TNPSC Thervupettagam

தேசத் துரோகச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா என்ன செய்ய வேண்டும்?

October 1 , 2021 1199 days 613 0
  • சிவில் உரிமைகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தேசத் துரோகச் சட்டத்தின் பயன்பாடுதான் என்ன, இன்னமும் ஏன் அது தொடர்கிறது என்று கேள்வி எழுப்பினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. அந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரும் மனு மீதான விசாரணையின்போது இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். இதனால், இந்தச் சட்டம் நீக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இதை எதிர்ப்போர் மனங்களில் உண்டாகியிருக்கிறது.
  • அன்றைய பிரிட்டிஷ் அரசு 1870-ம் ஆண்டு இதை இந்திய தண்டனையியல் சட்டத் தொகுப்பில் இடம்பெறச்செய்தது. தொடர்ந்து 150 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்போரால், தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்படுகிறது.
  • தேசத் துரோகத் தடைச் சட்டம் இப்போதுள்ள வடிவில் அரசின் அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கிறது என்பதில் துளியும் ஐயம் இல்லை. ‘ஐபிசி 124 என்று அழைக்கப்படும் இந்தச் சட்டப் பிரிவின் வாசகமானது எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளும் அளவுக்கு மிகவும் விரிவானது. அரசுக்கு எதிராக ‘வெறுப்பை விதைப்பது, ‘அன்பின்மையை ஏற்படுத்துவது தேசத் துரோகம் என்று விளக்கப்பட்டுள்ளது.
  • அரசியல் சாசனப்படி இந்தச் சட்டம் செல்லும் என்று 1962-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபடும் தனிநபருக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றது. இதற்கு நீதிமன்றம் அளித்த விளக்கமானது, இந்தச் சட்டம் யாருக்கு எதிராகவெல்லாம் பயன்படுத்தப்படும் என்று பார்க்கும்போது முரண்படுகிறது. எனவேதான், இந்தச் சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யும் காவல் துறையும், இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரிக்கும் முதல் நீதிமன்றமும் சட்டத்தின் தன்மைக்கேற்ப, குற்றச்சாட்டு பொருந்துகிறதா என்று பார்க்கத் தவறுகின்றன.

தாண்ட வேண்டிய தடைகள்

  • உண்மை இதுவாக இருந்தாலும், இந்தச் சட்டத்தை ரத்துசெய்வது என்ற ஆக்கபூர்வமான முடிவை எட்டுவதற்கு முன்னால் பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. இதில் மிகப் பெரிய தடையே உச்ச நீதிமன்றம்தான். 1962-ல் அது வழங்கிய தீர்ப்புதான் முதல் தடையாக இருக்கிறது. ‘கேதார்நாத் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலிக்கவும், தீர்ப்பை ரத்துசெய்து புதிதாகத் தீர்ப்பு வழங்கவும் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உருவாக்கப்பட வேண்டும்.
  • அதற்கு முன்பு, இந்த வழக்கு, அத்தகைய மறுவிசாரணைக்கான தகுதி உடையதே ஆகும் என்பதைக் குறைந்த நீதிபதிகளைக் கொண்ட அமர்விடம் முறையிட்டு, வற்புறுத்தி இணங்க வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அப்படியே ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வை உருவாக்கப்பட்டாலும், காலம்காலமாக நீதித் துறையில் நிலவும் போக்கை அது மீறுவதாக அமைய வேண்டும்.
  • அரசுகள் ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தச் சட்டப் பிரிவு அவசியம் என்று அரசுகள் வலியுறுத்தினால் நீதித் துறை அதை ஏற்பதே உலக நடைமுறையாகத் தொடர்கிறது. 1962-ல் தேசத் துரோகச் சட்டப் பிரிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1976-ல் தொடரப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைக்கூட, தேவையைக் கருதி அரசு செயல்படாமல் நிறுத்தி வைக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
  • இந்திரா காந்தி அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலை அறிவிப்பும் அதன் பிந்தைய விளைவுகளும் பசுமையாக நினைவில் இருந்த காலத்தில்கூட, தேசியப் பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்ஏ) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. 1994-ல் பயங்கரவாத எதிர்ப்பு - சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (தடா) கொடூரமானதாக இருந்தபோதும் - ‘செல்லும் என்றது. 1996-ல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ) செல்லத்தக்கதே என்றது. 2004-ல் பயங்கரவாதத் தடைச் சட்டம் (பொடா) ‘சரியானதே என்று அங்கீகரித்தது.

நீதிமன்ற அணுகுமுறை மாறட்டும்

  • இந்த வழக்குகளையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்தால் ஒரு பொதுவான போக்கு கண்ணுக்குப் புலப்படும். இந்தச் சட்டங்கள் அனைத்துமே பல குற்றங்களையும் உள்ளடக்கும் தன்மையுடன் வெகு அகலமாகவும் தெளிவில்லாமலுமே இயற்றப்பட்டுவருகின்றன. இவையெல்லாம் எந்தவித விசாரணையுமின்றி மக்களை ஆண்டுக்கணக்கில் காவலில் வைத்திருக்க அனுமதித்துள்ளன.
  • இந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. வழக்கு முடியும் தருணத்தில், அரசுத் தரப்பில் அளிக்கப்படும் சாட்சியங்கள் வலுவில்லாமல் வழக்கு பெரும்பாலும் தள்ளுபடியாகிவிடும். இந்த வழக்குகளை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், அரசு தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் இப்படி நேர்கின்றன, நிர்வாகரீதியாகப் பரிகார நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இவற்றைச் சரிசெய்துவிடலாம் என்கிறது.
  • இப்படி அரசு தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணமே இந்தச் சட்டத்தின் வடிவமும் அதில் காணப்படும் வாசகங்களும்தான் என்பதைக் காணத் தவறுகிறது உச்ச நீதிமன்றம். இந்தச் சட்டத்தால் அரசுக்குக் கிடைக்கும் ஒரே பயன் மக்களுடைய சிவில் உரிமைகளை ஒடுக்க முடிவதுதான்.
  • இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றால், தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அரசு கூறும்போதெல்லாம் அப்படியே உருகி அதை ஏற்கும் தன்னுடைய போக்கும் காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்து முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். ஏழு நீதிபதிகளைக் கொண்ட புதிய அமர்வு அதைச் செய்ய முடியும். அப்படி மீண்டும் பெரிய அமர்வு ஏற்படுத்தப்பட்டாலும், கடந்த காலத் தீர்ப்புகளை வழங்க வைத்த அந்தக் கோரமான கை, மீண்டும் ஒருமுறை அப்படிப்பட்ட தீர்ப்புக்கே வழிவகுக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

மிகப் பெரிய சிலந்தி வலை

  • இறுதியாக, தேசத் துரோகச் சட்டம் என்பது மக்களை ஒடுக்குவதற்காகச் சட்டப் புத்தகங்களில் இருக்கும் பல சட்டங்களைக் கொண்ட கதம்பத்தின் ஒரேயொரு பூ மட்டுமே. பிற சட்டங்களில் சிலவற்றை மேலே பார்த்தோம். இவற்றிலேயே மிகவும் கெட்டது எதுவென்றால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (யுஏபிஏ). இந்தச் சட்டம் மட்டுமல்ல; வடாலி வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இதற்கு அளித்த தீர்ப்புமே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் விடுதலை பெற முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கிறது. அதாவது, இந்தச் சட்டப்படி ஒருவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுவிட்டால் வழக்கு விசாரணையோ விடுதலையோ இன்றி அவர் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் சிறையிலேயே வாட வேண்டியதுதான்.
  • பீமாகோரேகாவோன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்று இதை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை இல்லாத சிறைவாசம் சிலருக்கு மூன்று ஆண்டுகளையும் கடந்துவிட்டது. எனவே, தேசத் துரோகம் என்ற சட்டமானது மிகப் பெரிய சிலந்தி வலை போன்ற அரசின் சட்டங்களில் ஒரு இழை மட்டுமே. இவை அனைத்துமே அரசின் பலிபீடத்தில் மக்களுடைய உரிமைகளைக் காணிக்கையாகக் காட்சிப்படுத்தும் ஏற்பாடாகும்.
  • உண்மையிலேயே தேசத் துரோகச் சட்டத்தைக் கைவிடுவதுதான் உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் என்றால் இந்தச் சட்டங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேச விரோதமாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலாக, சட்ட விரோதமாகச் செயல்படுவதைத் தடுக்க (யுஏபிஏ) கைதுசெய்யப்படுகிறார் என்று காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கைகள் மாறிவிடும்.
  • இதற்குப் பதிலாக, மனித மாண்புகளுக்கும் சிவில் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதன் தீர்ப்புகள் அமைய வேண்டும். தேசப் பாதுகாப்புக்காக என்ற பெயரில் எப்படிப்பட்ட சட்டங்களை வேண்டுமானாலும் இயற்றும் அரசின் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்று நீதித் துறை காட்ட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories