TNPSC Thervupettagam

தேடலின் கதவைத் திறக்கும் கேள்விகள்

January 2 , 2024 374 days 284 0
  • ஆசிரியர் என்பதால் வளரிளம் பருவக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அதிகம். பல்வேறு ஊர்களுக்கும் சென்று வளரிளம் பருவக் குழந்தைகளோடு கலந்துரையாட முயல்கிறேன். குறிப்பாக, அவர்களின் மனதில் எழும் கேள்விகளில் இருந்து கலந்துரையாட முயல்கிறேன். பல்வேறு குறும்படங்களைப் பார்த்து, அவை குறித்து மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் என்று கலந்துரையாடலைத் தொடங்குவேன். வகுப்பறையில், சிறப்புக் கூட்டங்களில் பேசாமல் இருக்கவே குழந்தைகள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் கேள்விகள் வெளிப்படும்போதுதான் கற்றல் தொடங்குகிறது.
  • மாற்றுப் பாலினத்தவர் களுக்கான வசதிகள் பள்ளியில் ஏன் இல்லை? ஆணும் பெண்ணும் பேசினால் ஏன் தவறாகவே சொல்கிறார்கள்? ஆணாதிக்கம் என்றால் என்ன? பாகுபாடு என்றால் என்ன? சமத்துவம் என்றால் என்ன என்பது போன்று மனதுள் தோன்றும் ஏராளமான கேள்விகள் குறித்த பதில்களைக் குழந்தைகள் எங்கே தேடுவார்கள்?

உரையாடல் தேவை

  • குழந்தைகள் வீடு, சமூகம் ஆகிய இரண்டின் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்கும் இடம் பள்ளி. சமூகத்தின அங்கம்தான் வீடும் பள்ளியும் என்றாலும் அது உருவமற்றது. பள்ளி, குழந்தைகளுக்கான இடம். அவர்களின் தேடலுக்கான களம். அங்கு குழந்தைகள் தானே தேடிக் கற்கும் வசதி இருந்தாலே போதும். பெரும்பாலும் பள்ளிகளில் ஐந்து பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிப் பாடங்கள். மற்றவை அறிவுப் பாடங்கள். மொழிப் பாடங்கள், அவற்றைக் கற்பிக்கும் முறைகளைப் பற்றித் தனியாக விரிவாகப் பேச வேண்டும்.
  • இப்போதைக்குச் சில கேள்விகள், 17 வயது வரை மொழிப் பாடங்களைப் படிக்கும் குழந்தைகளுக்கு அடிப்படையான மொழித்திறன்களே ஏன் இல்லை? ஒரு சிலருக்குத் திறன்களில் குறைபாடு இருக்கிறது என்றால் பரவாயில்லை. முக்கியமாகப் பள்ளியில் கற்பிக்கப்படும் திறன்கள், வாசித்தலும் எழுதுதலும்.
  • அவற்றில் குறைபாடு அதிகமானவர்களுக்கு இருக்கிறது என்றால் அது குழந்தைகளின் குறையா? அல்லது பாடநூல், கற்பித்தல் முறையின் குறையா? அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என்ற இந்த மூன்றையே காலங்காலமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய பாடங்கள் தேவையா இல்லையா என்ற உரையாடல்கள் ஏன் நிகழவில்லை?
  • பூமி எப்படித் தோன்றியது என்று ஒரு சிறுமி கேட்டாள். நெபுலா வெடித்துச் சூரியக் குடும்பம் உருவானது என்றேன். நெபுலா எப்படித் தோன்றியது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று கேள்விகளை அடுக்கினாள். இவை குறித்து நான் வாசித்தது இல்லையம்மா.
  • நிச்சயம் புத்தகங்கள் இருக்கும் என்றேன். கேள்வியிலேயே பதில் இருக்கும் என்று சொல்றாங்க. பிறகு ஏன் எங்களைப் பதில் எழுதச் சொல்றாங்க என்று ஒருவன் கேட்ட கேள்வி சிரிப்பையும் சிந்தனையையும் தோற்றுவித்தது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு குழந்தைகள் குறிப்பாக வளரிளம் பருவத்தினரிடம் நடத்தை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
  • இதனால் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. வளரிளம் பருவத்தினர் மீது இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏராளம். அவற்றை யெல்லாம் தீர்க்க வேண்டும். எப்படித் தீர்ப்பது என்ற உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.

சுமையாகும் பாடங்கள்

  • வாழ்க்கை முறையைப் பழகும் இடமாகப் பள்ளி இல்லை. பட்டப்படிப்பிற்கு ஏற்ற செய்திகளை, அடிப்படைகளைத் திணிப்பதாகவே பெரும்பாலான பாடப்பொருள்கள் உள்ளன. பள்ளிகளில் கணக்குப் பாடம் ஏற்படுத்தும் பயத்தின் விளைவு தானே, இப்போது பல கல்லூரிகளில் கணக்குப் பாடப்பிரிவு மறைந்து கொண்டிருப்பது. மேலும், தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகத்தானே பாடங்கள் இருக்க வேண்டும்.
  • பாடப்புத்தகத்தின் பொருளடக்கம் மாறும் போதெல்லாம் செய்திகளும் பக்கங்களும் அதிகமாகின்றன. இதனால் புத்தகப்பையின் சுமை அளவுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் புத்தகங்களை வகுப்பறையிலேயே வைத்துச் சென்று விடுகின்றனர். தேடலின் கதவைத் திறக்கும் சாவிகளே கேள்விகள்.
  • குழந்தைகளின் பல்வேறு கேள்விகளில் இருந்து கலந்துரையாடி விடை தேடும் நெகிழ்வு ஏன் பாடப்புத்தகங்களில் இல்லை? பாடச்சுமையைக் குறைப்பது உடனடித் தேவை. பள்ளிக் கல்வி முழுவதும் செயல்பாடுகளின் வழியான கற்பித்தல் முறைதான் காலத்திற்கு ஏற்றது. கலந்துரையாடல்களின் வழியே தேடலின் கதவுகளைத் திறப்பதாகவே வகுப்பறைச் செயல்பாடுகள் அமைய வேண்டும். வயதுக்கு ஏற்ற திறன்களை முடிவுசெய்ய வேண்டும்.
  • அவற்றிற்கு ஏற்றபடி பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டும். ஓராண்டு முழுவதும் செயல்பாடுகளுக்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப பாடங்களின் அளவு இருக்க வேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மூலம் மதிப்பிடும் முறை மாற வேண்டும். ஒவ்வொரு திறனையும் மதிப்பிடும் முறைகளை உருவாக்க வேண்டும்.

திறன் வளர்ப்பு அவசியம்

  • விளையாட்டும் கலைகளும் 12 ஆம் வகுப்பு வரை தினசரிச் செயல்பாடுகளாக ஆக்கப்பட வேண்டும். போட்டிகளை நடத்துவதைவிட கலைவிழாக்கள், ஓவியக் கண்காட்சிகள் எனத் திறன்களை வெளிக்காட்டும் நிகழ்வுகளை நடத்த வேண்டும். விட்டேத்தியான மனநிலை, போதை, கட்டற்ற இணையப் பயன்பாடு போன்ற பலவற்றால் வளரிளம் பருவத்தினரின் நடத்தை வேகமாகச் சிதைந்துகொண்டே இருக்கிறது.
  • பாடச்சுமையின் அழுத்தத்தால் திகைத்திருக்கும் குழந்தைகளைப் பிற பழக்கங்கள் எளிதில் கவ்விக் கொள்கின்றன. பாடப்புத்தகங்கள், வகுப்பறைச் செயல்பாடுகள் ஆகியவற்றில் என்ன மாற்றங்கள் தேவை என்ற உரையாடலைக் குழந்தைகளிடமிருந்தே தொடங்க வேண்டும். வயதுக்கு ஏற்ற திறன்கள், மதிப்பீட்டு முறைகள் ஆகியற்றை காலத்துக்கு ஏற்ப மாற்றிய பிறகு கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும்.
  • அதன் பிறகே புத்தகங்களை மாற்ற வேண்டும். பாடப்பொருள் குழுவைப் போலவே பாடங்களை எளிய மொழியில் எழுதும் எழுத்தாளர் குழு அவசியம். பாடநூல்கள் கேள்விகளைத் தொடங்கி வைக்க வேண்டும். விடைகளைக் தேட உதவும் பல்வேறு புத்தகங்கள் பள்ளி நூலகங்களில் இருக்க வேண்டும். தேடித் தெளிவதுதானே கல்வி. அடுத்த தலைமுறையை மனிதத்தோடு உருவாக்க வேண்டும் என்றால் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் உடனடியாகத் தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories