TNPSC Thervupettagam

தேவைதானா இத்தனை செலவுகள்?

June 26 , 2019 2012 days 1094 0
  • இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. சுமார் 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் பல சவால்கள், எதிர்பார்ப்புகள், அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எந்த அவசியத் தேவையையும் உடனடியாக மாநிலங்களும் சரி, மத்திய அரசும் சரி முழுமையாகச்  செயல்படுத்தி, மக்களின் முழுத் திருப்தியையும் பெறுவது மிகவும் கடினம்.
மக்களாட்சி  
  • மக்கள் ஆட்சி மலர்ந்து, நாம் 72-ஆம் ஆண்டில் இருக்கிறோம்.  இன்று வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அரசியல் கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாப் பிரச்னைகளையும் அந்தப் பகுதி மக்களின் தேவைகளையும் அந்த அரசியல் கட்சிகள் அணுகும் முறைகள் ஒன்றாகவே உள்ளன.
  • ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், மாநிலங்களுக்கும், அடிப்படைத் தேவைகள் ஒரே மாதிரிதான் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்; விவசாயத்திற்குத் தேவையான பாசன நீர்; வீட்டு வசதி; மருத்துவம்; கல்வி; பல்கலைக்கழக ஆராய்ச்சி வசதிகள்; தரமான உணவு உற்பத்தி; குறைந்த நீரில் உற்பத்தியாகும் நல்ல இயற்கை விவசாய உணவுப் பொருள்கள்;
  • குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான தரமான உயிர் காக்கும் மருந்துகள்; நல்ல தொழில்நுட்பத்துடன் கூடிய தரமான மருத்துவம்; தொழில் முன்னேற்றம்; வேலைவாய்ப்பு; கிராமப்புற மக்களுக்கும், நகர்ப்புற மக்களுக்கும் தேவையான சம வசதி வாய்ப்புகள், போக்குவரத்து வசதி; பாதுகாப்பான சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை; அதிக தாமதமின்றி கிடைக்கும் நீதி; ஊழலில்லாத திறமையான நிர்வாகம்; - இவை அனைத்தும் நம் நாட்டுக்கும், மக்களுக்கும் இன்றியமையாதவை.
வரிப் பணம்
  • மக்களின் வரிப் பணத்தை வீணாக்காமல், தேவையின்றி எல்லாம் இலவசம் என்று இல்லாத அரசியல் பார்வை நமது கட்சிகளுக்கு அவசியம். இதனால், வளர்ச்சிப் பணிகள் தடைபட்டு தொழில் முன்னேற்றம் முடங்கி விடுகிறது என்பதையும், வேலைவாய்ப்பில் அதுவே தடைக்கு காரணமாகிறது என்பதையும் யாருமே புரிந்துகொள்வதாக இல்லை. லட்சியங்கள், கொள்கைகள், திட்டங்கள் கொண்ட அரசியல் கட்சிகள்தான் இந்தியாவின் இன்றியமையாத தேவை. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிப்பது என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமோ, கொள்கையோ, திட்டமோ இல்லாத போக்கு ஏற்பட்டுள்ளதோ என்கிற அச்சம் மேலிடுகிறது. அன்றாடம் போராட்டங்கள், ஊர்வலங்கள், வெளிநடப்புகள், கருப்புக் கொடிகள், கொடும்பாவி எரிப்புகள், அருவருப்பூட்டும் சுவரொட்டிகள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபடத்தான் வேண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
  • ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைகள் மூலம் நடக்க வேண்டுமே தவிர, தெருவில் இறங்கித் தொடர்ந்து போராடுவதன் மூலம் நடப்பது மிகப் பெரிய முரண்.
கட்சிகள்
  • வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களுக்கும் அங்கு நடைபெறும் அரசியல் நடைமுறைகளைக் கவனிப்பவர்களுக்கும் ஒன்று தெளிவாக விளங்கும். இந்தியாவில் இருப்பது போன்ற கட்சிகள் எந்த நாட்டிலும் இல்லை.
  • எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல், இங்கே இருப்பதுபோல, தனி நபர்களையும், குடும்பங்களையும், ஜாதியையும் முன்னிறுத்தி அரசியல் நடத்தும் போக்கு இந்தியாவில்தான் காணப்படுகிறது. கலாசார சங்கங்கள், கலாசார மையங்கள், ஒவ்வொரு இன மக்களுக்கும் இருக்கும். ஆனால், இத்தனை கட்சிகள் எங்கும் இல்லை.
  • இத்தனை அரசியல் கட்சிகள் தேவையா என்பதைவிட முக்கியமானது, ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தனித் தனி கொடிகள் தேவையா என்கிற கேள்வி. உலகில் எந்த நாட்டிலும் அரசியல் கட்சிகளுக்கு என்று தனித்தனி கொடிகள் கிடையாது. அமெரிக்காவையே எடுத்துக் கொண்டால், இரு முக்கிய கட்சிகள், ஜனநாயகக் கட்சியும் குடியரசு கட்சியும். இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தனித்தனி கொடிகள் உள்ளதா என்றால் கிடையாது. சின்னம் உண்டு, கொடி கிடையாது.
அமெரிக்காவில்
  • அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும்போது மாநிலங்களுக்கும் சரி, மத்திய அரசின் நாடாளுமன்ற செனட் சபை, மக்களின் காங்கிரஸ் சபை போன்ற அவைகளுக்கும் சரி, தேர்தல்களில் பிரசாரம் நடைபெறும்போது நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் கொடியை முன்வைத்துத்தான் பொதுக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், பொது விவாதக் கூட்டங்களில் பேசுவார்களே தவிர, ஒரு கட்சிக்குக்கூட எந்தக் கொடியும் இல்லை.
  • நம் நாட்டில் பொது இடங்களில், தெரு முச்சந்திகளில், மாநிலப் பாதைகளின் நெடுஞ்சாலைகளின் நடுவில் இருக்கும் சுற்று வளையங்களில் எதற்காக இவ்வளவு கொடிகள் பறக்க வேண்டும்? அவற்றில் ஒரு தேசியக் கொடியைக்கூட காண முடிவதில்லையே!
  • 1981-இல் வெளிவந்த இயக்குநர் கே. பாலசந்தரின் தண்ணீர்... தண்ணீர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அந்த வசனங்கள் இன்றளவும் இந்தியாவைப் பொருத்தவரை உண்மை. அடேங்கப்பா, இத்தனை சின்ன கிராமத்துக்கு இத்தனை கொடிகளா? மரம் தாங்குமா? என்கிற கேள்விக்கு, அதான் மரம் பட்டுக் கிடக்கு! என்று நறுக்கென்று நாலே வரியில் இந்திய எதார்த்த நிலைமையை அந்தத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கும். இன்றைய நவீன ஊடக தொலைத்தொடர்பு வந்த பின்பு அரசியலில் கட் -அவுட்கள், சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள் - இவையெல்லாம் தேவைதானா? நல்ல வேளையாக, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால், தேர்தலின்போது இவை அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றுக்கு ஏன் இன்றும் நிரந்தரத் தடை விதிக்காமல் இருக்கிறோம் என்றும் தெரியவில்லை.
  • சுதந்திரம் பெறுவதற்கு முன்பு என்னென்ன வழிமுறைகளில் இந்திய மக்கள் ஈடுபட்டுப் போராடினார்களோ - இன்றும் அதே உண்ணாவிரதம், ஊர்வலம், போராட்டம், உருவ பொம்மை எரிப்பு, சட்டம் மறுப்பு முதலானவற்றில் எல்லாம் ஈடுபடுவது எப்படி சரியாக இருக்கும். தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவது என்பது நமது மக்களாட்சி முறையும், ஜனநாயக அமைப்புக்கும் சரியாகச் செயல்படவில்லை என்பதைத்தானே எடுத்தியம்புகின்றன.
  • இந்தியாவில் பல ஜனநாயக அமைப்புகளில் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கிராமப் பஞ்சாயத்துகளில் இருந்து, நகராட்சி, சட்டப்பேரவை, மக்களவை என்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்க அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நிர்வாக அமைப்பில் மக்கள் தொடர்புகொள்ளப் பல வாய்ப்புகள் மற்றும் எந்த முடிவின் மீதும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் இருக்கும்போது, இவ்வளவு போராட்ட ஆர்ப்பாட்டங்கள் நம் நாட்டுக்குத் தேவைதானா? இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் 72 ஆண்டுகளாகியும் ஏன் சாத்தியப்படவில்லை என்பது பொது விவாதமாக வேண்டும். சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் சின்னங்களை விளம்பரப்படுத்தலாம்.
கொள்கைகள்
  • அவர்களது கொள்கைகள் மற்றும் முன்னேற்றத் திட்டங்களை விளம்பரப்படுத்தலாம். விவாதம் செய்யலாம். கூட்டங்கள் வழியாக மக்களிடம் எடுத்துச் செல்லலாம். இந்த நான்கு மாதங்கள் தவிர, நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்களுக்கு அரசியல் கட்சிகள் பேராட்டங்களில் ஈடுபடாமல் அவர்களின் ஆலோசனைகளை வழங்கலாம். திட்டங்களில் தவறு என்று தோன்றினால், அவற்றை அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயக அமைப்புகளில் மட்டுமே எடுத்துப் பேசலாம் என்கிற கட்டாயம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி விழும்.
  • மக்களின் உயிருக்கும், வாழ்வுக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படும்போது அல்லது இயற்கைப் பேரிடர்களின்போது, எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் பிரச்னைகளை உணர்த்த வாய்ப்பு அளித்தாக வேண்டும். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் ஒரு மக்கள் ஆலோசனை மன்றம் ஏற்படுத்தி அவர்களிடம் முறையீடு செய்வதன் மூலம் , மக்களின் மறுப்பு, ஏற்புகளைப் பதிவு செய்யலாம்.
  • இத்தகைய மக்கள் ஆலோசனை மன்றங்கள் சரியான வழிகாட்டும் பரிந்துரைகளை அரசுக்குச் சொல்லலாம். நடுநிலை மாறாமல், நாடு, மக்கள் முன்னேற்றம், எதிர்கால வளர்ச்சி ஆகிய அடிப்படைகளைக் கொண்டு இந்த மக்கள் ஆலோசனை மன்றம், ஒவ்வொரு துறையில் இருக்கும் நிபுணர்களை, அனுபவமிக்கவர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெறலாம்.
எதிர்காலப் பிரச்சினைகள்
  • எதிர்ப்பு அரசியலும், எதிர்க்கட்சி மனோபாவமும்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைகளாகத் தொடர்கின்றன. மக்களின் அன்றாட எதிர்காலப் பிரச்னைகளில், அவர்களின் தேவைகளில், எதிர்காலத் திட்டங்களுக்காகவும் தேர்தல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அரசியல் வேறுபாடுகள், போட்டிகள், தேர்தல் முடிந்து, ஓர் அரசு அமைந்தவுடன் எதிரி அரசியலைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக நம் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்படும் போக்கு ஏற்படாமல் இருப்பது நமது மிகப் பெரிய பின்னடைவு. எண்ணிக்கை பலம் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் பலவீனம் அல்ல. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் தரத்தின் அடிப்படையில்தான் பலமும் பலவீனமும் தீர்மானிக்கப்படுகின்றன.
  • எதிர்க்கட்சியினருக்கு அவர்களது கருத்துகளை எடுத்துரைக்க மக்களவையில் சம வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்திருக்கும் வாக்குறுதி சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் பொறுப்புணர்ந்து, ஜனநாயக அமைப்புகளின் மூலம் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • ஜனநாயக அமைப்புகளை முறையாக பலப்படுத்துவதும், வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம். அதேபோல, அரசியல் கட்சிகளுக்கு தனித்தனி கொடிகல் தடை செய்யப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளப்படும் தேவையற்ற போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான, வளர்ச்சிக் கண்ணோட்டத்துடனான அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (26-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories