TNPSC Thervupettagam

தேர்தல்

August 26 , 2019 1975 days 1115 0
  • தேர்தல்கள் மூலம் உள்ளாட்சி, மாநில மற்றும் மத்திய மக்கள் அவைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை அளிப்பதற்கு தங்கள் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான், அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் வகுக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகளின் முக்கியக் குறிக்கோளாகும்.
  • ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் வழிமுறைகள் வகுக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் மூலம் அவை அமல்படுத்தப்பட்டன. நாடு சுதந்திரமடைந்து சில ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்ட அந்த மாதிரி சட்ட திட்டங்கள், நேர்மை, நாணயம், மக்கள் சேவை ஆகிய காரணிகள் அதிக விகிதத்தில் கலந்த, அந்த காலகட்ட அரசியல் அரங்கை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை ஆகும். ஆனால், மக்களின் நன்மதிப்பை மட்டும் தங்கள் வாழ்நாள் சொத்துகளாகக் கருதிய அரசியல்வாதிகளை உள்ளடக்கிய யுகம் முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

மக்கள் சேவை

  • மக்கள் சேவைக்காக அரசியல் என்பதை மறந்து, சுய தேவைகளுக்காக அரசியல் அரங்கு பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் கலை வளர்ந்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இலை மறைவு, காய் மறைவாக நிகழ்ந்து கொண்டிருந்த பொது சொத்துகள் சார்ந்த பொருளாதாரக் குற்ற நிகழ்வுகள் இப்போது வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுவது மக்கள் நலனைப் பெரிதும் பாதிக்கும் விஷயமாகும்.
  • அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும், பத்து சதவீதம் வரைதான் மக்களைச் சென்றடைகிறது என்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பல ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துப் பகிர்வு, மக்கள் சொத்து பல்வேறு நிலைகளில் எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.

எதிர்மறையான நிகழ்வுகள்

  • இந்த மாதிரி எதிர்மறையான நிகழ்வுகளின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், மக்கள் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் சுயநல மேம்பாட்டுக் கொள்கைதான். தேர்தல் வழிமுறைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மெத்தனங்களும், தாமதங்களும் அரசியல்வாதிகளின் எதிர்மறை செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கின்றன.
     தகுதியான பிரதிநிதிகளின் தேர்வு முறைகளின் அடித்தளங்கள் காலப்போக்கில் பலவீனமடைந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  • அடித்தளங்கள் என்பது நடைமுறையில் இருக்கும் தேர்தல் வழிமுறைகளையே குறிக்கும். இந்த வழிமுறைகள் மூலம், ஜனநாயகத்தைவிட, பணநாயகம் அதிக வளர்ச்சி கண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
  • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கும் கலாசாரம் பிறந்து, வளர்ந்து, வேரூன்ற ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான பணம் வேட்பாளர்களால் செலவிடப்படுகிறது என்ற தகவல் இந்திய பொருளாதாரத்துக்கு ஒரு சவாலாகும். இவை அனைத்தும் கருப்புப் பணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தகுதி

  • தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலையை, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான முக்கிய அச்சாரம்தான் தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகும். அரசியல்வாதிகள் என்ற தனி வர்க்கத்துக்கு அளிக்கப்பட்டுவரும் பிரத்யேக சலுகைகள் பலவற்றை மறு ஆய்வு செய்வது இந்த மாதிரி சீர்திருத்தங்களில் அடங்கும்.
  • வேட்பாளர்களின் கல்வித் தகுதியானது, சீர்திருத்தங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு காரணியாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில், சாதாரண குமாஸ்தா பணியில் சேர்வதற்குக்கூட குறைந்தபட்ச தகுதியாக பட்டப் படிப்பு கோரப்படுகிறது. மக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் காக்கும் சட்டங்களை இயற்றும் வல்லமை படைத்த அரசியல்வாதிகளுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
  • மேலும், பணிக்கான தகுதித் தேர்வுகளில் சாதாரண குடிமகன் தேர்ச்சி பெற்றாலும், அந்தப் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன், அவருடைய தனிப்பட்ட அனைத்து விவரங்களும் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்படும். குற்ற நடவடிக்கைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது முதல் குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் இருந்தால், அவர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்.
  • இவற்றைத் தவிர, சில தனியார் நிறுவனங்களில், பணிக்கு விண்ணப்பித்தவர்களின் கடன் நிலுவை மற்றும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத வரலாறுகளும் ஆராயப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறையாவது, அவருடைய பணித் திறன் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், போதிய திறமையில்லாமைக்கு பணி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உருவாகும். சாதாரண குடிமகனுக்கு விதிமுறைகள் இப்படி இருக்கும்போது, நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாதது ஆச்சரியத்தை அளிக்கிறது. சாதாரண குடிமகனின் தகுதியிழப்பு காரணிகள், அரசியல்வாதிகளுக்கு தகுதி கூட்டும் காரணிகளாக அமைந்துவிடுவது பெரிய முரண்.
     தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கும் மேற்கண்ட விதிமுறைகள் பொருந்த வேண்டும்.
  • கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருப்பவர்கள், முதல் குற்ற அறிக்கை பதியப்பட்டவர்கள் முதலானோர் தேர்தலில் நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் தொகையைச் செலுத்தாமல் மோசடி செய்யும் வேட்பாளர்களைத் தடை செய்தால், அது ஒரு முன்னுதாரணமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், வங்கிகளின் வாராக் கடன்கள் குறையும் வாய்ப்பை உருவாக்கும்.

விதிமுறை

  • மேலும், நடைமுறையில் இருக்கும் விதிமுறைப்படி, சட்ட விதிகளுக்கு எதிரான குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கும் தகுதியை இழக்கிறார்கள். எந்த ஒரு குற்றச் செயலுக்காகவும் இரண்டு ஆண்டுகளுக்குக் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும் இந்த மாதிரி தடை பொருந்த வேண்டும்.
  • ஜனநாயக முறைப்படி, தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை உடைய கட்சி, ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெறுகிறது. அதற்கான எண்ணிக்கை குறைந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து, கூட்டு எண்ணிக்கை என்ற குறுக்கு வழியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. இவை பெரும்பாலும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாக அமைவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
  • இந்த மாதிரி கூட்டணி அரசுகள், தங்களுக்குள் எழும் அன்றாட சச்சரவுகளை தீர்த்துக் கொள்வதற்குத்தான் நேரத்தைச் செலவிட முடியுமே தவிர, மக்கள் நலனில் கவனம் செலுத்துவது என்பது இயலாத ஒன்றாகும். குறைந்த ஆயுளுடன் செயல்படும் கூட்டணி ஆட்சிகள் கவிழும்போது, குறுகிய காலத்தில் மக்களின் வரிப் பணத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

வாக்கு சதவிகிதம்

  • மேற்கண்ட சூழ்நிலைகளில், பெறப்பட்ட வாக்கு விகித அடிப்படையில் ஆட்சி அமைக்கும் தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்தப் பட்டியலில் குறைந்தபட்சம் 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகளை கணக்கில் எடுத்து, அவற்றில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்கத் தகுதி உடையதாக அறிவித்தால், மக்களின் வரிப் பணம் விரயமாவது தடுக்கப்படும்.
  • நிலையற்ற தன்மையான சூழ்நிலைகளில், சுய லாபத்துக்காக கட்சித் தாவல் நிகழ்வுகள் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. இதைக் கட்டுப்படுத்த, கட்சித் தாவல் தடை சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒரு கட்சியின் மூன்றில் இரு பங்கு அளவிலான உறுப்பினர்கள் கட்சி தாவினால், அது அங்கீகரிக்கப்பட்ட செயலாகக் கருதப்படும். தாவல் எண்ணிக்கை குறைந்தால், அவர்களுடைய பதவியைப் பறிப்பது என்ற தற்போதைய வழிமுறை, ஒரே மாதிரியான குற்றத்திற்கு இரு வேறு அளவுகோல் என்பது தெளிவாகிறது.
  • கட்சித் தாவல் தடை சட்டத்தில் உள்ள இந்த மாதிரியான முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர் கட்சி தாவினால், அவருடைய பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்கும் தகுதி முடக்கப்படவேண்டும்.
  • இடைத் தேர்தலை அவ்வப்போது நடத்த மக்களின் வரிப் பணம் செலவிடப்படுகிறது. வேட்பாளர்களின் மரணம் போன்ற காரணங்களுக்காக நடத்தப்படும் இடைத் தேர்தல்களுக்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். சட்டப்பேரவை போன்ற மக்கள் அவைகளின் ஆயுள் காலம் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாமல் இருக்கும் நிலையில்தான் இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
  • யானை போன்று கம்பீரமாக நடைபோட வேண்டிய இந்திய ஜனநாயகம், அரசியல்வாதிகளின் எதிரில் பூனையாக மண்டியிட்டுக் கிடப்பது வேதனைக்குரிய விஷயமாகும். "எப்படி இருக்க வேண்டிய நான், இப்படி இருக்கிறேனே' என்ற இந்திய ஜனநாயகத்தின் சோகக் குரல்கள், சாதாரண குடிமகனின் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. மண்டியிட்டுக் கிடக்கும் "பூனை'க்கு, முரண்பாடுகள் இல்லாத தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற "மணி' கட்டப்பட வேண்டும். அதுவரை, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஏட்டளவில் மட்டும் மார்தட்டி நாம் பெருமை பேசலாம்.

நன்றி: தினமணி(26-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories