TNPSC Thervupettagam

தேசிய கல்விக் கொள்கையும் மொழிப் பாடங்களும்

August 22 , 2023 509 days 412 0
  • தமிழகத்தில் பல்கலைக்கழகத் துறைகளுக்கு, இணைப்புக் கல்லூரிகளுக்கு, தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு என மூன்று விதமான பாடத்திட்டக் குழுக்கள் இயங்குகின்றன. ஒரு படிப்புக்குப் பல்கலைக்கழகத் துறைகளுக்கு கடினப்பாட்டோடு பாடங்கள் வடிவமைக்கப் படும். இணைப்புக் கல்லூரிக்கு எளிய முறையில் வடிவமைக்கப்படும். தன்னாட்சிக் கல்லூரிகளில் இரண்டு நிலைகளையும் உட்கொண்டு வடிவமைக்கப்படும்.
  • இம்மூன்று குழுக்கள் மட்டுமின்றித் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி  மன்றம் தேவைக்கேற்ப பாடத்திட்டக் குழுக் கூட்டங்களை நடத்திக் கல்லூரிப் பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கும்.
  • பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு, மாநில உயர்கல்வி மன்றம் செம்மொழித்தமிழ் உயராய்வு நிறுவனம்  போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதி நல்கை பெற்று சென்னை இலயோலோ கல்லூரி, கோவை பி. எஸ். ஜி. கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்கள் மொழிக் கல்வி, இலக்கியக் கல்வி குறித்துக் கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள் நடத்தியுள்ளன.
  • இவை கல்வியாளர்களின் கருத்தியல்களைத் தொகுத்து மாதிரிப் பாடத்திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளன. அவ்வகையில் கலைப் படிப்பு, அறிவியல் படிப்பு, வணிகப் படிப்பு என மூன்று வகையான மொழிப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைப் போன்று சமூக மதிப்பு, தனி மனித மதிப்பு, பண்பாட்டு மதிப்பு முதலியவற்றை மிகுதிப்படுத்தும் மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • தமிழ்நாடு அரசின் உயர்கல்வி மன்றம் 2023 } 24  கல்வி ஆண்டில் பொதுத்தமிழ் பாடத்திற்கு  மூன்று பாடத்திட்ட வரைவுகளை அறிமுகம் செய்துள்ளது.
  • இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயில்கின்ற மாணவர்களுக்கு ஒரு வகையான பாடத்திட்ட வரைவையும் பிற கலை அறிவியல் பயில்கின்ற மாணவர்களுக்கு ஒருவகையான பாடத்திட்ட வரைவையும் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் பயிலாத மாணவர்களுக்கு அறிமுக நிலையில் இரண்டு தாள்களை மொழிப்பாடம் என்ற நிலையிலும் அறிமுகம் செய்துள்ளது.
  • தமிழ் இலக்கியம் பயில்கின்ற மாணவர்களுக்கான பாடமாகத் தமிழியல் கல்வி ஆதார வளங்கள், தமிழ் மொழி அமைப்பியல், தமிழக வரலாறும் பண்பாடும், தமிழகக் கலைகள் என்று நான்கு தாள்களை வகுத்திருக்கிறார்கள். இதுநாள் வரையிலும் தமிழகத்தில் தமிழ் படிப்பிற்கு என்று தனியான மொழித்தாள் இல்லாத நிலையில் உயர்கல்வி மன்றத்தின் மூத்த பேராசிரியர்கள் மிக உன்னதமான உயரிய ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
  • இப்பாடத்திட்டத்தில் தமிழ் பயிலுகின்ற மாணவர்கள் மொழியின் தற்காலத் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்கின்ற அடிப்படையில் மொழியினுடைய அடிப்படை அலகுகளை  மொழியியல், கணினியியல் பின்னோட்டத்தோடு கொடுக்கின்ற ஒரு முழுமையான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
  • தமிழக மரபிற்கு மாறாகப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.  இப்பகுப்பில் மூன்று தாள்கள் பொருத்தமாக இருக்க நான்காவது தாளில் "தமிழகக் கலைகள்' என்று பொதுவான ஒரு அறிமுகத் தாளை இணைத்திருப்பதை மேலாய்வு செய்து வேறு ஒரு தாளை இணைத்திருந்தால் மிகச் சிறந்த பாடத்திட்டமாக இதைக் கருதலாம்.
  • அதைப்போலவே பிற கலை, அறிவியல் மாணவர்களுக்கு நான்கு தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கணப் பகுதிகள், பயன்முறை இலக்கணப் பகுதிகள், எழுத்துப் பயிற்சிகள், படைப்பிலக்கியங்கள், காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள், இலக்கிய வரலாறு என வழக்கமான தமிழகத்து மொழிப்பாட நிலையில் நல்ல ஒரு திட்டமிடுதலோடு மாணவர்கள் அறிதல், பொருத்திப் பார்த்தல் என்கின்ற நிலைப்பாட்டோடு பயன்முறைத் தமிழை "அப்ளைட்' என்று சொல்லுகின்ற நிலைப்பாட்டில் போட்டித் தேர்வுகளை மனத்தில் கொண்டு பொருத்தமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ் பயிலாத மாணவர்களுக்காகப் பட்டப் படிப்பில் அறிமுக நிலையில் சில இலக்கியங்களையும் மொழியின் அடிப்படைக் கூறுகளையும் அறிமுகம் செய்கின்ற வகையில் இரண்டு தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
  • இந்நிலையிலிருந்து மொழிப்பாடத்தை வளர்த்தெடுப்பது என்கின்ற மனநிலையில் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் உயர்கல்வி மன்றம் பொதுத் தமிழுக்குப் புதிதாக நான்கு தாள்களை அறிமுகம் செய்து கலை அறிவியல் படிப்புகளில் பின்பற்றலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. அவை "தமிழ் இலக்கிய வரலாறு 1', "தமிழ் இலக்கிய வரலாறு 2', "தமிழக வரலாறும் பண்பாடும்', "தமிழும் அறிவியலும்' என்பனவாகும்.
  • இப்பாடத் திட்டத்திற்குள் தமிழக வரலாறும் பண்பாடும், தமிழும் அறிவியலும் என்னும் இரண்டு தாள்கள் தொடர்பில்லாமல் இணைக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு தாள்களில் "காலம்தோறும் தமிழிலக்கியங்கள்' இணைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளே திணிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன. இந்த இரண்டு தாள்களில் அலகுகள் அடிப்படையில் ஒரு சீரான வளர்ச்சி நிலை இல்லை என்பதையும் உணர முடிகிறது.
  • இந்த இரண்டு தாள்களைச் சீர் செய்வது மட்டுமின்றி அடுத்த இரண்டு தாள்களாக அமைந்துள்ள தமிழக வரலாறும் பண்பாடும் தமிழும் அறிவியலும் என்னும் இரண்டு தாள்களையும் உயர் கல்வி மன்றத்தினுடைய மூத்த பேராசிரியர்கள் என்ன நோக்கத்திற்காக இணைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
  • மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை இந்தியாவில் பல மாநிலங்கள் பின்பற்றியதாக அறிவிக்கின்றன. இன்றுவரை தெளிவான வழிகாட்டல் இல்லை. கர்நாடக அரசு கல்வி நிலையங்கள் பின்பற்றுவதாகச் சொல்லப்பட்டது. அங்கு அமைந்த புதிய அரசு பின் வாங்கத் தொடங்கிவிட்டது. கேரள அரசு மத்திய மாநிலச் சிந்தனை மரபுகளை இணைத்துப் புதிய வடிவத்தை அடைய முயல்கிறது.
  • இந்திய அரசின் மையப் பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ பின்பற்றுவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. பணியாற்றும் பேராசிரியர்கள் பின்பற்றுவதற்குரிய தெளிவான பரிந்துரைகள் இல்லை என்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பின்பற்ற முனைந்து அடுத்தக் கல்வியாண்டுக்கெனத் தள்ளிப்போடுகின்றனர். அல்லது ஆசிரியர் மாணவர் நலம் சார்ந்த சில  பரிந்துரைகள் பின்பற்றப்படுகின்றன.
  • மொழிப்பாடத்தைப் பொருத்தவரை பட்டப்படிப்புக்கு  வட்டார மொழிக்கும் ஆங்கிலத்துக்குமாக நான்கு தாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல், மூன்றாம் பருவங்களில் தமிழும் இரண்டாம், நான்காம் பருவங்களில் ஆங்கிலமும் நடத்தத் திட்டமிடுகின்றனர். பாடமில்லாப் பருவத்தில் மொழியாசிரியர்களுக்குப் பணி நேரமிருக்காது.
  • தமிழகத்தில் மொழிக்கல்வி தொடக்க வகுப்பு முதல் உயர்கல்வி வரை ஒரே சீராக அமையவில்லை. பல்கலைக்கழங்களுக்கும் படிப்புகளுக்கும் ஏற்ப முரண்பட்டு அமைந்திருந்தன. கடந்த கல்வியாண்டில் அண்ணாமலைப் பல்கலக்கழகத்தில் இணைப்புக் கல்லூரிகள் இணைக்கப்பட்டபோது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் போல மொழிப் பாடத்தைப் பின்பற்றுவோம் என அறிவித்தனர் (சில பாடங்களுக்கு இரண்டு தாள்கள்; சில பாடங்களுக்குக் குறைவான மணி நேரம்).
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  இளநிலை  படிக்கின்ற மாணவர்கள் மொழிப்பாடமாக நான்கு தாள்கள் நான்கு பருவங்களில் பயில்கின்றனர். வணிகம், கணினிசார் பாடங்களுக்கு மொழிப் பாடம் வேண்டாம் என்னும் கருத்துரு பின்பற்றப்பட்டு வருகிறது. இக்கருத்தே மத்திய அரசின் மொழிப்பாடக் கொள்கையாக அறிமுகம் செய்யப்பெறுகிறது. 
  • இக்கொள்கை முடிவை எதிர்த்துத் தனி நபர்களும் அமைப்புகளும் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு அறிக்கைகளை, கடிதங்களை அரசுக்கு அனுப்பி வைத்தனர். உயர்கல்வித் துறை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் நான்கு தமிழ்த் தாள்கள் இடம்பெறும் என்ற அறிவிப்பை வழங்கியது.
  • அரசு எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் நாங்கள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டோம் என்று இன்றும் இரண்டு தாள்கள் மட்டும் அல்லது வாரத்திற்கு நான்கு மணி நேரம் மட்டும் நடத்துகின்ற கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. தமிழ்ப் பாடம் தானே யார் வேண்டுமானாலும் நடத்தலாம். விடைத் தாள்களைத் திருத்தலாம் என்னும் மனநிலை உருவாகியுள்ளது.
  • பொறியியல் கல்லூரிகளில் மொழிப்பாடம் என்னும் நிலையில் தமிழில் அறிவியல் என்னும் பாடம் நடத்தப்பெறுகிறது. ஆனால் அறிவியல் தமிழ் நடத்தப் பெறவேண்டும். இவற்றைக் கவனிக்க வேண்டிய உயர்கல்வித் துறையும் பல்கலைக்கழகங்களும் கல்லூரி வளர்ச்சிக் குழுவும் கவனிப்பைத் தவற விட்டன.
  • இச்சூழலில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணையான மாநில அரசின் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்கின்ற ஒரு செயல்பாட்டினை உயர் கல்வித்துறை மார்ச் மாதத்தில் முன்னெடுத்தது. அதற்காகப் பாடத்திட்டங்களும் புதிய வரைவுகளும் உருவாக்கப் பட்டன.
  • இக்கல்வியாண்டிலேயே பின்பற்றவேண்டும் என அரசு வலியுறுத்தியபோது சில அரசுப் பல்கலைக் கழகங்களே பல காரணங்களைச் சொல்லிப் பின்பற்றத் தயங்கின.
  • நல்லனவற்றை ஏற்பதும் அல்லாதவற்றை விவாதிப்பதும் வேண்டும். இன்று உயர்கல்வித் துறையும் உயர்கல்விமன்றமும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள், துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களைச் சந்தித்து விளக்கத்தையும் ஒப்புதலையும் பெற்று வருகின்றன. மொழிக்கல்வியையும் மொழிப்பாடத்தையும் காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கல்வியாளருக்கும் உள்ளது.

நன்றி: தினமணி (22  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories