TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரம்

February 21 , 2024 187 days 186 0
  • அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதுதொடர்பாக மத்திய பாஜக அரசுகொண்டுவந்த தேர்தல் பத்திர முறையானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
  • அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்குக் கடந்த காலத்தில் வரைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்நிலையில், 2018இல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டமானது அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. உதாரணத்துக்கு, தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி வழங்குபவர்கள் தங்களைப் பற்றிய விவரத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவானது.
  • இதனால் அரசியல் கட்சிகளின் நிதி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை என்ற விமர்சனங்கள் பரவலாக எழத் தொடங்கின. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சட்டத்தில் திருத்தம்

  • தேர்தல் பத்திரம் திட்டம் அறிமுகமாவதற்கு முன்புவரை, ரூ.20,000க்கு அதிகமான நிதியை அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றால், அவற்றின் விவரத்தை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். மேலும், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் தங்கள் மொத்த லாபத்தில் 7.5% அல்லது வருவாயில் 10%க்கு அதிகமான நிதியை அரசியல் கட்சிகளுக்கு அளிக்க அனுமதி கிடையாது.
  • ஆனால், 2017இல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நிதி பற்றிய விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்கிற சூழல்உருவானது. மேலும், தேர்தல் பத்திரத் திட்டத்துக்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951, நிறுவனங்கள் சட்டம் - 2013, வருமான வரிச் சட்டம் - 1961,அந்நிய நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் - 2010 (FCRA) ஆகிய நான்கு சட்டங்களில் மத்தியஅரசு திருத்தம் கொண்டுவந்தது.
  • குறிப்பாக, ஒரு நிறுவனம் தனது மூன்று வருட நிகர லாபத்தில் 7.5% நிதியைத்தான் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்க முடியும் என்று இருந்த ஷரத்து நீக்கப்பட்டதால், ஒரு நிறுவனம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

தேர்தல் பத்திரம்

  • தேர்தல் பத்திரத்தை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலுள்ள, வங்கிக் கணக்கின் மூலமே பெற முடியும். அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் பத்திரத்தை விநியோகிக்கிறது.
  • தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும், நிறுவனமும் எஸ்பிஐ வங்கியிலிருந்து தேர்தல் பத்திரத்தைப் பெற்று, ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1,00,000, ரூ.10,00,000 மற்றும் ரூ.1 கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்க முடியும்.
  • இவ்வாறு அளிக்கப்படும் தேர்தல் பத்திரத்தில், நிதியை யார் அளிக்கிறார்கள், எந்தக் கட்சிக்கு நிதி வழங்கப்படுகிறது என்பன போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்காது.

கட்சிகள் பெற்ற நிதிகள்

  • மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரையில், ரூ.16,518 கோடியை அரசியல் கட்சிகள் நிதியாகப் பெற்றிருக்கின்றன. இதில் தேசிய, மாநில அளவில் ஆளும் கட்சிகளே அதிகளவில் நிதியைத் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளன.
  • தனியார் நிறுவனம் ஒன்று திரட்டிய தரவின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. 2018–2023 காலகட்டத்தில் பாஜக ரூ.6,564 கோடியைத் தேர்தல் பத்திரம் மூலம் நிதியாகப் பெற்றிருக்கிறது. பாஜகவைத் தொடர்ந்து ரூ.1,123 கோடியுடன் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • ஆனால், இரண்டு கட்சிகளும் பெற்ற நிதியில்பெருமளவிலான வேறுபாடு உள்ளது கவனிக்கத்தக்கது. பிராந்தியக் கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ் ரூ.767 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ.622 கோடி, திமுக ரூ.616 கோடி தொகையை நிதியாகப் பெற்றுள்ளன.

அரசிடம் ஆதாயம்

  • தேர்தல் பத்திரம் திட்டத்தால்அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் நெறிப்படுத்தப்படும் என்று சொல்லித்தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. எனினும், இத்திட்டத்தின்படி நிதி வழங்குபவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதிவழங்கும்; அதன் மூலம் அரசிடமிருந்து அந்நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வாய்ப்பு உருவாகும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.
  • இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்திவந்தன.

நீதிமன்றத்தில் வழக்கு

  • 2017இல் தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms), காமன் காஸ் (Common Cause) ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 2018இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்தது. காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்குரும் இந்த வழக்கில் இணைந்துகொண்டார்.
  • இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
  • விசாரணை முடிவில், இந்தியக் குடிமக்களுக்குக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை அளிக்கின்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் தேர்தல் பத்திரத் திட்டம் மீறுவதாக உள்ளது என்று கூறி, அத்திட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்தனர். இது கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்கான திட்டம் என்னும் மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. தேர்தல் பத்திர முறை முடிவுக்கு வந்திருப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்; அரசமைப்புச் சட்டத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தி இந்து (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories