பாதிப் பேச்சில் அவர் பெயரை முழங்குகின்றன: கேசிஆர்.
  • தெலங்கானாவின் முதல் முதல்வரான கே.சி.சந்திரசேகர ராவுக்கு இது சவாலான தேர்தல். 2014, 2018 தேர்தல்களில் போட்டியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ராஜ சவாரி செய்தவர்; 119 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், முதல் தேர்தலில் 63, அடுத்த தேர்தலில் 88 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது அவருடைய கட்சி.
  • மூன்றாவது முறையாகவும் ஆட்சி தன் கட்சி வசமே வரும் என்று நம்புகிறார் கேசிஆர். சூழல் அவருக்கு அத்தனை இசைவாகத் தெரியவில்லை. “மாற்றமும் நல்லதுதானே சாப்!” என்றார் டாக்ஸி டிரைவர் கபூர்.

தனித்துவமான தெலங்கானா

  • மொழி ஒன்றாக இருப்பதாலேயே மக்கள் பண்பாட்டில் ஒன்றிணைந்திருப்பது இல்லை. இன்றைய ஆந்திரம், தெலங்கானா பிராந்தியங்கள் இப்படி மாறுபட்ட பண்பாடுகளையே கொண்டிருந்தன.
  • இந்தியா சுதந்திரத்துக்கு முன் இன்றைய தெலங்கானாவின் பெரும் பகுதி ஹைதராபாத் சமஸ்தானத்தின் கீழ் இருக்க, ஆந்திரத்தின் பெரும் பகுதி பிரிட்டிஷாரின் கீழ் இருந்தது. நாடு குடியரசான பிறகும், 1956 வரை தனித்தனியாகவே இவை நிர்வகிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் எனும் முடிவை இந்தியா தேர்ந்தெடுத்தபோது, தெலுங்கு பேசும் பிராந்தியங்கள் ஒன்றாக்கப்பட்டு ‘ஆந்திரம்’ உருவாக்கப்பட்டது.
  • தங்களுக்கு என்று தனி முதல்வர், அமைச்சரவை இதையெல்லாம் விட்டுவிட்டு ஆந்திரத்தின் ஒரு பகுதியாகும்போது எண்ணிக்கை பலம் குறைந்த தெலங்கானாவின் நலன்கள் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் அப்போதே பேசப்பட்டது. தலைவர்களின் ஒற்றுமை வார்த்தைகள் மக்களை இணைத்தன. ஆனால், ஒன்றுபட்ட ஆந்திரத்தில் 41.4% நிலப்பரப்பையும், 40.5% மக்கள்தொகையையும் கொண்டிருந்த தெலங்கானா பிராந்தியம் மோசமாக நிர்வகிக்கப்பட்டது; ஹைதராபாத் நகரம் நீங்கலாக அது பிணைத்திருந்த பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன.
  • எல்லாவற்றிலும் பாகுபாடு வெளிப்பட்டது. பெரும்பாலும் பட்ஜெட் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டது. அரசு ஊழியர்களில் ஐந்தில் ஒருவர் எனும் அளவுக்கே தெலங்கானாக்காரர்கள் இருந்தார்கள். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என எல்லாக் கட்டுமானங்களிலும் ஏற்றத்தாழ்வு இருந்தது. மாநில முதல்வர் பதவி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் கைகளில் 42 ஆண்டு காலம் இருந்தால், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் கைகளில் 10 ஆண்டுகளே இருந்ததை ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் சுட்டிக்காட்டியது.
  • சாதிக்கும் இதில் முக்கியமான பங்கு இருந்தது. ஒன்றுபட்ட ஆந்திரத்தின் 16 முதல்வர்களில் 10 பேர் ரெட்டி சமூகத்திலிருந்து வந்தவர்கள். நிலவுடைமைக்குப் பேர் போன முற்பட்ட சமூகமான இவர்களுடைய எண்ணிக்கை தெலங்கானாவில் 4% என்றால், ஆந்திரத்தில் 8%. எல்லா இடங்களிலும் இவர்கள் ஆதிக்கம் இருந்தது.
  • மேலே மௌரியர்கள் முதல் கீழே சோழர்கள் வரை பல வெளியாட்சியாளர்கள் படையெடுப்புக்கும் உட்பட்ட பிரதேசம் என்றாலும், தெலங்கானாவுக்கும் செல்வாக்கான கடந்த காலம் இருந்தது. தெற்கின் முதல் பேரரசான சாதவாஹனர்கள் உருவெடுத்த நிலம் இது. காகதீயர்களின் ஆட்சி தெலங்கானாவின் பொற்காலமாக இருந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
  • தனித்து வந்தால், செழித்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையை ஹைதராபாத் நகரம் தந்தது; உலகமயமாக்கலுக்குப் பின் மேலும் எழுச்சி மிக்க நகரமாக ஆகியிருந்தது அது. வெவ்வேறு காலகட்டங்களில் பற்றுவதும் அடங்குவதுமாக இருந்த தெலங்கானா நெருப்பின் உக்கிரத்தை வேறு எவரைவிடவும் கேசிஆர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

கேசிஆர் எழுச்சி

  • தெலங்கானா பிராந்தியத்தின் கிராமப்புறப் பின்னணிலிருந்து வந்தவர் கேசிஆர். ஆரம்பத்தில் காங்கிரஸ், அடுத்து தெலுங்கு தேசம் என்று இரு பிரதான கட்சிகளிலும்  இருந்தவரான கேசிஆர், கட்சிகளின் கீழ் அமைப்புகளிலிருந்து உருவாகி வந்தவர். அதேசமயம், சித்தாந்தப் பார்வையும் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை சபாநாயகர் என்று பல பொறுப்புகளையும் பார்த்துவிட்ட கேசிஆர், 2000இல் தனிக் கட்சியை உருவாக்கினார். தெலங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டங்களில் உத்வேகமாகப் பங்கேற்ற அக்கட்சியின் செயல்பாடுகள் தெலங்கானாவின் செல்வாக்கு மிக்க தலைவராக கேசிஆர் உருவெடுக்க உதவின.
  • தொடர் போராட்டங்களின் விளைவாக 2014இல் தெலங்கானா மாநிலம் உருவானது. முதல்வராக வென்ற கேசிஆர், புதிய மாநிலத்தின் தேவைகளை நன்றிந்தவர் என்பதால், வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்.
  • பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம் இது. கிருஷ்ணா, கோதாவரி என்று இரு பெரிய ஆறுகள் மாநிலத்தில் பாய்ந்தாலும், பெருமளவில் மழையையே மக்கள் நம்பியிருக்க வேண்டியிருந்தது. பாசனம் மற்றும் மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் விரிவாக்கத்தில் கேசிஆர் கவனம் செலுத்தினார்; ‘காகதீயா செயல்திட்டம்’ மூலம் 75,000 நீர்நிலைகள் இணைக்கப்பட்டன. கூடவே விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை அறிவித்தார். சென்னை, பெங்களூரு, மும்பைக்குப் போட்டியாகத் தொழில் நிறுவனங்களை ஈர்த்தது ஹைதராபாத். 15 நாட்களுக்குள் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் ‘டிஎஸ்-ஐபாஸ் திட்டம்’ தொழில் துறையினரை வெகுவாக ஈர்த்தது; 22,745 தொழிற்சாலைகளும் ரூ.2.6 லட்சம் முதலீடும் இதுவரை வந்துள்ளதாகச் சொல்கிறார் கேசிஆர்.
  • எப்படியாயினும் மாநிலத்தின் வளர்ச்சியில் இது பிரதிபலித்தது. நாட்டின் 10 முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றானது தெலங்கானா. 2014இல் 6.9 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 2023இல் 26.3 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.12.9 கோடியாகவும், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.12 லட்சத்திலிருந்து ரூ.3.12 லட்சமாக வளர்ந்திருக்கிறது.
  • மாற்றங்களால் மாநிலம் தலையெடுப்பதை முதல் ஐந்தாண்டுகளிலேயே பார்த்துவிட்ட மக்கள் அதற்கான வெகுமதியாகவே அடுத்த ஆட்சியையும் கேசிஆரிடம் வழங்கினர். இரண்டாம் ஐந்தாண்டில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்தாலும், ஆட்சி நிர்வாகத்தில் யதேச்சதிகாரம் புரையோடுவது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளில் தோற்றது அவருடைய கட்சி.
  • மகன் கேடிஆர், மகள் கவிதா, உறவினர்கள் டி.ஹரீஷ் ராவ், ஜெ.சந்தோஷ்குமார் என்று கட்சியிலும் ஆட்சியிலும் குடும்ப அதிகார மையங்கள் பலவற்றை கேசிஆர் உருவாக்கிவிட்டார்; எல்லோரும் பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மக்களிடம் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. அரசுப் பணிகளை ஒழித்துவிட்டார் என்ற பிரச்சாரம் இளைஞர்கள் இடையே பேசப்படுகிறது.

காங்கிரஸ், பாஜகவின் குறி

  • தெற்கில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது ஒன்றிணைந்த ஆந்திரம். மாநிலப் பிரிவினையோடு, ஆந்திரத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்குள் உண்டாக்கிய பிளவு அங்கே கட்சியைக் கீழே சரித்தது. இங்கே தெலங்கானாவில் மக்களைத் தன் பக்கம் திருப்பிவிட்டார் கேசிஆர்.
  • ஒன்றுபட்ட ஆந்திரத்தில் 2009 மக்களவைத் தேர்தலில் 39.68% வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ், பிரிவினைக்குப் பிந்தைய 2014 தேர்தலில் ஆந்திரத்தில் 11%, தெலங்கானாவில் 25% வாக்குகளைப் பெறும் அளவுக்குச் சுருங்கியது. இடையில் 2019 தேர்தலில் 19% வாக்குகளுடன் புதிய வளர்ச்சியை அடைந்தது பாஜக. ஆக, இரு தேசியக் கட்சிகளும் தெலங்கானாவைத் தம் வசமாக்கத் தீவிரமாக உழைக்கின்றன. ஒவைஸியின் மஜ்லிஸ் கட்சி முஸ்லிம்கள் வாக்குகளைக் குறி வைத்து இயங்குகிறது.

டெல்லிக்குப் போவாரா

  • தெலங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று பலர் சொல்லும் அளவுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் முன்னகர்ந்திருக்கிறது. கேசிஆருக்குக் குடைச்சல் கொடுக்கும் எதிர்க்கட்சியாளராக உருவெடுத்திருக்கிறார் காங்கிரஸின் ரேவந்த் ரெட்டி. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் போராட்டத்தில் உட்கார்ந்துவிடுகிறார். காங்கிரஸின் நகர்வானது பாஜகவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
  • கேசிஆர் சார்ந்த முற்பட்ட சமுகமான பத்மநாயக வெலம்மா, எண்ணிக்கை பலம் அற்றது என்றாலும், நிலவுடைமைச் செல்வாக்கு மிக்கது. மாநிலத்தின் மக்கள்தொகையில் 52% பிற்படுத்தப்பட்டவர்கள், 17% தலித்துகள், 11% பழங்குடியினர், 12.6% முஸ்லிம்கள். காங்கிரஸ், பாஜக இரண்டுமே சமூகப் பிரதிநிதித்துவம் தொடர்பில் இப்போது பேசுகின்றன. “பாஜக வென்றால் தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வர் ஆக்கப்படுவார்” என்ற அமித் ஷாவின் அறிவிப்பை இதுவரை ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இரு மாநிலங்களிலும் முதல்வர் நாற்காலியில் அமரவில்லை எனும் பின்னணியோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
  • கேசிஆர் ஒவ்வொரு சமூகத்தையும் ஒவ்வொரு விதத்தில் அணுகுபவர். முஸ்லிம்களை சந்தோஷப்படுத்த உருதை மீண்டும் ஆட்சிமொழியாக்கினார். தலித் சமூகத்திலிருந்து தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் ‘தலித் பந்து திட்டம்’ தொடங்கினார். பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை 4% அதிகரித்தார். ஆனால், இந்த முறை திணறுகிறார்.
  • பாஜக – காங்கிரஸ் இரண்டுக்கும் அப்பாற்பட்ட அணி எனும் முழக்கத்தோடு, 2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் கேசிஆர் இதற்கு ஏற்ப தன்னுடைய கட்சியின் பெயரையே ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ என்று மாற்றினார். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் வென்றால், அடுத்த ஆறு மாதங்களில் மகனை முதல்வராக்கிவிட்டு தேசிய அரசியல் நோக்கி நகர்ந்துவிடுவார் என்று சொல்கிறார்கள். அது எப்படியோ, ஒருவேளை கேசிஆர் மீண்டும் வென்றால், தென்னகத்தில் எம்ஜிஆருக்கு அடுத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களை வென்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்!

நன்றி: அருஞ்சொல் (01 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories