TNPSC Thervupettagam

தேச வளர்ச்சியும் இந்திய குடிமைப் பணியும்

July 6 , 2023 508 days 393 0
  • இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் 13 லட்சம் பேர் கடந்த மே மாதத்தில் கலந்து கொண்டனர். இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்திலும், நேர்முகத் தேர்வு 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் நடைபெற உள்ளன.
  • இந்திய குடிமைப் பணிகளில் இடம் பெற்றுள்ள பதவிகளுக்காக ஆண்டுதோறும் சுமார் 1,000 பேரை மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவதையே லட்சியமாகக் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
  • கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் பங்கெடுத்துக் கொள்ள விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்பவர்களில் 0.2% பேர், அதாவது ஆயிரம் பேரில் இரண்டு பேர்தான் வெற்றி பெறுகின்றனர் என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
  • இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி சதவீதம் மிகக் குறைவாக இருந்தாலும், இப்பதவிகளைக் குறிவைத்து பல லட்சம் இளைஞர்கள் தங்களின் கல்விப் பயணத்தைத் தொடர்கின்றனர். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர்.
  • ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்த பின்னர், வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை கட்டமைக்கும் பணியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வந்தாலும், அரசு நிர்வாகத்தை முறையாக இயக்கி, அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடையச் செய்யும் பொறுப்பு இந்திய குடிமைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுடையது ஆகும்.
  • இந்திய குடிமைப் பணியில் முதன்மையானதாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் முழுவதும் நேர்மை, அயராத உழைப்பு, ஒழுக்கம் தவறாமை போன்ற பண்புகளுடன் சுதந்திர இந்தியாவில் பணிபுரிந்துள்ளனர். ஆங்கிலேய காலனி நாடாக விளங்கிய இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அவர்கள் பணியாற்றியுள்ளனர்.
  • இந்திய குடியரசின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். இந்திய தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, இந்திய குடியாட்சி முறைக்கு வலுசேர்த்த முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (1932 - 2019) இந்திய ஆட்சிப் பணியாளராக தனது பணியை தமிழ்நாட்டில் தொடங்கியவர்.
  • கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்திய பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டபோது, 1991-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியதில், பொருளாதார வல்லுநர்களுடன் இணைந்து இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த சிலரும் பெரும்பங்காற்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒய்.வேணுகோபால் ரெட்டி, ஐ.ஏ.எஸ். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இவர் பணியாற்றியபோது, வங்கிச் சீர்திருத்தங்கள் பலவற்றைக் கொண்டுவந்துள்ளார்.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், மனித மலத்தை மனிதர்கள் அள்ளி, சுத்தம் செய்த அவலநிலை பரவலாக இருந்து வந்தது. மனித மலத்தை அள்ள மற்றொரு நபரை பணியில் ஈடுபடுத்தும் செயல், அந்த நபருக்கு இழைக்கப்படும் உச்சகட்ட அநீதி. இத்தகைய நடைமுறையை முற்றிலும் நிறுத்த, மாற்று திட்டங்களைச் செயல்படுத்தியவர்கள் பட்டியலில் எஸ்.ஆர். சங்கரன் ஐ.ஏ.எஸ் (1934 - 2010) குறிப்பிடத்தக்கவர். தமிழ்நாட்டில் பிறந்த இவர், திரிபுரா மாநில தலைமைச் செயலராகப் பணியாற்றியுள்ளார்.
  • நம் நாட்டு குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை முன்னெடுத்து செயல்பட்டவர்கள் பட்டியலில் அனிதா கௌல் ஐ.ஏ.எஸ். (1954-2016) முக்கிய இடம்பெறுகிறார். பொது சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்து கிராமப்புற ஏழை மக்களைச் சென்றடையும் வகையில் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியவர்கள் பட்டியலில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
  • இந்திய ஆட்சிப் பணியைப் போன்று இந்திய காவல் பணியில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக காவல்துறையில் தங்களை இணைத்துக் கொண்டு, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, பொதுமக்களின் சமூக உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்தியாவின் அமைதிக்கு பேராபத்தாக விளங்கிய நக்ஸலைட், மாவோயிஸ்ட், காலிஸ்தான் போன்ற தீவிரவாதக் குழுக்களை நிர்மூலமாக்கியதிலும், இயற்கை வளங்களைச் சூறையாடி, கடத்தலில் ஈடுபட்டவர்களை அடக்குவதிலும், கள்ள நோட்டுகளை அச்சிட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றவர்களை நுட்பமான புலன்விசாரணையின் மூலம் கண்டறிந்ததிலும் இந்திய காவல் பணியைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டுள்ளனர்.
  • அமைச்சர்களிடம் நயந்து பேசி, கனிவுடன் நடந்து கொண்டு, தாங்கள் விரும்பும் இடத்துக்கு பணியிடமாற்றம் பெற்றுக் கொள்ளும் முயற்சியை இழிவான செயல் என ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடந்த காலத்தில் கருதினர்.
  • மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுதல், குற்றத்தடுப்பு பணியில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுத்தல் என நாட்டின் வளர்ச்சிப் பணியில் நேர்மையுடன் பணிபுரிந்துவந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ய அமைச்சர்கள் தயங்கிய சம்பவங்கள் பலவும் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன.
  • இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய சூழலில், இந்திய குடிமைப் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் செயல்பாடுகளில் சமுதாயத்தின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படுகின்ற மாற்றங்களைக் காணமுடிகிறது.
  • மக்களின் நலன் சார்ந்து செயல்பட வேண்டிய இந்திய குடிமைப் பணி அதிகாரிகளில் ஒரு சிலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் போன்று செயல்படுகின்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • ஒவ்வொரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியும் அவரவர் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிபவர்கள் கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் பணி செய்கின்றனரா எனக் கண்காணிக்க வேண்டிய "விஜிலென்ஸ் அதிகாரி' ஆகச் செயல்பட வேண்டும். ஆனால், உயரதிகாரிகள் சிலரின் நேர்மையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கும்போது, அவர்களால் எப்படி நேர்மையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடியும்?
  • கையூட்டாக சில ஆயிரம் ரூபாய்கள் வாங்கும் அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது குற்ற வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் நிகழும் ஊழல் முறைகேடுகளை அரசு நிர்வாகம் எளிதில் கடந்து சென்று விடுகிறது. ஊழலுக்கு துணைபுரிந்து, கையூட்டு பெற்ற உயரதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்வதோடு, தன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது.
  • சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, உளவு, லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட காவல் துறையின் முக்கிய துறைகளை நிர்வகிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணிநியமனம் தற்போது "பதவி வேட்டை' களமாக மாறி வருகிறது.
  • தேர்தலை மையப்படுத்தி, இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலையும் நிலவுகிறது. தேர்தல் நடைமுறையில் சாதகமாக நடந்து கொள்வார்கள் என்றும், தேர்தல் பிரசாரத்தில் விதிமீறிய செயல்களுக்கு துணைபுரிவார்கள் என்ற நம்பிக்கையும் அரசியல் கட்சிகளிடம் இருப்பதே இத்தகைய பணியிடமாற்றத்திற்கான காரணங்கள் ஆகும்.
  • ஒழுக்கக்கேடான செயல்களில் இந்திய குடிமைப் பணியைச் சேர்ந்த சிலர் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், அண்மையில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
  • அரசு நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், செழுமையான பதவியை நோக்கி காய் நகர்த்தாமலும், திறமையுடன் பணியாற்றி வருகின்ற இந்திய குடிமைப் பணியைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலர் பணியில் இருந்து வருகின்றனர்.
  • அத்தகைய அதிகாரிகளில் இருவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றனர். அவர்களில் ஒருவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இவரின் பணி நிறைவுக்குப் பின்னர், பதவி நீட்டிப்பு கொடுக்க அரசு முன்வந்ததை இவர் ஏற்க மறுத்து, இளையோர் நிர்வாகம் செய்ய வழிவிட்டார்.
  • மற்றொருவர் தமிழ்நாட்டின் உளவுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி, உளவுத் தகவல்களை நுட்பத்துடன் திரட்டுவதில் கைதேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டுவதில் திறமையானவர் என இந்திய அளவில் அறியப்பட்டவர்.
  • அழுத்தத்துக்கு அடிபணியாமல், நேர்மையுடன் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும். நேர்மை, திறமை, சமுதாய நலனில் அக்கறை கொண்ட அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் பணி அமர்த்துவதே சிறந்த ஆட்சிமுறைக்கு வழி வகுக்கும்.

நன்றி: தினமணி (06 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories