TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்கள்: சட்டங்களில் பா.ஜ.க. அரசு செய்த திருத்தங்களும் வெளிப்படும் தகவல்களும்

February 21 , 2024 187 days 128 0
  • உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை எதிர்கொண்டு, இதுவரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை மக்கள் முன்னால் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன வங்கியும் தேர்தல் ஆணையமும்.
  • தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வங்கி மூலம் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை  அளித்தவர்கள் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும் என்றும் அவற்றை மார்ச் 13 ஆம் தேதிக்குள் மக்கள் பார்வைக்குத் தன் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
  • அரசியல் கட்சிகளுக்காக நன்கொடைகள் திரட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் திட்டத்தைத் தடங்கலின்றிச்  செயல்படுத்த வசதியாக ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் எல்லாமும் திருத்தங்களைச் செய்தது மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு.
  • தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • தாமாக முன்வந்து ரூ. 20 ஆயிரத்துக்குக் கூடுதலாக அரசியல் கட்சிகளுக்குத்  தரப்படும் அல்லது பெறப்படும் நன்கொடையாளர்களின் பெயர், விவரங்கள் தொடர்பான ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும் என்ற வகைப்பாட்டிலிருந்து தேர்தல் நன்கொடைப் பத்திரங்களுக்கு விலக்கு அளிக்கும் விதத்தில் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது என்ற விவரத்தை வெளிப்படுத்துவதிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • நன்கொடை அளிக்க வேண்டுமானால் 7.5 சதவிகிதம் நிகர லாபத்தைப் பெரு நிறுவனங்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, நஷ்டத்தில் நடக்கும் கம்பெனிகள்கூட நன்கொடைகள் வழங்கலாம் என்று அனுமதிக்கும் வகையில் 2013 ஆண்டு கம்பெனிகள் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
  • இந்த தேர்தல் பத்திர நன்கொடைத் திட்டத்தின் மூலம் மிக அதிக அளவிலான நன்கொடைகளைப் பெற்றிருப்பது பாரதிய ஜனதா கட்சிதான்.
  • மார்ச் 2023 வரையில் இந்தத் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள நன்கொடை ரூ. 16.5 ஆயிரம் கோடிகள். பாரதிய ஜனதா கட்சிதான் மிக அதிக அளவாக, சுமார் 55 சதவிகிதம், நன்கொடைகளைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக, காங்கிரஸ் கட்சி, இதில் ஆறில் ஒரு பங்கு, 9.3 சதவிகித நன்கொடைகளைப் பெற்றிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஏராளமான அரசியல் கட்சிகள் நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன.
  • (தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய முழு விவரங்களையும் தன்னுடைய தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா குறிப்பிட்டிருக்கிறார்).
  • இவ்வாறு அரசியல் கட்சிகள் நன்கொடைகளைத் திரட்டுவதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்பட அனைத்துச் சட்டங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு செய்த திருத்தங்கள் அனைத்தையும் சட்ட விரோதமானவை என்று  அறிவித்ததுடன் நில்லாமல், தேர்தல் பத்திரங்களுடன் சேர்த்து இவை அனைத்தையும் தற்போது உச்ச நீதிமன்றம் ரத்தும் செய்துவிட்டது.
  • மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவாகக் கொண்டுவந்து நிறைவேற்றியது மத்திய அரசு என்பதும் குறிப்பிடத் தக்கது.  ஏனெனில், நிதி மசோதாவாக மக்களவையில் கொண்டுவந்தால் மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநிலங்களவையில் ஒருவேளை நிராகரிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சமே இதற்கான காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது.
  • பாரதிய ஜனதா கட்சி அரசில் நிதி அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த காலகட்டத்தில்தான் இந்தத் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இவருடைய காலத்தில்தான் ஜி.எஸ்.டி. அமல், பண மதிப்பிழப்பு போன்றவையும் நடைமுறைக்கு வந்தன என்பது குறிப்பிடத் தக்கது!
  • இந்த நன்கொடைத் திட்டம் கொண்டுவரப்பட்ட போதே இதன் பின்னணி ரகசியத்தை விளக்கிக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
  • தங்களுடைய கறுப்புப் பணத்தைப் பல பெரு நிறுவனங்கள் இதன் மூலம் வெள்ளையாக்கிக் கொள்ள முடியும். பெருந்தொகையை அரசியல் கட்சிகளுக்கு (பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு) வழங்குவதன் மூலம் தங்களுக்கான ஆதாயங்களையும் அரசுகளிடமிருந்து இத்தகைய நிறுவனங்களால் பெற முடியும்.
  • தேர்தல் நன்கொடைப் பத்திரங்களுக்காக சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டு, முழு விவரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் பல தகவல்கள் வெளிப்படலாம்.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக, அரசியல் கட்சிகளுக்கு யார் யாரெல்லாம் நன்கொடை கொடுத்தார்கள், யார் யாருக்கெல்லாம் நன்கொடை கொடுத்தார்கள், எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படும்போது மக்களுக்கு இன்னமும் தெளிவாகப் பல விஷயங்கள் புரிபடும் வாய்ப்பிருக்கிறது.
  • இந்த இடத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன் தெரிவிக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று:
  • அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டப்படுவது பற்றித் தெரிந்துகொள்ளப் பொதுவான உரிமை (general right) எதுவும் மக்களுக்கு இல்லை. தகவல் அறியும் உரிமை மக்களுக்கு உள்ள பொதுவான உரிமை (general right) அல்ல”.
  • பொதுவான உரிமை என்பது என்ன? அடிப்படை உரிமையா? தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரும் உரிமையா? இது பற்றி விரிவாக அல்லது விளக்கமாகத் தெரியவில்லை.
  • நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பாரத ஸ்டேட் வங்கியும் தேர்தல் ஆணையமும் எப்படிச் செயல்படுத்தப் போகின்றன?
  • இந்தப் பட்டியல் வெளிவரும்போது மிக அதிக அளவில் தேர்தல் பத்திர நன்கொடைகளைப் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, யாருக்கு எத்தகைய உதவிகளைச் செய்து கொடுத்தது என்பது தெரியவர வாய்ப்பிருக்கிறது.
  • மேலும், அரசியல் கட்சிவாரியாக நன்கொடைகள் வழங்கியவர்கள், நிறுவனங்களின் பட்டியல் வெளிவரும்போது, இவர்கள் எல்லாரும் (முறைகேடான) பலன்களை அரசிடம் பெற்றார்களா என்பதும் வெளிப்படும் வாய்ப்பு இருக்கிறது. எங்கே, எத்தகைய முறைகேடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதும்கூட தெரிய வரலாம்.
  • பிரதமர் நிதி என்கிற பி.எம். கேர்ஸ் நிதித் திட்டம் பற்றியும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுவும் யாருமே கேள்வி கேட்க முடியாத – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராத - யாருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லாத திட்டம்தான்.
  • யார் யாரெல்லாம் பி.எம். கேர்ஸ் திட்டத்துக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்? எவ்வளவு வழங்கியிருக்கிறார்கள்? இதற்குக் கைமாறாக  பலன்களைப் பெற்றிருக்கிறார்களா?
  • ஒருவேளை பி.எம். கேர்ஸ் திட்டத்துக்கும் இப்படியொரு விசாரணையும் முடிவும் வந்தால் இன்னமும் பல தகவல்கள் தெரிய வரலாம்.

நன்றி: தினமணி (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories