TNPSC Thervupettagam

தேர்தல் முடிவை தீர்மானிக்கும் பெண் சக்தி

March 13 , 2019 2094 days 1389 0
  • நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், புதிதாக வாக்களிக்கவிருக்கும் 3 கோடி இளம் வாக்காளர்களில், பெண்கள் 6.3 கோடி எனும் தகவல் ‘மகளிர் தினம்’ கொண்டாடப்படும் தருணத்தில் கூடுதல் மகிழ்வை அளிக்கிறது.
  • பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க முன்வருவது, இந்திய ஜனநாயகம் அடைந்துவரும் முதிர்ச்சியின் நேரடி உதாரணம். 2014 மக்களவைத் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் பெண்களின் வாக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறப்போகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.
  • 2014 தேர்தலில் ஒன்பது மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் அதிகம். அந்தத் தேர்தலில் வாக்களித்த ஆண் வாக்காளர்களுக்கும் பெண் வாக்காளர்களுக்கும் இடையிலான வித்தியாசம் 79% மட்டும்தான். அந்தத் தேர்தலில் 67.09% ஆண் வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். பெண் வாக்காளர்கள் 65.30%. இந்தியாவில் 1967-ல் நடந்த தேர்தலுக்குப் பிறகு, வாக்களித்தவர்களில் ஆண் பெண் வாக்காளர்களுக்கு இடையிலான குறைந்த வித்தியாசம் அதுதான். இந்நிலையில், 2019 தேர்தலில் பெண் வாக்காளர்கள் முன்பைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
பிரதிநிதித்துவம் குறைவு
  • 1954-ல் மக்களவை உறுப்பினர்களில் பெண்கள் 2%. இன்றைக்கு அது, 11.4% ஆக அதிகரித்திருக் கிறது. மாநிலங்களவையில் பெண்கள் எண்ணிக்கை 15%. சிறுபான்மைச் சமூகத்துப் பெண்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களும் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தேர்தலில் வாக்களிக்கின்றனர். இத்தனை இருந்தும், அச்சமூகப் பெண்களின் பிரதிநிதித்துவம் உயரவில்லை. ஆணாதிக்கச் சமூகத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
  • பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பராமரிப்பதாகக் காட்ட, பெரிய அரசியல் கட்சிகள் குயுக்தியான முறையைக் கடைப்பிடிக்கின்றன. தலித்துகள், பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்திவிடுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துவிட்டதைப் போன்ற மாயத் தோற்றத்தை இது அளிக்கிறது. உண்மையில், தனித் தொகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை 2%, பொதுத் தொகுதிகளில் 11.5%தான்.
  • வாக்களிப்பது கடமை என்பதற்காக மட்டும் அல்ல, நல்லாட்சி தருகிறவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பு இப்போது பெண்களிடம் பரவிவருகிறது. படித்தவர்களுக்கு இணையாக, ஏன் அவர்களைவிட அதிக எண்ணிக்கையில் பாமரப் பெண்கள் வாக்களிக்கின்றனர். நகரங்களைவிடக் கிராமங்களில் பெண்கள் வாக்களிப்பதும் உயர்ந்துவருகிறது. உணவு, குடிநீர், வேலைவாய்ப்பு, வீடு, துணிமணி, குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடம், சாலை வசதிகள், மின்சாரம், ரேஷன் கடைகள் என்று எல்லாவற்றின் முக்கியத்துவத்தையும் பெண்கள் முன்பைவிட அதிகமாக உணர்ந்துள்ளனர். இவற்றை வழங்க முன்வரும் கட்சிகளுக்கே ஆதரவு என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
  • ‘அப்பா சொன்னார்’, ‘கணவர் சொன்னார்’ எனும் காலம் மலையேறிவிட்டது. யாருக்கு வாக்களிப்பது என்பதைக் குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே தீர்மானிக்கும் நிலை மறைந்துவருகிறது. இப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களிலும், நூறு நாள் வேலைத் திட்டங்களிலும் மற்றவர்களுடன் பெண்கள் கலந்து பழகுகின்றனர். நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்கின்றனர். எழுதப் படிக்கத் தெரியாத பெண்களும்கூட தொலைக்காட்சிகளைப் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்கிறார்கள்.
  • ஊடகம், தகவல் தொழில்நுட்பத் துறை, காவல் படை, சுற்றுலாத் துறை, விமானப் படை, ராணுவம், கடற்படை என்று எல்லா துறைகளிலும் முத்திரை பதித்துவருகின்றனர். ஆட்டோ, கார் ஆகிய மோட்டார் வாகனங்களை ஓட்டும் உரிமம் பெற்று, சொந்தமாக வாங்கி ஓட்டும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஜனநாயகப் பங்கெடுப்பிலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் தொடர்ச்சிதான்.
அசத்தும் தலைவிகள்
  • உள்ளாட்சி மன்றங்களில் 50% இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அங்கே பெரிய புரட்சியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு, சூரியஒளி மின்சாரம் ஆகிய திட்டங்களிலும் கால்நடை வளர்ப்பு, சிறுசேமிப்பு, மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிலும் பெண்கள் குழுக்களாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். நவீன விவசாயச் சாகுபடிகளையும் ரசாயன உரமில்லாத இயற்கை விவசாய முறைகளையும் கையாளத் தொடங்கி விட்டனர். கிராமங்களின் தன்னிறைவுக்கு உள்ளாட்சி மன்றத் தலைவிகளின் பங்களிப்பு மகத்தானது.
  • இன்றைக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும்போது மகளிருக்கென்றே தனி திட்டங்களை அறிவிக்க நேர்கிறது. ‘மகளிரின் துயர் நீக்க’, ‘மகளிரின் சேமிப்பைப் பெருக்க’, ‘மகளிரின் நலனுக்காக’ எனப் பல திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகின்றன. திருமகள் திருமணத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வித் திட்டம், தொட்டில் குழந்தைகள் தத்தெடுப்புத் திட்டம், கர்ப்பிணிகளுக்குப் பேறுகால சிறப்புணவுத் திட்டம், குழந்தை பிறந்தால் மருந்து-மாத்திரைகளுடன் சீர்பொருட்கள் வழங்கும் திட்டம், பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தாமல் முடித்தால் ‘கன்யாஸ்ரீ ’ திட்டம் எல்லாம் மகளிர் நலன்களை மனதில் கொண்டே கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான். ஆதார் அடையாள அட்டை, ஜன்தன் கணக்கு, இலவச மொபைல் ஆகியவற்றை இணைத்து மத்திய அரசு அமல்படுத்திய ‘ஜாம்’ பெரு வெற்றியைப் பெற மகளிரே காரணம். இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் ‘உஜ்வலா’ திட்டம் பெருகவும் மகளிரின் ஆதரவும் வரவேற்புமே காரணம். எனவே, அரசும் அரசியல் கட்சிகளும் மகளிரின் முக்கியத்துவத்தை நன்றாகவே உணர்ந்திருக்கின்றன.
  • பொய்யான வாக்குறுதிகளையும் பசப்பலான சமாதானங்களையும் கூறி பெண்களை இனியும் ஏமாற்ற முடியாது. பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவும் தங்களுக்குரிய பணியினை அல்லது பொறுப்பினைக் கேட்டுப் பெறவும் தயாராகிவிட்டனர். இனிவரும் காலங்களில் பெண்களின் பங்கேற்பு இந்திய ஜனநாயகத்தில் அதிகரிக்கவே செய்யும் என்பதால், அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளிலும் வேட்பாளர்கள் தேர்விலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் மகளிருக்குச் செய்யும் மரியாதை.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories