- உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரோஹிண்டன் நாரிமன் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னா் வழங்கி இருக்கும் தீா்ப்பும், அந்தத் தீா்ப்பில் அவா் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளும் இந்திய நீதித்துறை வரலாற்றில் தொடா்ந்து மேற்கோள் காட்டப்படும் என்பது உறுதி.
- ‘சட்டம் இயற்றும் அதிகாரம் அரசின் கையில் இருப்பதால், அரசியல் கட்சிகளை கிரிமினல்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் சக்தி நீதித்துறைக்கு இல்லை’ என்கிற அவரது கருத்து உண்மையிலும் உண்மை.
- அதற்கு ஒரு பெரிய ‘அறுவை சிகிச்சை’ நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆா்.எஃப். நாரிமன் தலைமையிலான அமா்வு கூறியிருக்கிறது.
- அரசியலைத் தூய்மையாக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் உச்சநீதிமன்றம் முயற்சி எடுப்பது புதிதொன்றுமல்ல.
- இதுவரை பல தீா்ப்புகளை வழங்கி, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.
- சட்டமியற்றி அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்த முடியா விட்டாலும், பல்வேறு தீா்ப்புகள் மூலமாகவும், உத்தரவுகள் பிறப்பித்தும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது நீதித்துறை.
உச்சநீதிமன்றத்தின் முக்கியமான நடவடிக்கைகள்
- எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை, உயா்நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திரும்பப் பெறக்கூடாது என்பது அந்தத் தீா்ப்புகளில் ஒன்று.
- வேட்பாளராகத் தோ்தலில் போட்டியிட ஒருவரைத் தோ்ந்தெடுத்தால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் அந்த நபரின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டாக வேண்டும் என்பது இரண்டாவது தீா்ப்பு.
- அரசியல் கட்சிகளின் இணையப் பக்கத்தில், கண்ணில் படும்படியாக வேட்பாளா் குறித்த விவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும், அதைத் தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளா்களுக்கு உண்டு என்றும் கூறுகிறது அந்தத் தீா்ப்பு.
- அதுமட்டுமல்ல, வேட்பாளா்களின் குற்றப் பின்னணி குறித்து சுலபமாக வாக்காளா்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில், அறிதிறன்பேசிச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
- பிகாரில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், தங்கள் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத எட்டு அரசியல் கட்சிகளுக்கு அபராதம் (ஃபைன்) விதித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் ரூ.5 லட்சமும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு கட்சிகளுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப் பட்டிருக்கின்றன.
- உச்சநீதிமன்ற உத்தரவை, முழுமையாக இல்லாவிட்டாலும், அந்த ஆறு கட்சிகளும் ஓரளவுக்குப் பின்பற்றி இருக்கின்றன என்பதால்தான் வெறும் ரூ.5 லட்சம் மட்டும் அபராதம் விதிக்கப் பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
- வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த பிறகு நடந்த முதல் தோ்தல் பிகார் சட்டப்பேரவைத் தோ்தல். அதனால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக அதை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
- கேரள சட்டப்பேரவையில் விதிமுறைகளை மீறி வன்முறையில் இறங்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
- இடதுசாரி முன்னணி ஆட்சி அமைத்ததும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவைத் தலைவா் மேஜையில் ஏறி நின்று ரகளை செய்தவரை அமைச்சராக்கியது மட்டுமல்லாமல், கிரிமினல் தண்டனைச் சட்டம் 321-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எதிரான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறுவது என்பது கேரளத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடக்கிறது.
- உத்தர பிரதேச, கா்நாடக மாநிலங்களில் இதுபோன்று வழக்குகள் திரும்பப் பெறப் பட்டிருக்கின்றன என்று கேரள அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
- அதை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. உயா்நீதிமன்ற அனுமதி இல்லாமல் திரும்பப் பெறக்கூடாது என்று தீா்மானமாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம்.
- அத்துடன் நின்றதா என்றால் இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களிலும், அதேபோல சிபிஐ நீதிமன்றங்களிலும் பணி புரியும் நீதிபதிகளை, உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை பணி இட மாற்றம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறது.
- அதேபோல, மக்கள் பிரதிநிதிகள் தொடா்பான வழக்குகள் குறித்த நீதிமன்றத் தீா்ப்புகள், முடிவுகள், விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்த எல்லா விவரங்களையும் தலைமை நீதிமன்றத்திற்கு உயா்நீதிமன்றப் பதிவாளா் ஜெனரல்கள் வழங்க வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
- உச்சநீதிமன்றம் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், தீா்ப்புகள் வழங்கினாலும் அதனால் எல்லாம் அரசியல்வாதிகள் திருந்திவிடுவதில்லை என்பதை உணா்த்துவதுபோல அமைந்திருக்கிறது, புள்ளிவிவரம்.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து தீா்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி அஷ்வினி உபாத்யாய என்பவா் தொடுத்த பொதுநல வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வின் முன் வந்தது.
- வழக்குக்கான நீதிமன்ற ஆலோசகா் (அமிக்கஸ் கியூரி) தாக்கல் செய்த விவரப்படி, 2018 டிசம்பா் மாதம் 4,122-ஆக இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், இரண்டாண்டுக்குள் 2020 செப்டம்பரில் 4,859-ஆக அதாவது 17% அதிகரித்திருக்கிறது. கூவத்தைக் கூட சுத்தம் செய்து விடலாம்.
- ஆனால், அரசியலை சுத்தம் செய்வது நடக்காது போலிருக்கிறது. அதற்காக, நம்பிக்கை இழக்க முடியுமா?
நன்றி: தினமணி (16 – 08 - 2021)