TNPSC Thervupettagam

தேவந்தியின் கேள்வி

May 12 , 2024 248 days 220 0
  • தேவந்தியின் கதையைத் தமிழ் இலக்கிய வரலாறு, ‘கண்ணகியின் தோழி தேவந்தி’ என்று சுருக்கிவிடுகின்றது. பிற்காலத்தில் கண்ணகி அடைந்த புகழ் தேவந்தியின் இருப்பை இல்லாமல் செய்துவிட்டது. தேவந்தியின் துயரமான வாழ்க்கை, கண்ணகியின் செறிவூட்டப்பட்ட வரலாற்றுக்கு முன் ஒன்றுமில்லாமல் போனது. ஆய்வாளர்கள், பெரும்கதாபாத்திரங்களை மட்டுமே பிற்காலத்தில் விரிவானஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்; உதிரிகளை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அப்படியே எழுதியிருந்தாலும், அவர்களின் கதையை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே உரைநடையில் திரும்ப எழுதிவைத்தார்கள்.
  • தேவந்தி ஒரு தொன்மக் கதாபாத்திரம். அவரது வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது சிலகேள்விகள் எழுகின்றன. பாசாண்டச் சாத்தன் எனும் தெய்வம், மாலதி என்கிறபெண்ணின் துயரைத் துடைப்பதற்காக மனிதனாக அவதார மெடுக்கிறது. தெய்வம் மனித உருக்கொண்டு தேவந்தியுடன் வாழ்க்கை நடத்துகிறது. ஆனால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஒரு கட்டத்தில் விலகியும் சென்றுவிடுகிறது. மாலதியின் துயரத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்ட சாத்தன், அவர் திருமணம் செய்துகொண்ட தேவந்தியின் துயரத்தை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விமர்சனத்தைத்தான் எம்.ஏ.சுசீலா எழுதியுள்ள சிறுகதையான ‘தேவந்தி’ முன்வைக்கிறது.
  • எம்.ஏ.சுசீலா, எண்பதுகளில் இருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் புனைவுகள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காப்பியம், புராண உருவாக்கத்தில் பெரிய இடைவெளிகள் உள்ளன. பால்பேதம் இவ்விலக்கிய வகைமைகளில் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. நவீனச் சிந்தனைகளை உள்வாங்கிய எம்.ஏ.சுசீலா, இவற்றையெல்லாம் மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார். அப்படியொரு சிறுகதைதான் ‘தேவந்தி’. பாசாண்டச் சாத்தன் எனும் தெய்வத்தை மனிதனாகவே கருதி இக்கதையை எம்.ஏ.சுசீலா எழுதியிருக்கிறார்.
  • மாலதி என்கிற பெண்ணுக்கு நீண்ட நாள்களாகக் குழந்தை இல்லை. அந்தப் பெண்ணின் கணவன் மறுமணம்செய்துகொள்கிறார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. மாலதிதான் அக்குழந்தைமீது முழு அன்பையும் செலுத்திப் பொறுப்புடன் வளர்க்கிறார். ஒருநாள் விக்கித்து அக்குழந்தை இறந்துவிடுகிறது. மாலதி அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோயில் கோயிலாக ஓடுகிறார். இறுதியில், பாசாண்டச் சாத்தன் எனும் தெய்வம் இந்தத் துயரத்தில் பங்கெடுக்கிறது. அவரே குழந்தையாக மாறுகிறார். பின்னாளில் சாத்தன் தேவந்தியைத் திருமணம் செய்துகொள்கிறார். எட்டாண்டுகள் அவர்களது இல்லறம் நீடிக்கிறது. பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்கிறார் சாத்தன். எட்டாண்டுகள் கழித்துச் சாத்தன் தன்னைத் தெய்வமாக வெளிப்படுத்திக் கொள்கிறார். ‘உலகத்தாருக்கு நான் தீர்த்தமாடச் சென்றிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, என் கோயிலுக்கு வா’ என்று தேவந்திக்குக் கூறிவிட்டுக் கணவன் என்கிற பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார் சாத்தன். தேவந்தி அதிர்ச்சி அடைகிறார். எட்டாண்டுக் கால கணவனின் நெருக்கமின்மைக்கு அன்றுதான் அந்தப் பெண்ணுக்குக் காரணம் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் இந்தக் கதையின் மீதுதான் எம்.ஏ.சுசீலா மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
  • தேவந்திக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பாசாண்டச் சாத்தன் தெய்வம் இல்லை; மனிதன்தான் என்கிறது புனைவு. மாலதி என்கிற பெண்ணால் தெய்வமாகக் கற்பிதம் செய்யப்பட்டவர். மூர்ச்சையாகியிருந்த குழந்தையையே மாலதி தூக்கிக்கொண்டு ஓடுகிறார்; அந்த ஓட்டத்திலேயே குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்திருக்க வேண்டும். மாலதியின் குழந்தை மீதான அதீத அன்பு, குழந்தை மீண்டும் உயிர்த்தெழுந்ததைச் சாத்தனின் செயலாகக் கருதிக்கொள்கிறது. இளம் வயதிலிருந்தே கடவுளின் பிள்ளையாகவே மாலதியால் சாத்தன் வளர்க்கப்படுகிறார். யதார்த்தத்துக்கும் மாயத்துக்கும் இடையில் வளர்ந்த சாத்தன், ஒரு கட்டத்தில் மாலதி கூறுவதை உண்மையென நம்பத் தொடங்குகிறார். தன்னைக் கடவுளாகவே கருதிக்கொள்கிறார். ‘கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ! அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்!’ என்று தேவந்தியிடம் கூறுகிறார் சாத்தன்.
  • எம்.ஏ.சுசீலா இந்த இடத்தில் மரபான வாசிப்பின் மீது குறுக்கீட்டை நிகழ்த்தியிருக்கிறார். பாசாண்டச் சாத்தன் மீது இளங்கோவடிகள் போர்த்தியிருந்த அமானுஷ்யப் போர்வையை எம்.ஏ.சுசீலா விலக்கிப் பார்த்திருக்கிறார். மனித மனத்தின் பித்துநிலையால் தெய்வமாகக் கட்டமைக்கப்பட்டவர் சாத்தன். தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்பட்டதால் தன்னைத் தெய்வமாக உணர்ந்தவர் அவர். மாலதியின் அதீத அன்புதான் அவரைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது என்பதைச் சாத்தன் புரிந்துகொள்ளவே இல்லை. பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்த பிறகு, தேவந்தியை அப்படியே விட்டுவிட்டு யாத்திரைக்குப் புறப்பட்டுவிடுகிறார். தனக்கென்று ஒரு மனம் இருப்பதையும் அதற்கும் உணர்வு உண்டு என்பதையும் கடவுளாகத் தன்னைக் கருதிக்கொண்ட பாசாண்டச் சாத்தனுக்கு கடைசிவரை தெரியவில்லை என்பதை கண்ணகியிடம் தேவந்தி கூறுகிறார். இதனைப் பற்றி அவனிடம் கேட்பதற்காகவாவது அவனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று புனைவை முடிக்கிறார் எம்.ஏ.சுசீலா.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories